தொடக்கம்   முகப்பு
471 - 480 பாணன்பத்து
471
எல் வளை நெகிழ, மேனி வாட,
பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க,
துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்;
அது மற்று உணர்ந்தனை போலாய்
5
இன்னும் வருதி; என் அவர் தகவே?
பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறிய வழி, தோழி சொல்லியது. 1
 
472
கை வல் சீறியாழ்ப் பாண! நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே;
எம்மின் உணரார்ஆயினும், தம்வயின்
பொய் படு கிளவி நாணலும்
5
எய்யார் ஆகுதல், நோகோ யானே?
குறித்த பருவம் வரவும் தலைமகன் வாரானாகியவழி, தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. 2
 
473
பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிச்
செலவு நீ நயந்தனைஆயின், மன்ற
இன்னா அரும் படர் எம்வயின் செய்த
பொய் வலாளர் போல
5
கை வல் பாண! எம் மறவாதீமே.
'தலைமகன் பிரிந்த நாட்டில் செல்வேம்' என்ற அவன் பாணற்குத் தலைமகள் சொல்லியது. 3
 
474
மை அறு சுடர் நுதல் விளங்க, கறுத்தோர்
செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு
கதழ் பரி நெடுந் தேர் அதர் படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவல் என்னும்;
5
நன்றால் அம்ம, பாணனது அறிவே!
பிரிவின்கண் ஆற்றாமை கண்டு, 'தூதாகிச் சென்று அவனைக் கொணர்வல்' என்ற பாணன் கேட்பத் தலைமகள் கூறியது. 4
 
475
தொடி நிலை கலங்க வாடிய தோளும்
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி,
பெரிது புலம்பினனே, சீறியாழ்ப் பாணன்;
எம் வெங் காதலொடு பிரிந்தோர்
5
தம்மோன் போலான்; பேர் அன்பினனே.
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தலைமகனுழை நின்று வந்தார் கேட்ப, தன் மெலிவு கண்டு இரங்கிய பாணனைத் தோழிக்கு மகிழ்ந்து சொல்லியது. 5
 
476
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப,
பருவம் செய்தன பைங் கொடி முல்லை;
பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும்
அன்பு இல் மாலையும் உடைத்தோ
5
அன்பு இல் பாண! அவர் சென்ற நாடே?
'பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே; நீ வேறுபடுகின்றது என்னை?' என்ற பாணற்குத் தலைமகள் கூறியது. 6
 
477
பனி மலர் நெடுங் கண் பசலை பாய,
துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள்
கையறு நெஞ்சிற்கு உயவுத் துணை ஆக,
சிறு வரைத் தங்குவைஆயின்,
5
காண்குவை மன்னால் பாண! எம் தேரே.
தலைமகள்மாட்டுப் பாணனைத் தூதாக விடுத்த தலைமகன் கூறியது. 7
 
478
'நீடினம்' என்று கொடுமை தூற்றி,
வாடிய நுதலள் ஆகி, பிறிது நினைந்து,
யாம் வெங் காதலி நோய் மிகச் சாஅய்,
சொல்லியது  மதி, நீயே
5
முல்லை நல் யாழ்ப் பாண! மற்று எமக்கே?
பிரிந்து உறையும் தலைமகன் தலைமகள் விட்ட தூதாய்ச் சென்ற பாணனை, 'அவள் சொல்லிய திறம் கூறு' எனக் கேட்டது. 8
 
479
சொல்லுமதி பாண! சொல்லுதோறு இனிய
நாடு இடை விலங்கிய எம்வயின், நாள்தொறும்,
அரும் பனி கலந்த அருள் இல் வாடை
தனிமை எள்ளும் பொழுதில்,
5
பனி மலர்க் கண்ணி கூறியது எமக்கே.
தலைவி விடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைமகன், 'இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூற வேண்டும்' எனக் கூறியது. 9
 
480
நினக்கு யாம் பாணரேம் அல்லேம்; எமக்கு
நீயும் குருசிலை அல்லை மாதோ
நின் வெங் காதலி தன் மனைப் புலம்பி,
ஈர் இதழ் உண்கண் உகுத்த
5
பூசல் கேட்டும் அருளாதோயே!
தலைமகட்குத் தூதாய்ப் பாசறைக்கண் சென்ற பாணன் தலைமகனை நெருங்கிச் சொல்லியது. 10
 
மேல்