இறைச்சி :- பெண்புலி பசியுடையதென்றறிந்து ஆண்புலி களிற்றை அட்டுமுழங்குமென்றது, நின் காதலி வரைந்துகொள்ள விரும்புதலை அறிந்து நீ அயல்நாடு சென்று பகைவென்று பொருள் கொண்டு வலம்புரி முழங்க வருவாயாகவென்றதாம்.
மெய்ப்பாடு - பெருமிதம்.
பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) அருளாய் - அருள்செய்யாயே ஆகின்றனை என்று பொருள் கூறி அன்று அசையெனினுமாம்.
(383)
திணை : பாலை.
துறை : இஃது, உடன்போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
(து - ம்,) என்பது, தலைமகளை வைகிருளிலே கொண்டு தலைக்கழிந்து பரன் முரம்பாகிய பயனில் நெடுஞ்சுரஞ் செல்கின்ற தலைமகன் தன் நெஞ்சை நெருகி நெஞ்சமே! இம்மடவோளை வேங்கைமலர் உதிர்ந்து பரவ அதன்மீது அன்னப்பறவை நடந்தாற்போல நடக்க அதனை யாம் கண்டனம் இனி நீ காண்பாயாக வென்று மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஒன்றாத் தமரினும்" என்னும் நுாற்பாவின்கண் "அப்பாற் பட்ட வொருதிறத் தானும்" (தொல். அகத். 41) என்பதனாற் கொள்க.
| 1 வண்புறப் புறவின் செங்கால் சேவல் |
| களரி ஓங்கிய கவைமுட் கள்ளி |
| முளரியம் குடம்பை ஈன்றிளைப் பட்ட |
| வயவுநடைப் பேடை உணீஇய மன்னர் |
5 | முனைகவர் முதுபாழ் உகுநெற் பெறூஉம் |
| மாணில் சேய்நாட்டு அதரிடை மலர்ந்த |
| நன்னாள் வேங்கைப் பொன்மருள் புதுப்பூப் |
| பரந்தன நடக்கயாம் கண்டனம் மாதோ |
| காணினி வாழியெம் நெஞ்சே நாண்விட்டு |
10 | அருந்துயர் உழந்த காலை |
| மருந்தெனப் படூஉம் மடவோ ளையே. |
(பாடம்) 1. | பண்புறப் புறவு. |