தொடக்கம்   முகப்பு
451 - 460 பருவங்கண்டு கிழத்தியுரைத்தபத்து
451
கார் செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது?
மாற்று அருந் தானை நோக்கி,
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே!
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் குறித்த பருவம் நினைந்து ஆற்றி இருந்த தலைமகள், அப் பருவ வரவின்கண் பாசறையினின்றும் வந்தார் அரசன் செய்தி கூறக் கேட்டு, ஆற்றாளாய்ச் சொல்லியது. 1
 
452
வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக்
கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே;
பகை வெங் காதலர் திறை தரு முயற்சி
மென் தோள் ஆய்கவின் மறைய,
5
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே.
குறித்த பருவத்து வாராது தலைமகன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைமகள் கூறியது. 2
 
453
அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங் குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை; அதனால்,
நீர் தொடங்கினவால் நெடுங் கண்; அவர்
5
தேர் தொடங்கு இன்றால் நம்வயினானே.
பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3
 
454
தளவின் பைங் கொடி தழீஇ, பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி,
கார் நயந்து எய்தும், முல்லை; அவர்
தேர் நயந்து உறையும், என் மாமைக் கவினே.
பருவ வரவின்கண் தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. 4
 
455
அரசு பகை தணிய, முரசு படச் சினைஇ,
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே:
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து,
மின் இழை ஞெகிழச் சாஅய்,
5
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே!
ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 5
 
456
உள்ளார்கொல்லோ தோழி! வெள் இதழ்ப்
பகல் மதி உருவின் பகன்றை மா மலர்
வெண் கொடி ஈங்கைப் பைம் புதல் அணியும்
அரும் பனி அளைஇய கூதிர்
5
ஒருங்கு இவண் உறைதல், தெளித்து அகன்றோரே?
குறித்த பருவம் வரவும் தலைமகன் வந்திலனாக ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6
 
457
பெய் பனி நலிய, உய்தல் செல்லாது
குருகினம் நரலும் பிரிவு அருங் காலை,
துறந்து அமைகல்லார், காதலர்;
மறந்து அமைகல்லாது, என் மடம் கெழு நெஞ்சே.
பருவ வரவின் கண் ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7
 
458
துணர்க் காய்க் கொன்றை குழற் பழம் ஊழ்த்தன;
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர்
பாணர் பெருமகன் பிரிந்தென,
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே!
பருவங் குறித்துப் பிரிந்த தலைமகன் வரவு பார்த்திருந்த தலைமகள் பருவ முதிர்ச்சி கூறி, ஆற்றாளாய்  த்தது. 8
 
459
மெல் இறைப் பணைத் தோள் பசலை தீர,
புல்லவும் இயைவது கொல்லோ புல்லார்
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை
வெல் போர் வேந்தனொடு சென்ற
5
நல் வயல் ஊரன் நறுந் தண் மார்பே?
'வேந்தன் வினை முற்றினான்; நின் காதலர் கடுக வருவர்' எனக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9
 
460
பெருஞ் சின வேந்தனும் பாசறை முனியான்;
இருங் கலி வெற்பன் தூதும் தோன்றா;
ததை இலை வாழை முழுமுதல் அசைய,
இன்னா வாடையும் அலைக்கும்;
5
என் ஆகுவென்கொல், அளியென் யானே?
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகனைப் பருவ முதிர்ச்சியினும் வரக் காணாது, தலைமகள் சொல்லியது. 10
 
மேல்