பாணாற்றுப்படை 


67.கொடைச் சிறப்பு

கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்,
கடன் அறி மரபின் கை வல் பாண!
தென் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை
கொல் படை தெரிய, வெல் கொடி நுடங்க,
5
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப,
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர,
அமர்க்கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின்
குழூஉச் சிறை எருவை குருதி ஆர,
தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு
10
உரு இல் பேய் மகள் கவலை கவற்ற,
நாடுடன் நடுங்க, பல் செருக் கொன்று;
நாறு இணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணியர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
நெறி படு மருப்பின் இருங் கண் மூரியொடு
15
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர்
எஃகு ஆடு ஊனம் கடுப்ப, மெய் சிதைந்து;
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய்,
20
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக்
கல் உயர் நேரிப் பொருநன்,
செல்வக் கோமான் பாடினை செலினே.

துறை:
பாணாற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வெண் போழ்க் கண்ணி
உரை