பக்கம் எண் :


335


    
(தலைவன் மாலைக்காலத்தில் வருவானென்று தோழி தலைவிக்குக்கூறியது.)
 177.   
கடல்பா டவிந்து கானன் மயங்கித் 
    
துறைநீ ரிருங்கழி புல்லென் றன்றே 
    
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை 
    
அன்றிலும் பையென நரலு மின்றவர் 
5
வருவர்கொல் வாழி தோழி நாந்தப் 
    
புலப்பினும் பிரிவாங் கஞ்சித் 
    
தணப்பருங் காமந் தண்டி யோரே. 

என்பது கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது.

உலோச்சன் (பி-ம். உலோகச்சனார்.)

    (பி-ம்) 3. ‘மன்றலம் பெண்ணை’, ‘மன்றற் பெண்ணை’, ‘மன்றப்பெண்ணை’; 5.‘தோழி நாநகப்’.

    (ப-ரை.) தோழி -, கடல்பாடு அவிந்து - கடலானதுஒலி அடங்க, கானல் மயங்கி - கடற்கரைச் சோலை மயக்கத்தையுடையதாக, துறை நீர் இரு கழி - துறையையும்நீரையும் உடைய கரிய கழி, புல்லென்றன்று - பூக்கள்கூம்பியதனால் பொலிவழிந்தது; மன்றம் அம் பெண்ணை -மன்றத்தின் கண் உள்ள அழகிய பனைமரத்தினது, மடல் சேர்வாழ்க்கை - மடலின் கண்ணே பொருந்திய வாழ்க்கையையுடைய, அன்றிலும் - அன்றிற் பறவையும், பையென - மெல்ல, நரலும் - கூவும்; நாம் தம் புலப்பினும் - முன்புநாம் தம்மைப் புலந்தாலும், பிரிவு ஆங்கு அஞ்சி - அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி, தணப்பு அரு காமம் - நீங்குதற்கரிய காம இன்பத்தை, தண்டியோர் - அலைத்தும்பெற்றவராகிய, அவர் - தலைவர், இன்று--, வருவர்.

    (முடிபு) தோழி, கழி புல்லென்றன்று; அன்றிலும் நரலும்; தண்டியோர் இன்று வருவர்.

    (கருத்து) தலைவர் இன்று வருவர்.

    (வி-ரை.) கடல் பாடவிதல் முதலியன இரவு வந்ததைப் புலப்படுத்தின. கடல் ஒலியடங்குதலாவது, வலைஞரும் கலவரும் தொழி லொடுங்கிஅகஞ் சேர்ந்தமையின் அவர்களால் உண்டாகும் ஆர்ப்பு அடங்குதல்.இருளினால் கானல் மயங்கியது. அவிந்து, மயங்கி: எச்சத் திரிபுகள்.

    அன்றில் பெரும்பாலும் பனைமடலிலே வாழ்வது. வருவர் கொல்:கொல், அசை நிலை (புறநா 98:18, உரை); “வருவர் கொல்”         (கலி. 11:5)