தொடக்கம்   முகப்பு
தலைவன்
72
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத்
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்
மலர் ஆர் மலிர்நிறை வந்தென,
5
புனல் ஆடு புணர்துணை ஆயினள், எமக்கே.
தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப் புனல் ஆட வேண்டிய தலைமகன் களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. 2

 
73
வண்ண ஒண் தழை நுடங்க, வால் இழை
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தென,
கள் நறுங் குவளை நாறித்
தண்ணென்றிசினே பெருந் துறைப் புனலே.
இதுவும் அது. 3

 
92
கருங் கோட்டு எருமைச் செங் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்
நுந்தை, நும் ஊர் வருதும்
ஒண் தொடி மடந்தை! நின்னை யாம் பெறினே.
'நினக்கு வரைந்து தருதற்குக் குறை நின் தமர் அங்கு வந்து கூறாமையே' எனத் தோழி கூறினாளாக, தலைமகள் முகம் நோக்கி, 'இவள் குறிப்பினால் கூறினாள்' என்பது அறிந்த தலைமகன், 'வரைவு மாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் செ

 
94
மள்ளர் அன்ன தடங் கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையொடு வதியும்
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்,
5
கவின் பெறு சுடர்நுதல் தந்தை, ஊரே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீள்கின்றான் சொல்லியது. 4

 
97
பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டைக்
கருந் தாள் எருமைக் கன்று வெரூஉம்,
பொய்கை, ஊரன் மகள், இவள்;
பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே.
புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், 'உளது' என்று புலந்த தலைமகளைப் புலவி நீக்கிய தலைமகன், புணர்ச்சியது இறுதிக்கண், தன்னுள்ளே சொல்லியது. 7

 
99
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை,
கழனி எருமை, கதிரொடு மயக்கும்
பூக் கஞல் ஊரன் மகள், இவள்;
நோய்க்கு மருந்து ஆகிய பணைத் தோளோளே.
தோழி முதலாயினோர் தலைமகன் கொடுமை கூறி விலக்கவும் வாயில் நேர்ந்துழி, அவன் உவந்து சொல்லியது. 9

 
171
திரை இமிழ் இன் இசை அளைஇ, அயலது
முழவு இமிழ் இன் இசை மறுகுதொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணைத் தோள்,
ஒண் தொடி, அரிவை என் நெஞ்சு கொண்டோளே!
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் ஆயத்தோடு சொல்லும் தலைமகளைக் கண்டு சொல்லியது. 1

 
172
ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!
வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல் ஒலித் திரை போல,
இரவினானும் துயில் அறியேனே!
'கண் துயில்கின்றிலை; இதற்குக் காரணம் என்?' என்று வினவிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 2

 
174
அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன
மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்குஇழை
பொங்கு அரி பரந்த உண்கண்,
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே.
குறிவழிச் சென்று தலைமகளைக் கண்டு வந்த பாங்கன், 'அவள் நின்றுழி நின்றாள்' என்று கூறியவழி, ஆண்டுச் செல்லக் கருதிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. 4

 
175
எமக்கு நயந்து அருளினைஆயின், பணைத் தோள்
நல் நுதல் அரிவையொடு மென்மெல இயலி,
வந்திசின் வாழியோ, மடந்தை!
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே.
பாங்கற் கூட்டங் கூடி நீங்கும் தலைமகன், 'இனி வருமிடத்து நின் தோழியோடும் வர வேண்டும்' எனத் தலைமகட்குச் சொல்லியது. 5

 
176
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி,
ஐது அமைந்து அகன்ற அல்குல்,
கொய் தளிர் மேனி! கூறுமதி தவறே.
தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழிச் சென்ற தலைமகன், 'இவள் என்னை இவை கோடற்குக் காரணம் என்?' என்று தோழியை வினாவியது. 6

 
178
தோளும் கூந்தலும் பல பாராட்டி,
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன
எற் கண்டு நயந்து நீ நல்காக்காலே?
தலைமகன் தோழியை இரந்து குறையுறுவான் சொல்லியது. 8

 
185
அலங்குஇதழ் நெய்தல் கொற்கை முன்துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்,
அரம் போழ் அவ் வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவியளே.
'ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?' என வினவிய தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 5

 
188
இருங் கழிச் சேயிறா இனப் புள் ஆரும்
கொற்கைக் கோமான் கொற்கைஅம் பெருந் துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்
தகை பெரிது உடைய, காதலி கண்ணே!
விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன் தலைவி இல்வாழ்க்கைச் சிறப்புக் கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 8

 
191
கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கை,
கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல்,
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள்.
வரையர மகளிரின் அரியள் என்
5
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.
'நின்னால் காணப்பட்டவள் எவ்விடத்து எத்தன்மையள்?' என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது. 1

 
195
வளை படு முத்தம் பரதவர் பகரும்
கடல் கெழு கொண்கன் காதல் மட மகள்
கெடல் அருந் துயரம் நல்கி,
படல் இன் பாயல் வௌவியோளே.
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் தனித்து உறைய ஆற்றானாய்ச் சொல்லியது. 5

 
197
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி,
முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே
புலம்பு கொள் மாலை மறைய
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது. 7

 
255
குன்றக் குறவன் காதல் மட மகள்
வரையர மகளிர்ப் புரையும் சாயலள்;
ஐயள்; அரும்பிய முலையள்;
செய்ய வாயினள்; மார்பினள், சுணங்கே.
'நின்னால் காணப்பட்டவள் எத்தன்மையள்?' என்ற பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 5
 

 
256
குன்றக் குறவன் காதல் மட மகள்
வண்டு படு கூந்தல் தண் தழைக் கொடிச்சி;
வளையள்; முளை வாள் எயிற்றள்;
இளையள் ஆயினும், ஆர் அணங்கினளே.
'நீ கூறுகின்றவள் நின்னை வருத்தும் பருவத்தாள் அல்லள்' என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 6
 

 
259
குன்ற குறவன் காதல் மட மகள்
மன்ற வேங்கை மலர் சில கொண்டு,
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி,
தேம் பலிச் செய்த ஈர் நறுங் கையள்;
5
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே.
வரையத் துணிந்த தலைமகன் வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு, 'இனி அது கடுக முடியும்' என உவந்த உள்ளத்தனாய், தன்னுள்ளே சொல்லியது. 9
 

 
281
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய, பலவே ஒள் இழை
இரும் பல் கூந்தல் கொடிச்சி
பெருந் தோள் காவல் காட்டியவ்வே.
ஆயத்தோடு விளையாட்டு விருப்பினால் பொழிலகம் புகுந்த தலைவியை எதிர்ப்பட்டு ஒழுகுகின்ற தலைமகன், அவள் புனங்காவற்கு உரியளாய் நின்றது கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 1
 

 
288
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம் எவன் செய்குவம்? நெஞ்சே! காமர்
மெல் இயல் கொடிச்சி காப்பப்
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே.
'கிளிகள் புனத்தின்கண் படியாநின்றன' என்று, தலைவியைக் காக்க ஏவியவழி, அதனை அறிந்த தலைமகன் உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 8
 

 
291
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்
துறுகல் அடுக்கத்ததுவே பணைத் தோள்,
ஆய் தழை நுடங்கும் அல்குல்,
காதலி உறையும் நனி நல் ஊரே.
வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்ற தலைமகன் சொல்லியது. 1
 

 
293
சிலம்பு கமழ் காந்தள் நறுங் குலை அன்ன
நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே!
பாயல் இன் துணை ஆகிய பணைத் தோள்
தோகை மாட்சிய மடந்தை!
5
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே?
பகற்குறியிடம் புக்க தலைமகன், தலைவி பின்னாக மறைய வந்து கண் புதைத்துழி, சொல்லியது. 3
 

