51.மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல் | | துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர, விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும் கடல் சேர் கானல் குட புலம் முன்னி, வல் துழந்த தடந் தாள் நாரை குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும், | 5 | வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின் அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும், தூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து, இயலினள், ஒல்கினள், ஆடும் மட மகள் | 10 | வெறி உறு நுடக்கம் போலத் தோன்றி, பெரு மலை, வயின் வயின் விலங்கும் அருமணி அர வழங்கும், பெருந் தெய்வத்து, வளை ஞரலும் பனிப் பௌவத்து, குண குட கடலோடு ஆயிடை மணந்த | 15 | பந்தர் அந்தரம் வேய்ந்து, வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் நனை உறு நறவின் நாடுடன் கமழ, சுடர் நுதல், மட நோக்கின், வாள் நகை, இலங்குஎயிற்று, | 20 | அமிழ்து பொதி துவர் வாய், அசை நடை விறலியர் பாடல் சான்று நீடினை உறைதலின், 'வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்!' என, உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே? மழை தவழும் பெருங் குன்றத்து, | 25 | செயிருடைய அரவு எறிந்து, கடுஞ் சினத்த மிடல் தபுக்கும் பெருஞ் சினப் புயல் ஏறு அனையை; தாங்குநர் தடக் கை யானைத் தொடிக் கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர், நின் படைவழி வாழ்நர்; | 30 | மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து, நிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப, தூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமை கை வல் இளையர் கை அலை அழுங்க, மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம் | 35 | வலை விரித்தன்ன நோக்கலை; கடியையால், நெடுந்தகை செருவத்தானே. | | துறை:வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு:செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர்:வடு அடு நுண் அயிர் | |
|
|