தொடக்கம் முகப்பு
மருதம்
 
1
'வாழி ஆதன், வாழி அவினி!
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
5
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க!' என வேட்டேமே.
புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது'எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டு தலைவியோடு கூடி ஒழுகாநின்ற தலைமகன்தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது.

 
2
'வாழி ஆதன், வாழி அவினி!
விளைக வயலே! வருக இரவலர்!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
5
தண் துறை ஊரன் கேண்மை
வழிவழிச் சிறக்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 2
 

 
3
'வாழி ஆதன், வாழி அவினி!
பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'வித்திய உழவர் நெல்லொடு பெயரும்,
5
பூக் கஞல் ஊரன் தன் மனை
வாழ்க்கை பொலிக!' என வேட்டேமே.
இதுவும் அது. 3
 

 
4
'வாழி ஆதன், வாழி அவினி!
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'பூத்த கரும்பின், காய்த்த நெல்லின்,
5
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 4
 

 
5
'வாழி ஆதன், வாழி அவினி!
பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'முதலைப் போத்து முழு மீன் ஆரும்
5
தண் துறை ஊரன் தேர் எம்
முன்கடை நிற்க' என வேட்டேமே.
இதுவும் அது. 5
 

 
6
'வாழி ஆதன், வாழி அவினி!
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'மலர்ந்த பொய்கை, முகைந்த தாமரைத்
5
தண் துறை ஊரன் வரைக!
எந்தையும் கொடுக்க! என வேட்டேமே.
களவினில் பலநாள் ஒழுகிவந்து, வரைந்து கொண்ட தலைமகன் தோழியோடு சொல்லாடி, 'யான் வரையாது ஒழுகுகின்ற நாள் நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது. 6
 

 
7
'வாழி ஆதன், வாழி அவினி!
அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'உளைப் பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும்
5
தண் துறை ஊரன் தன் ஊர்க்
கொண்டனன் செல்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 7
 

 
8
'வாழி ஆதன், வாழி அவினி!
அரசு முறை செய்க! களவு இல்லாகுக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'அலங்குசினை மாஅத்து அணி மயில் இருக்கும்
5
பூக் கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பதாக!' என வேட்டேமே.
இதுவும் அது. 8
 

 
9
'வாழி ஆதன், வாழி அவினி!
நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
5
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 9
 

 
10
'வாழி ஆதன், வாழி அவினி!
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
என வேட்டோளே, யாயே: யாமே,
'பூத்த மாஅத்து, புலால்அம் சிறு மீன்,
5
தண் துறை ஊரன் தன்னொடு
கொண்டனன் செல்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 10
 

 
11
மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி,
'நல்லன்' என்றும், யாமே;
'அல்லன்' என்னும், என் தட மென் தோளே.
பாணன் முதலாயினார்க்குத் தலைமகன் கொடுமை கூறி வாயில் மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு வாயில் நேர்வாள், சொல்லியது. 'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னால் புலப்படுதல் தகாது' என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். 1

 


 
12
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுகதில்ல, யாமே;
தோற்கதில்ல, என் தட மென் தோளே.
உழையர் நெருங்கிக் கூறிய திறமும் தனது ஆற்றாமையும் நினைந்து, வாயில் நேரக் கருதிய தலைமகள், 'பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான்' என்பது கேட்டு, பொறாளாய்க் கருத்து அழிந்து, தன்னுள்ளே சொல்லியது. 2

 


 
13
பரியுடை நல் மான் பொங்குஉளை அன்ன
அடைகரை வேழம் வெண் பூப் பகரும்,
தண் துறை ஊரன் பெண்டிர்,
துஞ்சு ஊர் யாமத்தும், துயில் அறியலரே.
வாயிலாய்ப் புக்கார்க்குத் தலைமகள், 'அவன் பெண்டிர் நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?' எனச் சொல்லி வாயில் மறுத்தது. 3

 
14
கொடிப் பூ வேழம் தீண்டி, அயல
வடிக்கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித் துறை ஊரன் மார்பே
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே.
தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, 'அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைந்து ஆற்றாயாகின்றது என்னை?' என்றாட்கு, அவன் கொடியனேஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து ’ஆதலால் காண்’ எனச் சொல்லியது. 4

 
15
மணல் ஆடு மலிர்நிறை விரும்பிய, ஒண் தழை
புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும், ஊரன் அல்லன்னே.
சேணிடைப் பிரிந்து வந்து உடன் உறைகின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினான் உணர்ந்து, தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, ' அவன் உடன்உறையவும் வேறுபடுகின்றது என்னை?' என்றட்கு அவள் சொல்லியது. 5

 
16
ஓங்கு பூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக் கஞல் ஊரனை உள்ளி,
பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே.
வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது. 6

 
17
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிது ஆகின்று, என் மடம் கெழு நெஞ்சே.
தலைமகன் பரத்தையிற் பிரிந்த வழி, 'இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7

 
18
இருஞ் சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்,
பொருந்து மலர் அன்ன என் கண் அழ,
பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே?
பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின் அவ் ஓழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. 8

 
19
எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை,
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்,
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி,
5
மாரி மலரின் கண் பனி உகுமே.
'பல் நாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளையாகிய நீ சில் நாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்கு, 'எதிர்ப்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது. 9

 
20
அறு சில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச் சினை சீக்கும்,
காம்பு கண்டன்ன தூம்புடை, வேழத்துத்
துறை நணி ஊரனை உள்ளி, என்
5
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே.
தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாராயினும், அவர் திறம் மறவாதொழியல் வேண்டும்' என்று முகம்புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் தலைமகள் சொல்லியது. 10

 
21
முள்ளி நீடிய முது நீர் அடைகரைப்
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்
தண் துறை ஊரன் தெளிப்பவும்,
உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!'
'புறத்தொழுக்கம் எனக்கு இனி இல்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத் தோழி சொல்லியது. 1

 
22
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து, 'இனி
நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!'
களவினில் புணர்ந்து. பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்றதலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகியதலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2

 
23
முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டி,
பூக் குற்று, எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நப்புணர்ந்து, இனித்
தாக்கு அணங்கு ஆவது எவன்கொல்? அன்னாய்!
இதுவும் அது. 3

 
24
தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்
பொலந் தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
5
நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்!
'பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான்' என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்ப, தலைமகட்குச் சொல்லியது. 4

 
25
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங் காய்
வயலைச் செங் கொடி களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்!
இதுவும் அது. 5

 
26
கரந்தைஅம் செறுவில் துணை துறந்து, களவன்
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்
எம்மும், பிறரும், அறியான்;
இன்னன் ஆவது எவன்கொல்? அன்னாய்!
தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 'நின் முனிவிற்கு அவன்பொருந்தாநின்றான்' என்றவழி, தலைமகட்குத் தோழி, 'அவன்பாடு அஃது இல்லை' என்பதுபடச் சொல்லியது. 6

 
27
செந்நெல்அம் செறுவில் கதிர் கொண்டு, களவன்
தண்ணக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழச் சாஅய்,
அல்லல் உழப்பது எவன்கொல்? அன்னாய்!
தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, 'புறத்தொழுக்கம் உளதாயிற்று' எனக் கருதி வருந்தும் தலைமகட்குத் தோழி சொல்லியது7.

 
28
உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின்,
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண் தொடி நெகிழச் சாஅய்,
மென் தோள் பசப்பது எவன்கொல்? அன்னாய்!
இற்செறிவித்த இடத்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, 'இது தெய்வத்தினான் ஆயிற்று' என்று, தமர் வெறி எடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8

 
29
மாரி கடி கொள, காவலர் கடுக,
வித்திய வெண் முளை களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு உற மரீஇ,
திதலை அல்குல் நின் மகள்
5
பசலை கொள்வது எவன்கொல்? அன்னாய்!
வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தோடு நின்றது. 9

 
30
வேப்பு நனை அன்ன நெடுங் கண் களவன்
தண்ணக மண் அளை நிறைய, நெல்லின்
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள்
பெருங் கவின் இழப்பது எவன்கொல்? அன்னாய்!
இதுவும் அது. 10

 
31
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர்
முடம் முதிர் மருதத்துப் பெருந் துறை
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே?
முன் ஒரு நாள் தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன் பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது.