 
298
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல் ஊர் அசைநடைக் கொடிச்சி
தான் எம் அருளாள்ஆயினும்,
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே!
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்திய வழி, அவள் நாணத்தினால் மறைத்து ஒழுகிய அதனைக் கூறக்கேட்ட தலைமகன் சொல்லியது. 8
 

 
299
குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்,
பைஞ் சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம் சில் ஓதி அசைநடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிது; இவள்
5
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய நிலைமைக்கண், தலைமகள் ஆய வெள்ளத்தோடு கூடி நிற்கக் கண்ட தலைமகன் மகிழ்ந்த உள்ளத்தானாய்த் தன்னுள்ளே சொல்லியது. 9
 

 
321
உலறு தலைப் பருந்தின் உளி வாய்ப் பேடை
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிப்
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து,
மொழிபெயர் பல் மலை இறப்பினும்,
5
ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே.
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது. 1

 
323
வள் எயிற்றுச் செந்நாய் வயவு உறு பிணவிற்குக்
கள்ளிஅம் கடத்திடைக் கேழல் பார்க்கும்
வெஞ் சுரக் கவலை நீந்தி,
வந்த நெஞ்சம்! நீ நயந்தோள் பண்பே.
இடைச் சுரத்துத் தலைமகள் குணம் நினைந்த தலைமகன், 'அவள் பண்பு வந்தன' என உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 3

 
324
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைச்
சிறிது கண்படுப்பினும், காண்குவென் மன்ற
நள்ளென் கங்குல், நளி மனை நெடு நகர்,
வேங்கை வென்ற சுணங்கின்
5
தேம் பாய் கூந்தல் மாஅயோளே.
பிரிந்து வந்த தலைமகன் தலைமகளை நலம் பாராட்டக் கண்ட தோழி, 'இவள் குணத்தினை மறந்து அமைந்தவாறு யாது?' என வினாவினாட்கு அவன் சொல்லியது. 4

 
325
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ,
போகில் புகா உண்ணாது, பிறிது புலம் படரும்
வெம்பு அலை அருஞ் சுரம் நலியாது
எம் வெங் காதலி பண்பு துணைப் பெற்றே.
பிரிந்துவந்த தலைமகன், 'சுரத்தின் வெம்மை எங்ஙனம் ஆற்றினீர்?' என்ற தோழிக்குச் சொல்லியது. 5

 
326
அழல் அவிர் நனந் தலை நிழல் இடம் பெறாது,
மட மான் அம் பிணை மறியொடு திரங்க,
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற, சுரமே;
5
இனிய மன்ற, யான் ஒழிந்தோள் பண்பே!
இடைச்சுரத்து வெம்மை ஆற்றானாகிய தலைமகன் தலைமகள் குணம் நினைந்து, நொந்து சொல்லியது. 6

 
328
நுண் மழை தளித்தென நறு மலர் தாஅய்த்
தண்ணிய ஆயினும், வெய்ய மன்ற
மடவரல் இன் துணை ஒழியக்
கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே.
'மழை வீழ்தலால் சுரம் தண்ணென்றது; இனி வருத்தம் இன்றிப் போகலாம்' என்ற உழையர்க்குத் தலைமகன் சொல்லியது. 8

 
329
ஆள் வழக்கு அற்ற பாழ்படு நனந் தலை
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, நம்மொடு
மறுதருவதுகொல் தானே செறிதொடி
கழிந்து உகு நிலைய ஆக
5
ஒழிந்தோள் கொண்ட, என் உரம் கெழு, நெஞ்சே?
இடைச்சுரத்தின்கண் மீளலுறும் நெஞ்சினை நொந்து, தலைமகன் உழையர்க்குச் சொல்லியது. 9

 
330
வெந் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி,
வந்தனம்ஆயினும், ஒழிக இனிச் செலவே!
அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்
கதிர் தெறு வெஞ் சுரம் நினைக்கும்,
5
அவிர் கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே.
பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 10

 
355
திருந்துஇழை அரிவை! நின் நலம் உள்ளி,
'அருஞ் செயல் பொருள்பிணி பெருந் திரு உறுக!' எனச்
சொல்லாது பெயர் தந்தேனே பல் பொறிச்
சிறு கண் யானை திரிதரும்
5
நெறி விலங்கு அதர கானத்தானே.
நினைந்த எல்லையளவும் பொருள் முற்றி நில்லாது, பெற்ற பொருள் கொண்டு, தலைவியை நினைந்து, மீண்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 5

 
356
உள்ளுதற்கு இனியமன்ற செல்வர்
யானை பிணித்த பொன் புனை கயிற்றின்,
ஒள் எரி மேய்ந்த சுரத்திடை
உள்ளம் வாங்க, தந்த நின் குணனே.
வினை முற்றி மீண்டு வந்த தலைமகன் தலைவிக்கு அவள் குணம் புகழ்ந்து கூறியது. 6

 
359
அரும் பொருள் வேட்கையம் ஆகி, நிற் துறந்து,
பெருங் கல் அதரிடைப் பிரிந்த காலைத்
தவ நனி நெடிய ஆயின; இனியே,
அணியிழை உள்ளி யாம் வருதலின்
5
நணிய ஆயின சுரத்திடை ஆறே.
மீண்டு வந்த தலைமகன் அவளைப் பிரிகின்ற காலத்துச் சுரத்துச் சேய்மையும், வருகின்ற காலத்து அதன் அணிமையும், கூறியது. 9

 
360
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை
அரிய ஆயினும், எளிய அன்றே
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி,
கடு மான் திண் தேர் கடைஇ,
5
நெடு மான் நோக்கி! நின் உள்ளி யாம் வரவே!
வினைமுற்றி மீண்டு வந்த தலைமகன், 'சுரத்து அருமை நோக்காது வந்தவாறு என்னை?' என வினவிய தலைமகட்குச் சொல்லியது. 10

 
363
சிலை வில் பகழிச் செந் துவர் ஆடைக்
கொலை வில் எயினர் தங்கை! நின் முலைய
சுணங்கு என நினைதி நீயே;
அணங்கு என நினையும், என் அணங்குறு நெஞ்சே.
புணர்ந்து உடன் செல்கின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நலம் பாராட்டியது. 3
 

 
365
கண மா தொலைச்சித் தன்னையர் தந்த
நிண ஊன் வல்சிப் படு புள் ஓப்பும்
நலம் மாண் எயிற்றி போலப் பல மிகு
நன்னல நயவரவு உடையை
5
என் நோற்றனையோ? மாவின் தளிரே!
வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைத்த மாவின் தளிர் கண்டு சொல்லியது. 5
 

 
395
முளி வயிர்ப் பிறந்த, வளி வளர் கூர் எரிச்
சுடர் விடு நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
இன்னா அருஞ் சுரம் தீர்ந்தனம்; மென்மெல
ஏகுமதி வாழியோ, குறுமகள்! போது கலந்து
5
கறங்கு இசை அருவி வீழும்,
பிறங்கு இருஞ் சோலை, நம் மலை கெழு நாட்டே.
உடன்போய் மீள்கின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. 5
 

 
396
புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின்
கதுப்பு அயல் அணியும் அளவை, பைபயச்
சுரத்திடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை!
கல் கெழு சிறப்பின் நம் ஊர்
5
எல் விருந்து ஆகிப் புகுகம், நாமே.
இதுவும் அது. 6
 

