10

வீரர்களைச் சிறை செய்து, அவர் மனைவியரைப் பிணித்துக் கொணர்ந்தும்,
அப்பகைவர் தலையில் எண்ணெயிட்டுக் கையைப் பின்னே கட்டி நிறுத்தியும்
பல வேறுவகையில் தன் சினத்தை வெளிப்படுத்தினான்.

     பகைவர் நாடுகளின் பழைய நிலையையும் பாழ்பட்டபின்னர் அவை
இருந்த நிலையையும் விரிவாக எடுத்துரைக்கும் செய்யுட்கள் பல இந்நூலில்
உள்ளன. அன்பும், அருளும், கல்வியும், மெய்ஞ்ஞானமும், நல்லொழுக்கமும்
ஒருங்கே அமைந்து குடிமக்களால் தெய்வமாக எண்ணப்படும் ஓரரசன்
பகைவரைப் பொரும் விக்ஷயத்தில் காலனையே போன்று கடுஞ்சினத்தோடு
சென்று போரிட்டு அவர் வாழ்வையும் நாட்டையும் நாட்டு மக்களையும்
சிதைத்துக் குலைத்து வெற்றிபெற்று அந்த வெற்றிக் களிப்பினால் தான்
பெற்ற பொருளை யெல்லாம் யாவருக்கும் வாரி வீசி மகிழ்கிறான். அரசியலில்
குடிமக்களைப் பாதுகாக்கும் திறத்தில் அவன் செய்யும் செயல்கள் யாவும்
சிந்தைக்கு இனிக்கின்றன. பகைவரைத் துன்புறுத்தும் திறத்தில் அவன்
செய்யும் செயல்கள் உள்ளத்தை நடுங்கச் செய்கின்றன. போரினால்
உண்டாகும் அழிவை அவ்வரசன் எண்ணி இரங்குவதில்லை. புலவர்கள்
மாத்திரம் அதனைக் கூறி இரங்குகின்றனர். அவர்களுடைய இரக்கம் பின்னும்
அரசனது பெருமிதத்தை வளர்க்க உதவுகின்றதே யன்றிக் குறைக்கப்
பயன்படுவதில்லை. உலகத்து மக்களுக்கு இன்பந்தரும் பொருட்டு ஒரு
செங்கோலைப் பிடிக்கும் கையினால் அம்மக்களை அழிப்பதற்குக்
காரணமாகும் மற்றொரு செங்கோலை (சிவந்த அம்பை)ப் பிடிப்பதை அரசன்
பெருமையாகக் கொண்டது காலத்தின் இயல்பு; உலகத்தின் இயல்பென்று
கூடச் சொல்லிவிடலாம். சேர அரசர்கள் பெற்ற வெற்றிகளும் அவர்கள்
மரபிற்கே உரிய தனிப்பெருமைகளும் சேர நாட்டின் இயல்புகளும்
அந்நாட்டிலுள்ள ஆறுகள் மலைகள் ஊர்கள் முதலியவற்றைப் பற்றிய
செய்திகளும் இந்நூலில் அங்கங்கே வருகின்றன. தமிழ்நாட்டில்
'படைப்புக்காலந் தொடங்கி' இருந்து வருவனவாகச் சொல்லப்பெற்ற சேர
சோழ பாண்டியரென்னும் முடியுடைய மூவேந்தர் குலத்துள் முதல்
வைத்தெண்ணப்பட்ட சேரர் குலம் இன்னும் சிறப்புடன் விளங்கி வருகின்றது.

     சீவகசிந்தாமணியிலிருந்து தொடங்கிய எனது பண்டைத் தமிழ் நூல்
ஆராய்ச்சியின் பயனாக நான் அறிந்துகொண்ட நூல்களுள் பதிற்றுப்பத்தும்
ஒன்று. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பன இன்னவை என்று தெரியாத
காலத்தில் இந்நூலைக் காணும் பேறு எனக்கு வாய்த்தது. முதல் முதலில்
திருவாவடுதுறை மடத்திலிருந்து கிடைத்த எட்டுத்தொகைப் பிரதியில்
பரிபாடலும் கலித்தொகையும் காணப்படவில்லை. ஏனைய ஆறுதொகை
நூல்களும் இருந்தன. சிந்தாமணியில் வரும் மேற்கோள்களைத்
தெரிந்துகொள்வதற்காக வழி துறை தெரியாத சங்கநூற் காட்டுக்குள்ளே
புகவேண்டிய அவசியம் நேர்ந்தது. சிந்தாமணியின் ஒளியினால் அதற்கும்
முந்திய பழைய நூல்கள் பலவற்றி