பரிசில்துறைப் பாடாண் பாட்டு 


19.அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு
   நிகழ்ந்த இன்பச் சிறப்பும்

கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர்
கல்லுடை நெடு நெறி போழ்ந்து, சுரன் அறுப்ப,
ஒண் பொறிக் கழல் கால் மாறா வயவர்
திண் பிணி எஃகம் புலி உறை கழிப்ப,
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய   
5
உருவச் செந் தினை குருதியொடு தூஉய்,
மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர்,
கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச,
வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தெரிந்து,
அவ் வினை மேவலை: ஆகலின்,  
10
எல்லு நனி இருந்து, எல்லிப் பெற்ற
அரிது பெறு பாயல் சிறு மகிழானும்
கனவினுள் உறையும், பெருஞ் சால்பு, ஒடுங்கிய
நாணு மலி யாக்கை, வாள் நுதல் அரிவைக்கு
யார் கொல்? அளியை
15
இனம் தோடு அகல, ஊருடன் எழுந்து;
நிலம் கண் வாட, நாஞ்சில் கடிந்து; நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்
அன்ன ஆயின; பழனம் தோறும்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து,
20
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப,
அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த,
'இன்றோ அன்றோ; தொன்று ஓர் காலை
நல்லமன் அளியதாம்!' எனச் சொல்லி,
25
காணுநர் கை புடைத்து இரங்க,
மாணா மாட்சிய மாண்டன பலவே!

துறை:பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:வளன் அறு பைதிரம்
உரை
 

65.ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது    செல்வச் சிறப்புக் கூறுதல்

எறி பிணம் இடறிய செம் மறுக் குளம்பின்
பரியுடை நல் மா விரி உளை சூட்டி,
மலைத்த தெவ்வர் மறம் தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வில்லோர் மெய்ம்மறை! சேர்ந்தோர் செல்வ!  
5
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,
மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின்,
வேய் புரைபு எழிலிய விளங்கு இறைப் பணைத் தோள்,
காமர் கடவுளும் ஆளும் கற்பின்,
சேண் நாறு நறு நுதல், சேயிழை கணவ!
10
பாணர் புரவல! பரிசிலர் வெறுக்கை!
பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப! நின்
நாள் மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு,  
15
சேறு செய் மாரியின், அளிக்கும் நின்
சாறு படு திருவின் நனை மகிழானே.

துறை:பரிசில்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நாள் மகிழ் இருக்கை
உரை