 
411
ஆர் குரல் எழிலி அழிதுளி சிதறிக்
கார் தொடங்கின்றால், காமர் புறவே;
வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்
தாழ் இருங் கூந்தல்! வம்மதி, விரைந்தே.
பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் அப் பருவத்திற்கு முன்னே வந்து, தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழிப் பருவம் வந்ததாக, தான் பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்றக் கூறுவான் தலைவிக்கு  த்தது. 1
 

 
412
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர்க்கண்ணி! ஆடுகம், விரைந்தே.
இதுவும் அது. 2
 

 
413
நின் நுதல் நாறும் நறுந் தண் புறவில்
நின்னே போல மஞ்ஞை ஆல,
கார் தொடங்கின்றால் பொழுதே
பேர் இயல் அரிவை! நாம் நயத்தகவே.
இதுவும் அது. 3
 

 
414
புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள,
கோட்டவும் கொடியவும் பூப் பல பழுனி
மெல் இயல் அரிவை! கண்டிகும்
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே.
இதுவும் அது. 4
 

 
415
இதுவே, மடந்தை! நாம் மேவிய பொழுதே;
உதுவே, மடந்தை! நாம் உள்ளிய புறவே;
இனிது உடன் கழிக்கின், இளமை
இனிதால் அம்ம, இனியவர்ப் புணர்வே!
இதுவும் அது. 5
 

 
416
போது ஆர் நறுந் துகள் கவினிப் புறவில்,
தாது ஆர்ந்து,
களிச் சுரும்பு அரற்றும் காமர் புதலின்,
மடப் பிடி தழீஇய, மாவே;
5
சுடர்த் தொடி மடவரல் புணர்ந்தனம், யாமே!
பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி, அதற்கு இனியனாய்த் தன்னுள்ளே சொல்லுவான் போன்று, தலைவி அறியுமாற்றால் கூறியது. 6
 

 
417
கார் கலந்தன்றால் புறவே; பல உடன்
ஏர் பரந்தனவால் புனமே; ஏர் கலந்து
தாது ஆர் பிரசம் மொய்ப்ப,
போது ஆர் கூந்தல் முயங்கினள், எம்மே.
இதுவும் அது. 7
 

 
418
வானம்பாடி வறம் களைந்து, ஆனாது
அழி துளி தலைஇய புறவில், காண்வர
வானர மகளோ நீயே
மாண் முலை அடைய முயங்கியோயே?
குறித்த பருவத்திற்கு உதவ வாராநின்ற வழிக்கண் உருவு வெளிப்பாடு கண்ட தலைமகன் இல்லத்துப் புகுந்துழி, தலைமகட்குச் சொல்லியது. 8
 

 
419
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மைப்
பிரிந்துறல் அறியா, விருந்து கவவி,
நம் போல் நயவரப் புணர்ந்தன
கண்டிகும் மடவரல்! புறவின் மாவே.
இன்ப நுகர்ச்சிக்கு ஏற்ற பருவம் வந்துழி, தலைமகளொடு புறவில் சென்ற தலைமகன் அவ்விடத்து மாக்களை அவட்குக் காட்டிச் சொல்லியது. 9
 

 
420
பொன் என மலர்ந்த, கொன்றை; மணி எனத்
தேம் படு காயா மலர்ந்த; தோன்றியொடு
நன்னலம் எய்தினை, புறவே! நின்னைக்
காணிய வருதும், யாமே
5
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே.
குறித்த பருவத்து எய்திய, அணித்தாக வந்த தலைமகன் பருவத்தால் அணிகொண்ட புறவை நோக்கிச் சொல்லியது. 10
 

 
422
கடும் பரி நெடுந் தேர்க் கால் வல் புரவி,
நெடுங் கொடி முல்லையொடு தளவமலர் உதிர,
விரையுபு கடைஇ நாம் செல்லின்,
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே.
மீள்கின்றான் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. 2
 

 
425
புன் புறப் பேடை சேவல் இன்புற
மன்னர் இயவரின் இரங்கும் கானம்
வல்லை நெடுந் தேர் கடவின்,
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே.
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. 5
 

