(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைமகன் தலைமகளது ஊடல் தீர்ப்பான் விறலியை விடுத்தலும் அவளை நோக்கிய தோழி, எங்கள் இறைவனுக்கு இன்னுமொரு பரத்தையை நாளைக் கொணர்ந்து கொடுக்க உடன்பட்டு வந்த விறலி! நின் பயனற்ற சொல்லை அப் பரத்தையரின் தாயர்பாலுங் கூறி அவரையும் முயங்க விடுப்பாய்கொலா'மென்று வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.)இதற்குப், "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச்சொல்லிய குறைவினை எதிரும்" (தொல். கற். 9) எனவரும் விதிகொள்க.
துறை :(2) விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, வெளிப்படை, (உரை இரண்டற்குமொக்கும்.)
(இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல். கற். 10) என்னும் நூற்பாவின்கண் 'இவற்றொடு பிறவும்' என்பதனாற் கொள்க.
| விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக் |
| களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க |
| உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர் |
| வாளை பிறழும் ஊரற்கு நாளை |
5 | மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே |
| தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி |
| உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன் |
| சொல்லலை கொல்லோ நீயே வல்லைக் |
| கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை |
10 | வள்ளுயிர்த் தண்ணுமை போல |
| உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே. |