பக்கம் எண் :


394


     
“குறும்பொறை மருங்கிற் கோட்சுர நீந்தி 
     
 நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர் 
     
 செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி”         (அகநா. 271:5-7)  

என்பவாதலின், அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காயெனச் சிறப்பித்தான். தருமத்தின் பொருட்டு வளர்த்த நெல்லிமரத்தின் காயெனலும்ஒன்று. அம்: சாரியையுமாம்.

     கறங்கும் - கீழே உதிர்ந்து ஒலிக்குமென்பதும் ஆம். பாலை நிலத்தில் நெல்லிக்காயுதிர்தல்,

     
“பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி 
    
 மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப 
    
 உதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன்”              (அகநா. 5:9-11)  

என்பதனாலும் விளங்கும்.

    யாமே: ஏ அசை நிலை. பன்மை, பொருண்முற்றிய பெருமிதந்தோன்ற நின்றது.

    ‘இறப்பருங்குன்றத்தை அரிதிற் கடந்த யாம் அங்ஙனம் கடத்தற்குக்காரணமான பொருண் முயற்சிக்குரிய பலவற்றையும் உள்ளலம்’ என்றுகூறினான்.

    வெட்சி காட்டில் தழைத்து வளர்வது; “வெட்சிக் கானத்து”(புறநா. 202:1); முட்சினை யென்ற பாடத்திற்கு, இதழ் முள்ளைப் போன்றஅரும்பையுடைய வெனப் பொருள் கொள்க; “இதன்முள் ளொப்பினமுகைமுதிர் வெட்சி” (அகநா. 133:14); சினை - அரும்பு. மகளிர் வெட்சிமலரைப் புனைதல் வழக்கம்;

     
“துணையோ ராய்ந்த விணையீ ரோதிச் 
    
 செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு”             (முருகு. 20-21.) 

    மடந்தை: இங்கே பருவங் குறியாது தலைவியென்னுந் துணையாய்நின்றது. நட்பு- கூட்டம். ஏகாரம் பிரிநிலை. மையிருங் கூந்தலென்றஅடை அக்கூந்தற்பாயலிற்றுயிலும் நிலையையே நினைந்திருத்தேனென்றகருத்தைப் புலப்படுத்தியது. நட்பே உள்ளினமென ஒரு சொல் வருவித்துமுடிக்க.

    ஒப்புமைப் பகுதி 1. நெல்லியம்பசுங்காய்: “நெல்லிப் பைங்காய்”, “புன்காய்நெல்லிக், கோடை யுதிர்த்த குவிகட் பசுங்காய்”, “புல்லிலை நெல்லிப்புகரில் பசுங்காய்”, “நெல்லிப் பைங்காய்” (அகநா. 54:15, 315: 10-11, 363:6, 399:14.)

    7. மையிருங் கூந்தல்: குறுந். 199:5, ஒப்பு.

(209)
  
(தலைவியைப் பிரிந்து சென்ற மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்தநன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.)