 
426
வென் வேல் வேந்தன் அருந் தொழில் துறந்து, இனி,
நன்னுதல்! யானே செலவு ஒழிந்தனெனே!
முரசு பாடு அதிர ஏவி,
அரசு படக் கடக்கும் அருஞ் சமத்தானே.
வேந்தற்குத் தானைத்தலைவனாய் ஒழுகும் தலைமகன் பிரிந்து வினை முடித்து வந்து தலைவியோடு உறைகின்றுழி, 'இன்னும் பிரியுங்கொல்?' என்று கருதிய தலைமகட்குக் கவற்சி தீரச் சொல்லியது. 6
 

 
427
பேர் அமர் மலர்க் கண் மடந்தை! நீயே
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே;
போருடை வேந்தன், 'பாசறை
வாரான் அவன்' எனச் செலவு அழுங்கினனே.
'பிரியுங்கொல்?' என்று ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவொழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது. 7
 

 
428
தேர் செலவு அழுங்க, திருவில் கோலி,
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே;
வேந்து விடு விழுத் தொழில் ஒழிய,
யான் தொடங்கினனால், நிற் புறந்தரவே.
'பிரியுங்கொல்?' என்று ஐயுற்ற தலைமகள் ஐயம் தீரத் தலைமகன் சொல்லியது. 8
 

 
429
பல் இருங் கூந்தல்! பசப்பு நீ விடின்,
செல்வேம் தில்ல யாமே செற்றார்
வெல் கொடி அரணம் முருக்கிய
கல்லா யானை வேந்து பகை வெலற்கே.
குறிப்பினால் பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் உடம்படுவாளாக, வேந்தற்கு உற்றுழிப் பிரியும் தலைமகன் சொல்லியது. 9
 

 
430
நெடும் பொறை மிசைய குறுங் கால் கொன்றை
அடர் பொன் என்னச் சுடர் இதழ் பகரும்
கான் கெழு நாடன் மகளே!
அழுதல் ஆன்றிசின்; அழுங்குவல் செலவே.
'பிரியுங்கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் பருவ வரவு கூறி, 'இது காரணத்தாலும் பிரியேன்' எனச் சொல்லியது. 10
 

 
441
ஐய ஆயின, செய்யோள் கிளவி;
கார் நாள் உருமொடு கையறப் பிரிந்தென,
நோய் நன்கு செய்தன எமக்கே;
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே.
சென்ற வினை முடியாமையின், கார்காலம் வந்த இடத்து, மீளப் பெறாத தலைமகன்,தலைமகள் உழைநின்றும் வந்த தூதர் வார்த்தை கேட்டு, இரங்கியது. 1
 

 
442
பெருஞ் சின வேந்தன் அருந் தொழில் தணியின்,
விருந்து நனி பெறுதலும் உரியள்மாதோ
இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து
அருந்ததி அனைய கற்பின்,
5
குரும்பை மணிப் பூண் புதல்வன் தாயே.
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடியாமையின், பாசறைக்கண் இருந்து பருவ வரவின்கண் சொல்லியது. 2
 

 
443
நனி சேய்த்து என்னாது, நற்றேர் ஏறிச் சென்று,
இலங்கு நிலவின் இளம் பிறை போலக்
காண்குவெம் தில்ல, அவள் கவின் பெறு சுடர் நுதல்
விண் உயர் அரண் பல வௌவிய
5
மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே.
இதுவும் அது. 3
 

 
444
பெருந் தோள் மடவரல் காண்குவெம் தில்ல
நீள் மதில் அரணம் பாய்ந்தெனத் தொடி பிளந்து
வைந் நுதி மழுகிய தடங் கோட்டு யானை,
வென் வேல், வேந்தன் பகை தணிந்து,
5
இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே.
இதுவும் அது. 4
 

