தொடக்கம்   முகப்பு
11 - 20 வேழப்பத்து
11
மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி,
'நல்லன்' என்றும், யாமே;
'அல்லன்' என்னும், என் தட மென் தோளே.
பாணன் முதலாயினார்க்குத் தலைமகன் கொடுமை கூறி வாயில் மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு வாயில் நேர்வாள், சொல்லியது. 'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னால் புலப்படுதல் தகாது' என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். 1

 

12
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுகதில்ல, யாமே;
தோற்கதில்ல, என் தட மென் தோளே.
உழையர் நெருங்கிக் கூறிய திறமும் தனது ஆற்றாமையும் நினைந்து, வாயில் நேரக் கருதிய தலைமகள், 'பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான்' என்பது கேட்டு, பொறாளாய்க் கருத்து அழிந்து, தன்னுள்ளே சொல்லியது. 2

 

13
பரியுடை நல் மான் பொங்குஉளை அன்ன
அடைகரை வேழம் வெண் பூப் பகரும்,
தண் துறை ஊரன் பெண்டிர்,
துஞ்சு ஊர் யாமத்தும், துயில் அறியலரே.
வாயிலாய்ப் புக்கார்க்குத் தலைமகள், 'அவன் பெண்டிர் நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?' எனச் சொல்லி வாயில் மறுத்தது. 3
14
கொடிப் பூ வேழம் தீண்டி, அயல
வடிக்கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித் துறை ஊரன் மார்பே
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே.
தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, 'அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைந்து ஆற்றாயாகின்றது என்னை?' என்றாட்கு, அவன் கொடியனேஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து ’ஆதலால் காண்’ எனச் சொல்லியது. 4
15
மணல் ஆடு மலிர்நிறை விரும்பிய, ஒண் தழை
புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும், ஊரன் அல்லன்னே.
சேணிடைப் பிரிந்து வந்து உடன் உறைகின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினான் உணர்ந்து, தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, ' அவன் உடன்உறையவும் வேறுபடுகின்றது என்னை?' என்றட்கு அவள் சொல்லியது. 5
16
ஓங்கு பூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக் கஞல் ஊரனை உள்ளி,
பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே.
வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது. 6
17
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிது ஆகின்று, என் மடம் கெழு நெஞ்சே.
தலைமகன் பரத்தையிற் பிரிந்த வழி, 'இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7
18
இருஞ் சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்,
பொருந்து மலர் அன்ன என் கண் அழ,
பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே?
பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின் அவ் ஓழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. 8
19
எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை,
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்,
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி,
5
மாரி மலரின் கண் பனி உகுமே.
'பல் நாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளையாகிய நீ சில் நாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்கு, 'எதிர்ப்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது. 9
20
அறு சில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச் சினை சீக்கும்,
காம்பு கண்டன்ன தூம்புடை, வேழத்துத்
துறை நணி ஊரனை உள்ளி, என்
5
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே.
தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாராயினும், அவர் திறம் மறவாதொழியல் வேண்டும்' என்று முகம்புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் தலைமகள் சொல்லியது. 10
மேல்