தொடக்கம்   முகப்பு
வேங்கை
208
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! கானவர்
கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப்
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு,
மணி நிற மால் வரை மறைதொறு, இவள்
5
அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே.
செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப் பட்ட பின்பு, 'இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னின் தீர்ந்தது' என்பது குறிப்பின் தோன்ற அவட்குச் சொல்லியது. 8
 

 
217
பெரு வரை வேங்கைப் பொன் மருள் நறு வீ
மான் இனப் பெருங் கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவும், இவள்
மேனி பசப்பது எவன்கொல்? அன்னாய்!
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சி உணர்ந்த தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது. 7
 

 
219
கருங் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ
இருங் கல் வியல் அறை வரிப்பத் தாஅம்
நல் மலை நாடன் பிரிந்தென,
ஒள் நுதல் பசப்பது எவன்கொல்? அன்னாய்!
வரைவிடை வைத்துப் பிரிந்த அணுமைக்கண்ணே ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 9
 

 
259
குன்ற குறவன் காதல் மட மகள்
மன்ற வேங்கை மலர் சில கொண்டு,
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி,
தேம் பலிச் செய்த ஈர் நறுங் கையள்;
5
மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே.
வரையத் துணிந்த தலைமகன் வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு, 'இனி அது கடுக முடியும்' என உவந்த உள்ளத்தனாய், தன்னுள்ளே சொல்லியது. 9
 

 
276
மந்திக் காதலன் முறி மேய் கடுவன்
தண் கமழ் நறைக் கொடி கொண்டு, வியல் அறைப்
பொங்கல் இள மழை புடைக்கும் நாட!
நயவாய்ஆயினும் வரைந்தனை சென்மோ
5
கல் முகை வேங்கை மலரும்
நல் மலை நாடன் பெண்டு எனப் படுத்தே!
வரையாது வந்தொழுகும் தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 6
 

 
294
எரி மருள் வேங்கை இருந்த தோகை
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட!
இனிது செய்தனையால்; நுந்தை வாழியர்!
நல் மனை வதுவை அயர, இவள்
5
பின் இருங் கூந்தல் மலர் அணிந்தோயே!
வதுவை செல்லாநின்றுழித் தலைமகற்குத் தோழி கூறியது. 4
 

 
297
விரிந்த வேங்கைப் பெருஞ் சினைத் தோகை
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாட!
பிரியினும், பிரிவது அன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே.
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 7
 

 
311
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்,
ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம்
காடு இறந்தனரே காதலர்;
'நீடுவர்கொல்' என நினையும், என் நெஞ்சே!
'ஆற்றது அருமை நினைந்து, நீ ஆற்றாயாதல் வேண்ட; அவர் அவ்வழி முடியச் சென்றார்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 1
 

 
367
பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ,
விரிஇணர் வேங்கையொடு, வேறு பட மிலைச்சி,
விரவு மலர் அணிந்த வேனில் கான் யாற்றுத்
தேரொடு குறுக வந்தோன்
5
பேரொடு புணர்ந்தன்று அன்னை! இவள் உயிரே.
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 7
 

 
385
'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி,
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய,
வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக்
கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்!
5
நல் தோள் நயந்து பாராட்டி,
எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே.
வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5
 

 
396
புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின்
கதுப்பு அயல் அணியும் அளவை, பைபயச்
சுரத்திடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை!
கல் கெழு சிறப்பின் நம் ஊர்
5
எல் விருந்து ஆகிப் புகுகம், நாமே.
இதுவும் அது. 6
 

 
மேல்