 
32
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள்
அழுப என்ப, அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.
வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2

 
33
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந் துறை,
பெண்டிரொடு ஆடும் என்ப தன்
தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே.
இதுவும் அது. 3

 
34
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கைப் பூத்த, புழைக் கால் ஆம்பல்
தாது ஏர் வண்ணம் கொண்டன
ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே.
இதுவும் அது. 4

 
35
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே;
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே.
வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 5

 
36
அம்ம வாழி, தோழி! ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே
கயல் எனக் கருதிய உண் கண்
5
பசலைக்கு ஒல்காவாகுதல் பெறினே.
தான் வாயில் நேரும் குறிப்பினளானமை அறியாது, தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது. 6

 
37
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்து, பனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்;
தேற்றான், உற்ற சூள் வாய்த்தல்லே.
தலைமகளைச் சூளினால் தெளித்தான் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது. 7

 
38
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தண் தளிர் வௌவும் மேனி,
ஒண் தொடி முன்கை, யாம் அழப் பிரிந்தே.
தலைமகன் மனைவயிற் போகக் கருதினான் என்பது சொல்லிய தன் தோழிக்குப் பரத்தை சொல்லியது. 8

 
39
அம்ம வாழி, தோழி! ஊரன்
வெம் முலை அடைய முயங்கி, நம் வயின்
திருந்து இழைப் பணைத்தோள் நெகிழ,
பிரிந்தனன் ஆயினும், பிரியலன் மன்னே.
ஒரு ஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, 'அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான்' என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது.

 
40
'அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒண் தொடி முன்கை யாம் அழப் பிரிந்து, தன்
பெண்டிர் ஊர் இறைகொண்டனன்' என்ப
கெண்டை பாய்தர அவிழ்ந்த
5
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே.
உலகியல் பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று, அயற் பரத்தையர் பலரும் கூறினார் என்பது கேட்ட காதல்பரத்தை, அவர் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது

 
41
'தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு
வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர்' என்ப; அதனால்
தன் சொல் உணர்ந்தோர் மேனி
பொன் போல் செய்யும் ஊர்கிழவோனே.
கழறித் தெருட்டற் பாலராகிய அகம் புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலாகிய பக்கத்தாரையும் இகழ்ந்து, தலைவி கூறியது. 1

 
42
மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாணர் ஊர! நின் மாண் இழை அரிவை?
காவிரி மலிர்நிறை அன்ன நின்
மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே.
தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, 'தலைவன் பிற பரத்தையருடன் ஒழுகினான்' என்று புலந்தாளாக, அதனை அறிந்த தலைவி, அவன் தன் இல்லத்துப் புகுந்துழி, தான் அறிந்தமை தோன்றச் சொல்லியது. 2

 
43
அம்பணத்து அன்ன யாமை ஏறி,
செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்
பாணன் பொய்யன்; பல சூளினனே.
பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது. 3

 
44
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத்
தாய் முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு,
அதுவே ஐய, நின் மார்பே;
அறிந்தனை ஒழுகுமதி; அறனுமார் அதுவே.
பரத்தையர் மனைக்கண்ணே பல் நாள் தங்கி, தன் மனைக்கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 4

 
45
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே.
நெடுநாள் பரத்தையர் இடத்தனாய் ஒழுகிய தலைமகன் மனைவயின் சென்றுழித் தோழி சொல்லியது. 5

 
46
நினக்கே அன்று அஃது, எமக்குமார் இனிதே
நின் மார்பு நயந்த நல் நுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை ஆகி,
ஈண்டு நீ அருளாது, ஆண்டு உறைதல்லே.
மனைக்கண் வருதல் பரத்தை விலக்க விலங்கி, பின்பு, உலகியல் பற்றி, அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி தலைமகனைப் புலந்து சொல்லியது. 6

