பக்கம் எண் :


502


    வாளியன்ன கண்ணென்றான், அது தன்னை வருத்தியதை நினைந்து. நாறிருங் கூந்தற் கொடிச்சி யென்றான், முன் அவளுடன் அளவளாவிய வனாதலால்.

    கொடிச்சி - குறிஞ்சி நில மகள். தோள் தீண்டல் - இடக்கரடக்கு.

    மேற்கோளாட்சி 2. வீளை - சீழ்க்கை (சீவக. 447, ந.)

    மு. கழறிய பாங்கற்குக் கூறும் தலைவன், ‘இவனான் இக்குறை முடியாது; நெருநல் இடந்தலைப்பாட்டிற் கூடியாங்குக் கூடுவல்; அது கூடுங்கொல்!' என்று கூறுவான், அற்றைஞான்று மெய்தொட்டுப் பயின்றதே கூறியது (தொல். களவு. 11, இளம், ந.) தலைவன் நீடு நினைந்திரங்கியது (நம்பி. 127.)

    ஒப்புமைப் பகுதி 2. வீளை; குறிஞ்சிப். 161; நற். 265:3; அகநா. 33:5, 182:4, 274:1; கைந்நிலை. 13; சீவக. 120.3. நனந்தலைக் கானம்: குறுந். 297:5.

     4-5. வேடர் மானை எய்தல்: "எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக், கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ, என்கின்ற பாவனைசெ யீங்கோயே தூங்கெயில்கள், சென்றன்று வென்றான் சிலம்பு" (திருவீங்கோய். 12); "கானமர் குன்றர் செவியுற வாங்கு கணை துணையாம், மானமர் நோக்கியர் நோக்கென மானற்றொடைமடக்கும்" (திருச்சிற். 274.)

     வேடர் கலையை எய்தல்: "அள்ள லாடிய புள்ளி வரிக்கலை, வீளை யம்பின் வில்லோர் பெருமகன்" (நற். 265:2-3.)

     6. செங்கோல் வாளி: குறுந். 1:2, ஒப்பு.

     6-7. தலைவியின் கண்ணுக்குக் குருதியொடு பறித்த அம்பு: "ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த, பகழி யன்ன சேயரி மழைக்கண்", "கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப், பச்சூன் பெய்த பகழி போலச், சேயரி பரந்த வாயிழை மழைக்கண்", (நற். 13:3-4, 75:6-8); "நிறத்தெறிந்து பறித்த நிணங்கொள்வேற், றிறத்தை வௌவிய சேயரிக் கண்ணினாள்" (சீவக. 993.)

     8. கூந்தலின் மணம்: குறுந். 2:4-5, ஒப்பு.

     நாறிருங் கூந்தல்: புறநா. 113:9.

     கொடிச்சி: குறுந். 214:3, 291:2, 335:7, 360:6.

     1-8. தோள் தீண்டல்: குறுந். 50:5, ஒப்பு. 193: 5, ஒப்பு.

     தோள் தீண்டற் கரிது: குறுந். 100:7.

(272)
  
(தலைவன் பிரிவான் என எண்ணிக் கவன்ற தலைவியை நோக்கி,"தலைவன் பிரிய எண்ணினும் நம் நிலை நோக்கிச் செலவு தவிர்வான்" என்று தோழி கூறித் துணிவை உண்டாக்கியது.)