| அகலங் காடி அசைநிழற் குவித்த |
| பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை |
| தூங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும் |
10 | மருங்கூர்ப் பட்டினத்து அன்னவிவள் |
| நெருங்கேர் எல்வளை ஓடுவ கண்டே. |
(சொ - ள்.) கொண்க கதிர் கால் வெம்பக் கல் காய் ஞாயிற்று - கொண்கனே! கதிர் எறித்தலானே மக்கள் முதலாயினோர் கால்கள் வெம்பும்படி கீழைத்திசைமலையிலே தோன்றிக் காய்கின்ற ஞாயிற்றினுடைய இயக்கம் பொருந்திய பகற் பொழுதிலே; திருவுடை வியன் நகர் வரு விருந்து அயர்மார் - செல்வம் உடைய அகன்ற நகரின் கண்ணே வருகின்ற விருந்துகளைப் பாதுகாக்கும்படி; பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த கொக்கு உதிர் நிமிரல் மாந்தி - பொன்னாலாகிய தொடியையுடைய மகளிர் சமைத்து நிவேதித்து முற்றத்திலே பலியாகப் போட்ட கொக்கினது உகிர்போன்ற சோற்றைத் தின்று; எல்பட அகல் அங்காடி அசை நிழல் குவித்த பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை - பொழுதுபடும் அளவில் அகன்ற மீன்கடையில் அசைகின்ற நிழலிலே குவித்த பசிய இறாமீனைக் கவர்ந்துண்ட பசுமையாகிய கண்ணையுடைய காக்கை; தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் மருங்கூர்ப் பட்டினத்து அன்ன இவள் - ஆங்கு வினையின்றிக் காற்றாலசைகின்ற தோணியிலே பிணித்த பாய்மரத்திற் சென்று தங்காநிற்கும் மருங்கூர்ப்பட்டினம் போன்ற இவளுடைய; நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டு - நெருங்கிய அழகும் ஒளியும் பொருந்திய வளைகள் கழல்வனவற்றைக் கண்டு; யாய் செறித்தனள் - அன்னை இவ் வேறுபாடு முருகு அணங்கால் ஆகியது போலுமென உட்கொண்டு, இல்லின்கண்ணே செறித்துப் புறத்தேகவிடாது காவல் செய்வாளாயினள்; பல் பூங்கானல் பகல் குறி மரீஇச் செல்வல் - ஆதலின் இவள் வருதற்கியலாமையால் இல்வயிற் செறிப்பை நினக்கு உரைசெய்யும்படி கருதிய யான் இன்று பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையிலே பகற் பொழுதின்கண்ணே குறியிடத்து வந்து போகாநின்றேன்; எ - று.
(வி - ம்.)நிமிரல் - சோறு. நிழல் - அங்காடி. நிழல்; அருகிலுள்ள மரத்து நிழலுமாம்.
நின்னைப் பிரிதலால் உடம்பு வாடி வேறுபட்டு வளைகளுங் கழலாநின்றன என்பாள், வளையோடு என்றாள். அருகிலுள்ளாளென அவள் ஆற்றவேண்டி இவளெனச் சுட்டுப்பெயராற் கூறினாள். இனி இங்ஙனம் வாடாதபடி வரைந்துகொள்ளெனக் குறிப்பாற்கொள்ளக் கிடந்தமையின் வரைவுகடாவாயிற்று.