 
47
முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர!
மாண் இழை ஆயம் அறியும் நின்
5
பாணன் போலப் பல பொய்த்தல்லே.
பாணற்கு வாயில் மறுத்த தலைமகள் பின் அப் பாணனோடு தலைமகன் புகுந்து, தன் காதன்மை கூறியவழிச் சொல்லியது. 7

 
48
வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம், பெரும! நின் பரத்தை
5
ஆண்டுச் செய் குறியொடு ஈண்டு நீ வரலே.
பரத்தையர்மாட்டு ஒழுகாநின்று தன் மனைக்கண்
சென்ற தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 8

 
49
அம் சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சில் மீன் சொரிந்து, பல் நெற்பெறூஉம்
யாணர் ஊர! நின் பாண்மகன்
யார் நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே?
பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள் தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது. 9

 
50
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர!
தஞ்சம் அருளாய் நீயே; நின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.
மனையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பல் நாள் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 10

 
51
நீர் உறை கோழி நீலச் சேவல்
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத்து அன்று, நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே.
வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. 1

 
52
வயலைச் செங் கொடிப் பிணையல் தைஇச்
செவ் விரல் சிவந்த சேயரி மழைக் கண்
செவ் வாய்க் குறுமகள் இனைய;
எவ் வாய் முன்னின்று மகிழ்ந! நின் தேரே?
வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 2

 
53
துறை எவன் அணங்கும், யாம் உற்ற நோயே?
சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர! நீ உற்ற சூளே.
தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இதுபரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி, 'தெய்வங்கள் உறையும் துறைக்கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்தது கொல், நினக்கு இவ்

 
54
திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ,
ஊரின் ஊரனை நீ தர, வந்த
5
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே.
வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4

 
55
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்,
தேர் வண் கோமான், தேனூர் அன்ன இவள்
நல் அணி நயந்து நீ துறத்தலின்,
பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே.
வரைந்த அணிமைக்கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து, தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 5

 
56
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா,
வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு சுடர் நுதல் தேம்ப,
எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே?
புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6

 
57
பகலில் தோன்றும் பல் கதிர்த் தீயின்
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய,
அனைநலம் உடையோளோ மகிழ்ந! நின் பெண்டே?
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்ட தோழி அவனை வினாயது. 7

 
58
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்,
கை வண் விராஅன், இருப்பை அன்ன
இவள் அணங்குற்றனை போறி;
பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே!
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி கூறியது. 8

 
59
கேட்டிசின் வாழியோ, மகிழ்ந! ஆற்றுற,
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்கு மருந்து ஆகிய யான், இனி,
இவட்கு மருந்து அன்மை நோம், என் நெஞ்சே.
தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழி ஆற்றாளாகிய தோழி சொல்லியது. 9

 
60
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனி ஊர! நின் மொழிவல்: என்றும்
துஞ்சு மனை நெடு நகர் வருதி;
அஞ்சாயோ, இவள் தந்தை கை வேலே?
வரையாது ஒழுகும் தலைமகன் இரவுக்குறி வந்துழித் தோழி சொல்லியது. 10

 
61
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்,
கை வண் மத்தி, கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி,
5
வதுவை அயர விரும்புதி நீயே.
'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையைச் சில் நாளில் விட்டு, மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள் அவன் மனைவயின் புக்குழிப் புலந்தாளாக,'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது'

 
62
இந்திர விழவில் பூவின் அன்ன
புன் தலைப் பேடை வரி நிழல் அகவும்
இவ் ஊர் மங்கையர்த் தொகுத்து, இனி
எவ் ஊர் நின்றன்று மகிழ்ந! நின் தேரே?
இதுவும் அது. 2