 
445
புகழ் சால் சிறப்பின் காதலி புலம்பத்
துறந்து வந்தனையே, அரு தொழில் கட்டூர்
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை
உள்ளுதொறும் கலிழும் நெஞ்சம்!
5
வல்லே எம்மையும் வர இழைத்தனையே!
பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் தலைமகளை நினைந்து, நெஞ்சொடு புலந்து சொல்லியது. 5
 

 
446
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள
நல்ல காண்குவம், மாஅயோயே!
பாசறை அருந் தொழில் உதவி, நம்
காதல் நல் நாட்டுப் போதரும் பொழுதே.
பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவ வரவின்கண் உருவு வெளிப்பாடு கண்டு சொல்லியது. 6
 

 
447
பிணி வீடு பெறுக, மன்னவன் தொழிலே!
பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை,
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப,
பாடு சான்ற; காண்கம், வாணுதலே!
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் அவண் வினைமுற்றி மீளும் வேட்கையனாய், பருவ வரவின்கண் தலைமகளை நினைத்துச் சொல்லியது. 7
 

 
448
தழங்குரல் முரசம் காலை இயம்ப,
கடுஞ் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே;
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே;
5
அம் சில் ஓதியை உள்ளுதொறும்,
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே.
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் பருவம் வந்த இடத்தினும் மீளப் பெறாது, அரசன் செய்தியும், பருவத்தின் செய்தியும், தன் செய்தியும், கூறி ஆற்றானாயது. 8
 

 
449
முரம்பு கண் உடையத் திரியும் திகிரியொடு
பணை நிலை முணைஇய வயமாப் புணர்ந்து,
திண்ணிதின் மாண்டன்று தேரே;
ஒண்ணுதல் காண்குவம், வேந்து வினை விடினே.
பாசறைக்கண் வேந்தனொடு வினைப் பொருட்டால் போந்திருந்த தலைமகன் அவ் வேந்தன் மாற்று வேந்தர் தரு திறைகொண்டு மீள்வானாகப் பொருந்துழி, தானும் மீட்சிக்குத் தேர் சமைத்த எல்லைக்கண்ணே, அவ் அரசன், பொருத்தம் தவிர்ந்து மீண்
 

 
450
முரசு மாறு இரட்டும் அருந் தொழில் பகை தணிந்து
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்;
வெய்ய உயிர்க்கும் நோய் தணிய,
செய்யோள் இளமுலைப் படீஇயர், என் கண்ணே!
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முற்றாமையின், பாசறைக்கண் இருந்து, தன் மனக்கருத்து  த்தது. 10
 

 
477
பனி மலர் நெடுங் கண் பசலை பாய,
துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள்
கையறு நெஞ்சிற்கு உயவுத் துணை ஆக,
சிறு வரைத் தங்குவைஆயின்,
5
காண்குவை மன்னால் பாண! எம் தேரே.
தலைமகள்மாட்டுப் பாணனைத் தூதாக விடுத்த தலைமகன் கூறியது. 7
 

 
478
'நீடினம்' என்று கொடுமை தூற்றி,
வாடிய நுதலள் ஆகி, பிறிது நினைந்து,
யாம் வெங் காதலி நோய் மிகச் சாஅய்,
சொல்லியது  மதி, நீயே
5
முல்லை நல் யாழ்ப் பாண! மற்று எமக்கே?
பிரிந்து உறையும் தலைமகன் தலைமகள் விட்ட தூதாய்ச் சென்ற பாணனை, 'அவள் சொல்லிய திறம் கூறு' எனக் கேட்டது. 8
 

 
479
சொல்லுமதி பாண! சொல்லுதோறு இனிய
நாடு இடை விலங்கிய எம்வயின், நாள்தொறும்,
அரும் பனி கலந்த அருள் இல் வாடை
தனிமை எள்ளும் பொழுதில்,
5
பனி மலர்க் கண்ணி கூறியது எமக்கே.
தலைவி விடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைமகன், 'இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூற வேண்டும்' எனக் கூறியது. 9
 

 
481
சாய் இறைப் பணைத் தோள், அவ் வரி அல்குல்,
சேயிழை மாதரை உள்ளி, நோய் விட
முள் இட்டு ஊர்மதி, வலவ! நின்
புள் இயல் கலி மாப் பூண்ட தேரே.
5
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
 

 
482
தெரிஇழை அரிவைக்குப் பெரு விருந்து ஆக
வல்விரைந்து கடவுமதி பாக! வெள் வேல்
வென்று அடு தானை வேந்தனொடு
நாள் இடைச் சேப்பின், ஊழியின் நெடிதே! 2
 

 
483
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே;
வேந்து விட்டனனே; மா விரைந்தனவே;
முன்னுறக் கடவுமதி, பாக!
நல் நுதல் அரிவை தன் நலம்பெறவே. 3
 

 
484
வேனில் நீங்கக் கார் மழை தலைஇ,
காடு கவின் கொண்டன்று பொழுது; பாடு சிறந்து
கடிய கடவுமதி, பாக!
நெடிய நீடினம், நேரிழை மறந்தே. 4
 

 
485
அரும் படர் அவலம் அவளும் தீர,
பெருந் தோள் நலம்வர யாமும் முயங்க,
ஏமதி, வலவ! தேரே
மா மருண்டு உகளும் மலர் அணிப் புறவே. 5
 

 
486
பெரும் புன் மாலை ஆனாது நினைஇ,
அரும் படர் உழத்தல் யாவது? என்றும்
புல்லி ஆற்றாப் புரையோள் காண
வள்பு தெரிந்து ஊர்மதி, வலவ! நின்
புள் இயல் கலி மாப் பூண்ட தேரே. 6
 

 
487
இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே;
செறிதொடி உள்ளம் உவப்ப
மதிஉடை வலவ! ஏமதி தேரே. 7
 

 
488
கருவி வானம் பெயல் தொடங்கின்றே;
பெரு விறல் காதலி கருதும் பொழுதே;
விரி உளை நன் மாப் பூட்டி,
பருவரல் தீர, கடவுமதி தேரே! 8
 

 
489
அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப,
மென் புல முல்லை மலரும் மாலை,
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப,
நுண் புரி வண் கயிறு இயக்கி, நின்
வண் பரி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 9
 

 
490
அம் தீம் கிளவி தான் தர, எம் வயின்
வந்தன்று
.....................................................................................................
ஆய் மணி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 10
 

 
491
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய,
நொந்து நொந்து உயவும் உள்ளமொடு
வந்தனெம் மடந்தை! நின் ஏர் தர விரைந்தே.
வினை முற்றிப் புகுந்த தலைமகன் தலைவிக்குச் சொல்லியது. 1
 

 
492
நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நல் நுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மா மருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்
5
நல் நுதல் அரிவை! காரினும் விரைந்தே.
இதுவும் அது. 2
 

 
493
ஏறு முரண் சிறப்ப, ஏறு எதிர் இரங்க,
மாதர் மான் பிணை மறியொடு மறுக,
கார் தொடங்கின்றே காலை
நேர் இறை முன்கை! நின் உள்ளி யாம் வரவே.
இதுவும் அது. 3
 

 
494
வண்டு தாது ஊத, தேரை தெவிட்ட,
தண் கமழ் புறவின் முல்லை மலர,
இன்புறுத்தன்று பொழுதே;
நின் குறி வாய்த்தனம்; தீர்க, இனிப் படரே!
இதுவும் அது. 4
 

 
495
செந் நில மருங்கில் பல் மலர் தாஅய்,
புலம்பு தீர்ந்து, இனியஆயின, புறவே
பின் இருங் கூந்தல் நல் நலம் புனைய,
உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு,
5
முள் எயிற்று அரிவை! யாம் வந்தமாறே.
இதுவும் அது. 5
 

 
மேல்