241-250

241. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி!-கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,
5
வேழ வெண் பூ விரிவன பலவுடன்,
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உற,
10
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து,
பல் இதழ் உண்கண் கலுழ,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?

தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரைப் பெருமருதனார்

242. முல்லை
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,
5
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்-
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,
காமர் நெஞ்சமொடு அகலா,
10
தேடூஉ நின்ற இரலை ஏறே.

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

243. பாலை
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,
5
''கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!'' என,
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய் உற இருந்து மேவர நுவல,
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
10
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்,
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.-காமக்கணிப் பசலையார்

244. குறிஞ்சி
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
5
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ-
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்
தணியுமாறு இது'' என உரைத்தல் ஒன்றோ-
செய்யாய்: ஆதலின் கொடியை-தோழி!-
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
10
செயலை அம் தளிர் அன்ன, என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.

அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது.-கூற்றங்குமரனார்

245. நெய்தல்
நகையாகின்றே-தோழி!-''தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
5
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல்,
தெளி தீம் கிளவி! யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?'' என,
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
10
தான் அணங்குற்றமை கூறி, கானல்
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.-அல்லங்கீரனார்

246. பாலை
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
5
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி,
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,
வருவர் வாழி-தோழி!-புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
10
''வருதும்'' என்ற பருவமோ இதுவே?

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-காப்பியஞ் சேந்தனார்

247. குறிஞ்சி
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்
5
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே!

''நீட்டியாமை வரை'' எனத் தோழி சொல்லியது.-பரணர்

248. முல்லை
''சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம்'' என்றனர்மன்-இனி,
5
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே!

பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்

249. நெய்தல்
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,
5
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,
10
அம்பல் மூதூர் அலர் எழ,
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?

வரைவிடை மெலிந்தது.-உலோச்சனார்

250. மருதம்
நகுகம் வாராய்-பாண!-பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
5
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
10
''யாரையோ?'' என்று இகந்து நின்றதுவே!

புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்