காட்சி வாழ்த்து 


null
உரை
 

54.மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும்
   கூறி, வாழ்த்துதல்

வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே,
உள்ளியது முடித்தி; வாழ்க நின் கண்ணி!
வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத் தோள்,
ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இள முலை,
பூந் துகில் அல்குல், தேம் பாய் கூந்தல்,
5
மின் இழை, விறலியர் நின் மறம் பாட;
இரவலர் புன்கண் தீர, நாள் தொறும்,
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி,
அனையை ஆகன்மாறே, எனையதூஉம்
உயர் நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று,
10
இரு நில மருங்கின் நெடிது மன்னியரோ!-
நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்,
ஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுதரும்   
15
ஒல்லார் யானை காணின்,
நில்லாத் தானை இறை கிழவோயே!

துறை:காட்சி வாழ்த்து
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நில்லாத் தானை 
உரை
 

61.வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச்
   சிறப்புக் கூறுதல்

'பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின், சிறியிலை,
5
புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின், மா வண் பாரி
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என,
10
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;
'ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்;
ஈத்தொறும் மா வள்ளியன்' என நுவலும் நின்
நல் இசை தர வந்திசினே   ஒள் வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை,
15
நிலவின் அன்ன வெள் வேல் பாடினி
முழவில் போக்கிய வெள் கை
விழவின் அன்ன, நின் கலி மகிழானே.

துறை: காட்சி வாழ்த்து
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:புலாஅம் பாசறை  
உரை
 

64.மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச்
   சிறப்பொடு படுத்துக் கூறுதல்
 

வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்துப்
பொலம் பூண் வேந்தர் பலர்தில்; அம்ம!
அறம் கரைந்து வயங்கிய நாவின், பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி,
அந்தணர் அருங் கலம் ஏற்ப, நீர் பட்டு,   
5
இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து,
களிறு நிலை முணைஇய தார் அருந் தகைப்பின்,
புறஞ் சிறை வயிரியர்க் காணின், 'வல்லே
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி,
அலங்கும் பாண்டில், இழை அணிந்து ஈம்' என,   
10
ஆனாக் கொள்கையை ஆதலின், அவ் வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றியாங்கு, மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி,
காண்கு வந்திசின்   கழல் தொடி அண்ணல்!   
15
மை படு மலர்க் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு, உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி; அதனால்
பசியுடை ஒக்கலை ஒரீஇய
இசை மேம் தோன்றல்! நின் பாசறையானே.   
20

துறை:காட்சி வாழ்த்து

வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:உரைசால் வேள்வி   
உரை
 

82.வென்றிச் சிறப்பு

பகை பெருமையின், தெய்வம் செப்ப,
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்,
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி,
5
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல;
மறவர் மறல; மாப் படை உறுப்ப;
தேர் கொடி நுடங்க; தோல் புடை ஆர்ப்ப;
காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை
இன்ன வைகல் பல் நாள் ஆக  
10
பாடிக் காண்கு வந்திசின், பெரும!
பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வத்து, செற்றோர்
கொலக் கொலக் குறையாத் தானை, சான்றோர்
வண்மையும், செம்மையும், சால்பும், மறனும்,
புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை,
15
நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே.

துறை:
காட்சி வாழ்த்து
வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:வினை நவில் யானை
உரை
 

90.மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும்,
சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்

மீன் வயின் நிற்ப, வானம் வாய்ப்ப,
அச்சற்று, ஏமம் ஆகி, இருள் தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றி, தம் துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்று,
கழிந்தோர் உடற்றும் கடுந் தூ அஞ்சா                    5

ஒளிறு வாள் வய வேந்தர்
களிறொடு கலம் தந்து,
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
அகல் வையத்து பகல் ஆற்றி,
மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர,                 10

வாள் வலியுறுத்து, செம்மை பூஉண்டு,
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக!
ஈரம் உடைமையின், நீர் ஓரனையை;
அளப்பு அருமையின், இரு விசும்பு அனையை;             15

கொளக் குறைபடாமையின், முந்நீர் அனையை;
பல் மீன் நாப்பண் திங்கள் போல,
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உரு கெழு மரபின் அயிரை பரவியும்,
கடல் இகுப்ப வேல் இட்டும்,                           20

உடலுநர் மிடல் சாய்த்தும்,
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி,
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்!
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே!                     25

மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!
எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை!
இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந!
வெண் பூ வேளையொடு சுரை தலை மயக்கிய
விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே!                  30

உரவுக் கடல் அன்ன தாங்கு அருந் தானையொடு,
மாண் வினை! சாபம் மார்புற வாங்கி,
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தடக் கை,
வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின்,
மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில்,                35

ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு,
காழ் எஃகம் பிடித்து எறிந்து,
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை,
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே!               40

கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்,
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்,
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி,
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க,
கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப,                  45

செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக்,
காவிரிப் படப்பை நல் நாடு அன்ன,
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆறிய கற்பின், தேறிய நல் இசை,
வண்டு ஆர் கூந்தல், ஒண்தொடி கணவ!                 50

'நின் நாள் திங்கள் அனைய ஆக! திங்கள்
யாண்டு ஓரனைய ஆக! யாண்டே
ஊழி அனைய ஆக! ஊழி
வெள்ள வரம்பின ஆக! என உள்ளி,
காண்கு வந்திசின், யானே செரு மிக்கு                  55

உரும் என முழங்கும் முரசின்,
பெரு நல் யானை, இறை கிழவோயே!

துறை:காட்சி வாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்:வலி கெழு தடக் கை

உரை