(கருத்து) தலைவனை நலந்தாவெனக் கேட்டல் தக்கதன்று.
(வி-ரை.) மலர்மீது நின்று மீனை அருந்தலின் அம்மலர் சிதைந்தது. தண்ணந்துறைவன்: அம் சாரியை. ‘நம் நலம் தா' என்று தோழி கேட்டல்மரபு; "மாணலந் தாவென வகுத்தற் கண்ணும்" (தொல். கற்பு. 9) என்பதனாலும் இந்நூல் 236-ஆம் செய்யுளாலும் இது விளங்கும்.
இடுக்கண் அஞ்சித் தாவென் சொல்லினுமெனக் கூட்டிப் பொருள்கொண்டு, நமக்கு இடுக்கண் ஒன்று வருவதாயினும் அதற்கு அஞ்சிக்கொடுத்ததை மீட்டும் பெறல் இன்னாதென்ற கருத்தைக் கொள்க.
தலைவன் விரும்ப நாம் உடம்பட்டுக் கொடுத்த நலத்தை மீட்டும்கேட்டலினும், உயிரிழத்தல் நன்றென்றமையின் தலைவனைக் கடியற்கவென்பதை உணர்த்தினாள்.
(மேற்கோளாட்சி) மு. தோழி தலைவனைக் காய்தற்கண் தலைவி கூறியது;‘இது பிரித்தல்பற்றி வந்தது' (தொல். கற்பு. 6, இளம்.).
ஒப்புமைப் பகுதி 2. எக்கரில் நாரை இருத்தல்: "இனநாரை....எக்கர்மே லிறைகொள்ளு மிலங்குநீர்த் தண்சேர்ப்ப" (கலி. 126:3-5.)
1-2. மணல்மேட்டில் அடும்பங்கொடி படர்தல்: குறுந். 248:4-5.
2-3. எக்கர்த்துறை: குறுந். 53:5.
3-4. நலத்தைத் தாவென்றல்: குறுந். 236:2-6, ஒப்பு.
7. இன்னுயிர்: குறுந். 216:7, 334:5.
5-7. கொடுத்ததைத் திரும்பப் பெறாமை: "அலைகடல் கடையக் கண்டே னயனைந்து சிரமுங் கண்டேன், மலையிரு சிறகு கண்டேன் வாரிதி நன்னீர் கண்டேன், சிலைமதன் வடிவு கண்டேன், சிவன் சுத்தக்கழுத்துக் கண்டேன், குலவரி யிருகண் கண்டேன் கொடுத்ததை வாங்கக்காணேன்" (பழம் பாடல்.)
(349)
(தலைவன் பிரிந்தபின் வேறுபட்ட தலைவியை நோக்கி, "நாம்அவர் செல்லும்பொழுது போகற்கவெனத் தடுத்தேமேல் அவர் செல்லார்.அப்பொழுது உடம்பட்டு இப்பொழுது வருந்துதல் தக்கதன்று" என்றுதோழி கூறியது.) 350. | அம்ம வாழி தோழி முன்னின்று |
| பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமெனச் |
| சொல்லின மாயிற் செல்வர் கொல்லோ |
| ஆற்றய லிருந்த விருந்தோட் டஞ்சிறை |
5 | நெடுங்காற் கணந்து ளாளறி வுறீஇ |
| ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும் |
| மலையுடைக் கான நீந்தி |
| நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே. |
என்பது பிரிவுநேர்ந்த (பி-ம். சேர்ந்த) தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது.