தொடக்கம்   முகப்பு
111 - 120 தோழிக்குரைத்தபத்து
111
அம்ம வாழி, தோழி! பாணன்
சூழ் கழிமருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
5
அருந் தவம் முயறல் ஆற்றாதேமே?
'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள் வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 1
112
அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங் கழிச் சேர்ப்பன்
தான் வரக் காண்குவம் நாமே;
மறந்தோம் மன்ற, நாணுடை நெஞ்சே.
களவு நீடுவழி, 'வரையலன்கொல்?' என்று அஞ்சிய தோழிக்குத் தலைமகன் வரையும் திறம் தெளிக்க, தெளிந்த தலைமகள் சொல்லியது. 2
113
அம்ம வாழி, தோழி! நென்னல்
ஓங்குதிரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு,
ஊரார், 'பெண்டு' என மொழிய, என்னை,
அது கேட்டு, 'அன்னாய்' என்றனள், அன்னை;
5
பைபய 'எம்மை' என்றனென், யானே.
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3
114
அம்ம வாழி, தோழி! கொண்கன்
நேரேம் ஆயினும், செல்குவம் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடல்அம் பெண்ணை அவனுடை நாட்டே?
இடைவிட்டு ஒழுகும் தலைமகன் வந்து சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 4
115
அம்ம வாழி, தோழி! பல் மாண்
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ,
அன்னை அருங் கடி வந்து நின்றோனே!
இற் செறிப்புண்ட பின்பும், வரைந்து கொள்ள நினையாது தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 5
116
அம்ம வாழி, தோழி! நாம் அழ,
நீல இருங் கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று, மன்ற
காலை அன்ன காலை முந்துறுத்தே.
எற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6
117
அம்ம வாழி, தோழி! நலனே
இன்னது ஆகுதல் கொடிதே! புன்னை
அணி மலர் துறைதொறும் வரிக்கும்
மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே.
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 7
118
அம்ம வாழி, தோழி! யான் இன்று,
அறனிலாளற் கண்ட பொழுதில்,
சினவுவென் தகைக்குவென் சென்றனென்
பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே.
சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயில் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி, நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூஉம் ஆம். 8
119
அம்ம வாழி, தோழி! நன்றும்
எய்யாமையின் ஏதில பற்றி,
அன்பு இலன் மன்ற பெரிதே
மென் புலக் கொண்கன் வாராதோனே!
'வரைதற்கு வேண்டுவன முயல்வேம்' எனச் சொல்லி வரையாது செலுத்துகின்ற தலைமகன் சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9
120
அம்ம வாழி, தோழி! நலம் மிக
நல்லஆயின, அளிய மென் தோளே
மல்லல் இருங் கழி மல்கும்
மெல்லம் புலம்பன் வந்தமாறே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்து சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 10
மேல்