(கருத்து) தலைவன் இருக்குமிடத்துக்கு யான் போவோமாக.
(வி-ரை.) தலைவன் குறியிடத்து உரிய காலத்தே வாராமையின்,தோழி, "அவனது இயல்பும் நம் இயல்பும் ஒத்தனவல்ல" எனக் கூறிஇயற்பழித்தாள். அப்பொழுது தலைவன் வந்து சிறைப்புறத்தே நின்றான்.அதனை அறிந்த தலைவி, "அவர் வாராவிடினும் நாமேனும் அவர் உள்ளஇடத்திற்கு நடந்து செல்வேமாக" என்று கூறித் தன் ஆதரவைப்புலப்படுத்தினாள்.
அமர்த்தல் - மேவுதல் (புறநா. 117:4, உரை.) எடுப்ப - மறைந்திருந்த புதல்களிலிருந்து கொம்பு முதலியன ஊதுதலாலும் பிறவாற்றாலும் எழுப்ப.
இளையர் - சிறாருமாம். வல்லியாங்கு மருவுதலென்று தொழிற்பெயரின் முதனிலையோடு இயைக்க.
ஆமானின் குழவி தன் இயல்புக்கு ஒவ்வாத குடியிற்பட்டாலும்அவர்களோடு மருவி அவரது வாழ்க்கையிலே வன்மைபெற்றது போல்தலைவர் நம் இயல்புக்கு ஒவ்வாரெனினும் அவரோடு பழகி அவருடையஇயல்புகளைப் பெற்று வாழவேண்டுமென உவமையை விரித்துக் கொள்க.
வேறுபட்ட இயல்புடையாரும் பழக்கத்தினால் இனியராதலை,
| "பழகிய பகையும் பிரிவின் னாதே" (நற். 108:6) |
என்பது புலப்படுத்தும்.
தலைவன் வரவறிந்த தலைவி, ‘நடந்து செல்வாம்' என்று கூறினாள்,அது நேராதென்னும் கருத்துடையளாதலின்.
ஒப்புமைப் பகுதி 1. அமர்க்கணாமான்: நற். 165:1; புறநா. 117:4-5.
3. சிறுகுடி: குறுந். 184:2, ஒப்பு.
1-3. ஆமான்குழவி இனத்திற் றீர்ந்து அகப்படல்: "தொழுதி போகவலிந்தகப் பட்ட, மடநடை யாமான் கயமுனிக் குழவி" (மலைபடு.499-500.)
7. பி-ம். ஒல்லாங்கு: கலி. 3:11.
(322)
(தான் மேற்கொண்ட வினை முடிந்தவிடத்துத் தலைவன் பாகனைநோக்கி, "தலைவியைப் பிரிந்திருக்கும் நாள் நன்னாளன்று; பயனற்றது;ஆதலின் அவளை யடையும்படி விரைவில் தேர் விடுக" என்பது படச்சொல்லியது.) 323. | எல்லா மெவனோ பதடி வைகல் |
| பாணர் படுமலை பண்ணிய வெழாலின் |
| வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப் |
| பெய்த புலத்துப் பூத்த முல்லைப் |
5 | பசுமுகைத் தாது நாறு நறுநுதல் |
| அரிவை தோளிணைத் துஞ்சிக் |
| கழிந்த நாளிவண் வாழு நாளே. |
என்பது வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது.