முகப்பு சொல் தேடல்

'வேட்டுவ' என்ற சொல் உள்ள பக்கம்

பெருங்கோழிநாய்கன்மகள் நக்கண்ணையார் :-இவராற் பாடப்பட்டோன் சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி. அவனைத் தானாக விரும்பி அவன் வெற்றியைப் பாராட்டி இவர் பாடிய பாடல்கள் மதிக்கற்பாலன; ‘பெருங்கோழி நாய்கன் மகள் ஒருவன் ஒத்த அன்பினாற் காமமுறாதவழியும் குணச் சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது’ (தொல். புறத்திணை. சூ. 28. ந.) என்பதும் இதனை வலியுறுத்தும்.

பெருஞ்சித்திரனார் :-அன்பில்லாதவர்கள் எவ்வளவு செல்வ முடையவர்களாக இருப்பினும் அவர்களை இவர் மதிப்பவரல்லர்; 162, 207-8. ஊக்க முதலிய இயல்பு வாய்ந்தவர்; 161. குமணனுடைய வண்மையைப் புலப்படுத்துதல் முகமாகக் கடையெழுவள்ளல்களின் வரலாறுகள் சிறுபாணாற்றுப்படையிற் போலச் சுருக்கமாக இவராற் கூறப்பெற்றுள்ளன; 158. தம்முடைய தாய், குழந்தைகள், மனைவி, சுற்றத்தார் ஆகிய இவர்கள் பசியால் வருந்துவதை இவர் குமணனுக்குக் கூறும் பகுதிகள் (159) கன்னெஞ்சையும் கரையச் செய்யும்; பசியால் வருந்தும் குழந்தைகளுக்கு அத்துன்பத்தைப் போக்குதற்பொருட்டு, அவ்வப்பொழுது தம் மனைவி செய்யும் உபாயங்களை இவர்கூறும் பகுதிகளும் (160) குமணனளித்த பரிசிலை அம்மனைவியிடங் கொடுத்து, “நீ இனிக் கவலையின்றி வாழ்” (163) என்று கூறுவனவும் அறிதற்பாலன; செய்யுளிலுள்ள பொருளமைதிகளை நோக்கியே இவருக்கு இப்பெயரை இட்டனர் போலும்; சித்திரம் - ஆச்சரியம். இவராற் பாடப்பட்டோன் குமணன்; இகழப்பட்டோர் : அதியமானெடுமானஞ்சி, இளவெளிமானென்பார்.

பெருங்தலைச்சாத்தனார் :-சாத்தனாரென்பது தெய்வத்தான் வந்த இவரது இயற்பெயர்; குமணனது தலையை இவர் பாதுகாத்தது பற்றியோ உறுப்புப் பற்றியோ இப்பெயர் முன் இவ்வடைமொழி சார்த் தப்பெற்றதுபோலும். ஆவூர் மூலங்கிழாரென்பவருடைய புதல்வர் இவர் (அகநா. 224) ; நள்ளியின் தம்பியாகிய இளங்கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் சேர்ந்திருந்தபொழுது சென்று இளவிச்சிக்கோவை மதியாமல் இளங்கண்டீரக்கோவைமட்டுந் தழுவி, அதற்குப் காரணமுங் கூறினர்; 151. தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு தம்முடைய வறுமைத்துன்பத்தைக் கூறித் தன் தலையைத் துணித்தற்கு அவன் வாள்கொடுப்ப அதனைக் கொண்டுசென்று இளங்குமணனுக்குக் காட்டி அவன் மனத்திலிருந்த மாறுபாட்டைப் போக்கினர்; 164-5. இவராற் பாடப்பட்டோரும் இவர் காலத்தவரும் இளங்கண்டீரக்கோ, இளவிச்சிக்கோ, குமணன், இளங்குமணன், கடிய நெடுவேட்டுவன், மூவனென்பார்: இவர் பாடல்கள் அகநானூற்றிலும், நற்றிணையிலும், திருவள்ளுவமாலையிலும், யாப்பருங்கலவிருத்தியுரையிலும் காணப்படுகின்றன.