 
63
பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர!
எம் நலம் தொலைவது ஆயினும்
துன்னலம் பெரும! பிறர்த் தோய்ந்த மார்பே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது. 3

 
64
அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ
நலம் மிகு புதுப் புனல் ஆட, கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்;
பலரே தெய்ய; எம் மறையாதீமே.
தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள் அவன் மறைத்துழிச் சொல்லியது. 4

 
65
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர!
புதல்வனை ஈன்ற எம் மேனி
முயங்கன்மோ தெய்ய; நின் மார்பு சிதைப்பதுவே.
ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 5

 
66
உடலினென் அல்லேன்; பொய்யாது  மோ:
யார் அவள், மகிழ்ந! தானே தேரொடு,
தளர் நடைப் புதல்வனை உள்ளி, நின்
வள மனை வருதலும் வௌவியோளே?
புதல்வனைப் பிரியாதவன் பிரிந்து, புறத்துத் தங்கி, வந்தானாக, அவனோடு புலந்து தலைமகள் சொல்லியது. 6

 
67
மடவள் அம்ம, நீ இனிக் கொண்டோளே
'தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெரு நலம் தருக்கும்' என்ப: விரிமலர்த்
தாது உண் வண்டினும் பலரே,
5
ஓதி ஒள் நுதல் பசப்பித்தோரே.
தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை புறன்  த்தாள் எனக் கேட்ட தலைவி தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது. 7

 
68
கன்னி விடியல், கணைக் கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர!
பேணாளோ நின் பெண்டே
யான் தன் அடக்கவும், தான் அடங்கலளே?
பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறி வைத்து, தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி தலைமகற்குச் சொல்லியது. 8

 
69
கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின் பெண்டே?
பலர் ஆடு பெருந் துறை, மலரொடு வந்த
தண் புனல் வண்டல் உய்த்தென,
உண்கண் சிவப்ப, அழுது நின்றோளே!
தலைமகன் பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக் களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், 'தனக்கு இல்லை' என்று அவன் மறைத்துழிச் சொல்லியது. 9

 
70
பழனப் பல் மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மா நீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர்; நறியர் நின் பெண்டிர்:
5
பேஎய் அனையம், யாம்; சேய் பயந்தனமே.
பரத்தையரோடு பொழுது போக்கி நெடிது துய்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. 10

 
71
சூது ஆர் குறுந் தொடிச் சூர் அமை நுடக்கத்து
நின் வெங் காதலி தழீஇ, நெருநை
ஆடினை என்ப, புனலே; அலரே
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந?
5
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே?
பரத்தையரோடு புனலாடினான் எனக் கேட்டுப் புலந்த தலைமகள் தலைமகன் அதனை இல்லை என்று மறைத்துழிச் சொல்லியது. 1

 
72
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத்
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்
மலர் ஆர் மலிர்நிறை வந்தென,
5
புனல் ஆடு புணர்துணை ஆயினள், எமக்கே.
தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப் புனல் ஆட வேண்டிய தலைமகன் களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. 2

 
73
வண்ண ஒண் தழை நுடங்க, வால் இழை
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தென,
கள் நறுங் குவளை நாறித்
தண்ணென்றிசினே பெருந் துறைப் புனலே.
இதுவும் அது. 3

 
74
விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே
பசும் பொன் அவிர் இழை பைய நிழற்ற,
கரை சேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண் நறுங் கதுப்பே.
இதுவும் அது. 4

 
75
பலர் இவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால்,
அலர் தொடங்கின்றால் ஊரே மலர
தொல் நிலை மருதத்துப் பெருந் துறை,
நின்னோடு ஆடினள், தண் புனல் அதுவே.
பரத்தையோடு புனலாடி வந்த தலைமகன் அதனை மறைத்துக் கூறியவழித் தோழி கூறியது. 5

 
76
பைஞ்சாய்க் கூந்தல், பசு மலர்ச் சுணங்கின்
தண் புனலாடி, தன் நலம் மேம்பட்டனள்
ஒண் தொடி மடவரல், நின்னோடு,
அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.
இதுவும் அது. 6

