தொடக்கம்   முகப்பு
201 - 210 அன்னாய்வாழிப்பத்து
201
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என்னை
தானும் மலைந்தான்; எமக்கும் தழை ஆயின;
பொன் வீ மணி அரும்பினவே
என்ன மரம்கொல், அவர் சாரலவ்வே!
நொதுமலர் வரைவின்கண் செவிலி கேட்குமாற்றால் தலைமகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்து  த்தது. 1
 
202
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே.
தலைமகன் வரைதல் வேண்டித் தானே வருகின்றமை கண்ட தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச் சொல்லியது. 2
 
203
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலைக் கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.
உடன்போய் மீண்ட தலைமகள், 'நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; நீ எங்ஙனம் நுகர்ந்தாய்?' எனக் கேட்ட தோழிக்குக் கூறியது. 3
 
204
அன்னாய், வாழி, வேண்டு, அன்னை! அஃது எவன்கொல்?
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ,
பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி,
நல்லள் நல்லள் என்ப;
5
தீயேன் தில்ல, மலை கிழவோற்கே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4
 
205
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என் தோழி
நனி நாண் உடையள்; நின்னும் அஞ்சும்;
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல்
5
தவ நனி வெய்யள்; நோகோ; யானே.
நொதுமலர் வரைவு வேண்டி விட்டுழித் தலைமகட்கு உளதாகிய வருத்தம் நோக்கி, 'இவள் இவ்வாறு ஆதற்குக் காரணம் என்னை?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 5
 
206
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! உவக்காண்
மாரிக் குன்றத்துக் காப்பாள் அன்னன்;
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்,
பாசி சூழ்ந்த பெருங் கழல்,
5
தண் பனி வைகிய வரிக் கச்சினனே!
இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 
207
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நன்றும்
உணங்கல கொல்லோ, நின் தினையே? உவக்காண்
நிணம் பொதி வழுக்கின் தோன்றும்,
மழை தலைவைத்து, அவர் மணி நெடுங் குன்றே.
'மழையின்மையால் தினை உணங்கும்; விளையமாட்டா; புனங்காப்பச் சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று' என வெறுத்திருந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. 7
 
208
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! கானவர்
கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப்
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு,
மணி நிற மால் வரை மறைதொறு, இவள்
5
அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே.
செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப் பட்ட பின்பு, 'இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னின் தீர்ந்தது' என்பது குறிப்பின் தோன்ற அவட்குச் சொல்லியது. 8
 
209
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்,
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண் தலை மா மழை சூடி,
5
தோன்றல் ஆனாது, அவர் மணி நெடுங் குன்றே.
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, 'சிறிது மறந்து ஆற்ற வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9
 
210
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைப்
புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர் நாட்டுப்
பூக் கெழு குன்றம் நோக்கி நின்று,
மணி புரை வயங்கு இழை நிலைபெறத்
5
தணிதற்கும் உரித்து, அவள் உற்ற நோயே.
காப்பு மிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தினான் ஆயிற்று' என்று வெறியெடுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10
 
மேல்