தொடக்கம்   முகப்பு
291 - 300 மஞ்ஞைப்பத்து
291
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்
துறுகல் அடுக்கத்ததுவே பணைத் தோள்,
ஆய் தழை நுடங்கும் அல்குல்,
காதலி உறையும் நனி நல் ஊரே.
வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்ற தலைமகன் சொல்லியது. 1
 
292
மயில்கள் ஆல, பெருந் தேன் இமிர,
தண் மழை தழீஇய மா மலை நாட!
நின்னினும் சிறந்தனள், எமக்கே நீ நயந்து
நல் மனை அருங் கடி அயர,
5
எம் நலம் சிறப்ப, யாம் இனிப் பெற்றோளே.
பின்முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை முடித்தவளை இல்லத்துக் கொண்டு புகுந்துழி, தலைமகள் உவந்து சொல்லியது. 2
 
293
சிலம்பு கமழ் காந்தள் நறுங் குலை அன்ன
நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே!
பாயல் இன் துணை ஆகிய பணைத் தோள்
தோகை மாட்சிய மடந்தை!
5
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே?
பகற்குறியிடம் புக்க தலைமகன், தலைவி பின்னாக மறைய வந்து கண் புதைத்துழி, சொல்லியது. 3
 
294
எரி மருள் வேங்கை இருந்த தோகை
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட!
இனிது செய்தனையால்; நுந்தை வாழியர்!
நல் மனை வதுவை அயர, இவள்
5
பின் இருங் கூந்தல் மலர் அணிந்தோயே!
வதுவை செல்லாநின்றுழித் தலைமகற்குத் தோழி கூறியது. 4
 
295
வருவதுகொல்லோ தானே வாராது
அவண் உறை மேவலின், அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை,
இருவி இருந்த குருவி வருந்துற,
5
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே?
தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, உடன்சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது. 5
 
296
கொடிச்சி காக்கும் பெருங் குரல் ஏனல்
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட!
நடுநாள் கங்குலும் வருதி;
கடு மா தாக்கின், அறியேன் யானே.
இரவுக்குறி வருகின்ற தலைமகற்குத் தோழி ஆற்றருமை கூறி மறுத்தது. 6
 
297
விரிந்த வேங்கைப் பெருஞ் சினைத் தோகை
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாட!
பிரியினும், பிரிவது அன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே.
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 7
 
298
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல் ஊர் அசைநடைக் கொடிச்சி
தான் எம் அருளாள்ஆயினும்,
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே!
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்திய வழி, அவள் நாணத்தினால் மறைத்து ஒழுகிய அதனைக் கூறக்கேட்ட தலைமகன் சொல்லியது. 8
 
299
குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்,
பைஞ் சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம் சில் ஓதி அசைநடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிது; இவள்
5
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய நிலைமைக்கண், தலைமகள் ஆய வெள்ளத்தோடு கூடி நிற்கக் கண்ட தலைமகன் மகிழ்ந்த உள்ளத்தானாய்த் தன்னுள்ளே சொல்லியது. 9
 
300
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம் சிறை விரிக்கும் பெருங் கல் வெற்பன்
வந்தனன்; எதிர்ந்தனர் கொடையே;
அம் தீம் கிளவி! பொலிக, நின் சிறப்பே!
தலைமகன் தானே வரைவு வேண்டிவிட, சுற்றத்தார் கொடை நேர்ந்தமை தலைமகட்குத் தோழி சொல்லியது.
 
மேல்