 
77
அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்:
பேர் ஊர் அலர் எழ, நீர் அலைக் கலங்கி,
நின்னொடு தண் புனல் ஆடுதும்;
எம்மொடு சென்மோ; செல்லல், நின் மனையே.
முன் ஒரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக்கேட்டு, ' இவனுடன் இனி ஆடேன்' என உட்கொண்ட பரத்தை, ' புதுப்புனல் ஆடப் போது' என்ற தலைமகற்குச் சொல்லியது. 7

 
78
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி
மதில் கொல் யானையின், கதழ்பு, நெறி வந்த,
சிறை அழி புதுப்புனல் ஆடுகம்;
எம்மொடு கொண்மோ, எம் தோள் புரை புணையே.
இதுவும் அது. 8

 
79
'புதுப் புனல் ஆடி அமர்த்த கண்ணள்,
யார் மகள், இவள்?' எனப் பற்றிய மகிழ்ந!
யார் மகளாயினும் அறியாய்;
நீ யார் மகனை, எம் பற்றியோயே?
தன்னோடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக் கேட்டு, தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை தானும் தனியே போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று, தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றி

 
80
புலக்குவெம் அல்லேம்; பொய்யாது  மோ:
நலத்தகு மகளிர்க்குத் தோள் துணை ஆகி,
தலைப் பெயல் செம் புனல் ஆடித்
தவ நனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே.
தன்னை ஒழியப் புதுப்புனலாடித் தாழ்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. 10

 
81
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலர் அணி வாயில் பொய்கை, ஊர! நீ
என்னை 'நயந்தனென்' என்றி; நின்
5
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே.
தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள் என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 1

 
82
வெகுண்டனள் என்ப, பாண! நின் தலைமகள்
'மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறுந் தார்த்
தாது உண் பறவை வந்து, எம்
போது ஆர் கூந்தல் இருந்தன' எனவே.
மனைவயிற் புகுந்த பாணற்குத் தலைமகன் கேட்குமாற்றால் தலைமகள் சொல்லியது. 2

 
83
மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை ஆகி, உய்ம்மோ நும் ஊர்
ஒண் தொடி முன் கை ஆயமும்
தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே.
வரைந்த அணுமைக்கண்ணே தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகிய வழி, அதனை அறிந்த தலைவி அவனோடு புலந்து சொல்லியது. 3

 
84
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள்,
கண்ணின் காணின், என் ஆகுவள்கொல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண் கயம் போல,
5
பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே?
பரத்தையர் மனைக்கண் தங்கிப் புணர்ச்சிக் குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 4

 
85
வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை
தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறு இல் யாணர் மலி கேழ் ஊர! நீ
சிறுவரின் இனைய செய்தி;
5
நகாரோ பெரும! நிற் கண்டிசினோரே?
தலைமகன் பரத்தையர்மேல் காதல் கூர்ந்து நெடித்துச் செல்வுழி, மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது. 5

 
86
வெண் தலைக் குருகின் மென் பறை விளிக் குரல்
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர!
எம் இவண் நல்குதல் அரிது;
நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே.
'புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்' என்பது அறிந்த பரத்தை அதற்குப் புலந்து, தலைமகற்குச் சொல்லியது. 6

 
87
பகன்றைக் கண்ணி பல் ஆன் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர! நின் மனையோள்
யாரையும் புலக்கும்; எம்மை மற்று எவனோ?
தலைமகள் தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட காதல்பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தலைமகனோடு புலந்து சொல்லியது. 7

 
88
வண் துறை நயவரும் வள மலர்ப் பொய்கைத்
தண் துறை ஊரனை, எவ்வை எம் வயின்
வருதல் வேண்டுதும் என்பது
ஒல்லேம் போல், யாம் அது வேண்டுதுமே.
தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் விருப்பு இல்லாதாள் போல, அவ்வாறு கோடலையே விரும்புவாள், 'அது தனக்கு முடியாது' எனத் தலைமகள் புறனுரைத்தாள் எனக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார்க்குச் சொல்லியது. 8

