445

5. முல்லை

(45) பாசறைப் பத்து


445. புகழ்சால் சிறப்பிற் காதலி புலம்பத்
    துறந்துவந் தனையே யருந்தொழிற் கட்டூர்
    நல்வேறு 1தழீஇ நாகுபெயர் காலை
    உள்ளுதொறுங் கலிழு நெஞ்சம்
    வல்லே யெம்மையும் 2வரவிழைத் தனையே.

   எ-து பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவவரவின்கண்
தலைமகளை நினைந்து நெஞ்சொடுபுலந்து சொல்லியது.

   குறிப்பு. புகழ்சால் சிறப்பு-புகழ்மிக்க சிறப்புடைய, வந்தனை
என்றது நெஞ்சை முன்னிலைப்படுத்தி. அருந்தொழிற் கட்டூர்-அரிய
தொழிலமைந்த பாசறைக்கண். நாகு-பசு. பெயர்காலை-செல்லும்
போது. ஏறு தழீஇ நாகு பெயர்தல்; கலித். 113 : 28; சீவக. 751,
2062; நள. க. : 156. கலிழும்-கலங்கும். நெஞ்சம் : விளி. இழைத்
தனை-செய்தாய். நெஞ்சம், துறந்துவந்தனை, எம்மையும் வர
விழைத்தனை.

    (மேற்.) மு. இது பகைவயிற் பிரிந்தோன் பருவங்கண்டு
தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பியது. (தொல். அகத். 41, ந.).

    (பி-ம்.) 1 ‘தழீஇய’ 2 ‘வரவழைத்தனையே’ ( 5 )