 
89
அம்ம வாழி, பாண! எவ்வைக்கு
எவன்? பெரிது அளிக்கும் என்ப பழனத்து
வண்டு தாது ஊதும் ஊரன்
பெண்டு என விரும்பின்று, அவள்தன் பண்பே.
'தலைமகன் தலைமகளைப் போற்றி ஒழுகாநின்றான்' என்பது கேட்ட காதல்பரத்தை அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 9

 
90
மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டான்கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும், அவன் புதல்வன் தாயே.
தலைமகன் தன் மனைக்கண் சொல்லாமல் தான் விலக்குகின்றாளாகத் தலைமகள் கூறினாள் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகன் கேட்குமாற்றால் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 10

 
91
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து
வெறி மலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும்
கழனி ஊரன் மகள் இவள்;
பழன வெதிரின் கொடிப் பிணையலளே.
குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள் விளைவு இலள்' எனச் சேட்படுத்தது. 1

 
92
கருங் கோட்டு எருமைச் செங் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்
நுந்தை, நும் ஊர் வருதும்
ஒண் தொடி மடந்தை! நின்னை யாம் பெறினே.
'நினக்கு வரைந்து தருதற்குக் குறை நின் தமர் அங்கு வந்து கூறாமையே' எனத் தோழி கூறினாளாக, தலைமகள் முகம் நோக்கி, 'இவள் குறிப்பினால் கூறினாள்' என்பது அறிந்த தலைமகன், 'வரைவு மாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் செ

 
93
எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தென,
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா,
செய்த வினைய மன்ற பல் பொழில்
தாது உண் வெறுக்கைய ஆகி, இவள்
5
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே.
முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. 3

 
94
மள்ளர் அன்ன தடங் கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையொடு வதியும்
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்,
5
கவின் பெறு சுடர்நுதல் தந்தை, ஊரே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீள்கின்றான் சொல்லியது. 4

 
95
கருங் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ,
நெடுங் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும்
புனல் முற்று ஊரன், பகலும்,
படர் மலி அரு நோய் செய்தனன், எமக்கே.
உண்டிக்காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கி, பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது. 5

 
96
அணி நடை எருமை ஆடிய அள்ளல்,
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்
கழனி ஊரன் மகள், இவள்;
பழன ஊரன் பாயல் இன் துணையே.
பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள் தம்முள்ளே சொல்லியது. 6

 
97
பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டைக்
கருந் தாள் எருமைக் கன்று வெரூஉம்,
பொய்கை, ஊரன் மகள், இவள்;
பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே.
புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், 'உளது' என்று புலந்த தலைமகளைப் புலவி நீக்கிய தலைமகன், புணர்ச்சியது இறுதிக்கண், தன்னுள்ளே சொல்லியது. 7

 
98
தண் புனல் ஆடும் தடங் கோட்டு எருமை
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர!
ஒண் தொடி மட மகள் இவளினும்
நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே?
புறத்தொழுக்கம் உளது ஆகிய துணையானே புலந்து வாயில் நேராத தலைமகள் கொடுமை தலைமகன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது. 8

 
99
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை,
கழனி எருமை, கதிரொடு மயக்கும்
பூக் கஞல் ஊரன் மகள், இவள்;
நோய்க்கு மருந்து ஆகிய பணைத் தோளோளே.
தோழி முதலாயினோர் தலைமகன் கொடுமை கூறி விலக்கவும் வாயில் நேர்ந்துழி, அவன் உவந்து சொல்லியது. 9

 
100
புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை,
மணல் ஆடு சிமையத்து, எருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகள், இவள்;
பாணர் நரம்பினும் இன் கிளவியளே.
வாயில் நேர்தற்பொருட்டு முகம்புகுவான் வேண்டி இயற்பழித்துழி, தலைமகள் இயற்பட மொழிந்த திறம் தலைமகற்குத் தோழி சொல்லியது. 10

 
மேல்