11

அழகை உணரலானேன். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பவற்றின் பழமைக்
கோலத்தையும் 'என்றும் புலராது யாணர்நாட் செல்லுகினும், நின்றலர்ந்து
தேன்பிலிற்றும் நீர்மை'யாகிய புதுமைச் சுவையையும் அறிந்து அறிந்து
இன்புற்றேன். ஒவ்வொன்றாக அந்நூல்களையும் வெளியிடும் பாக்கியம்
எனக்குக் கிடைத்தது. புறநானூற்றைப் பதிப்பிக்கையில் தமிழின்
புறத்துறைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு உரம்பெற்றேன்.
பதிற்றுப்பத்தைப் பதிப்பிப்பதற்கு அவ்வாராய்ச்சியினாற்பெற்ற அறிவு
அஸ்திவாரமாக உதவியது. இறைவன் திருவருளால் இந்நூல் முதல் முதலில்
1904 - ஆம் வருஷம் ஜூன் மாதத்திலும் இரண்டாம் முறை 1920 - ஆம்
வருஷம் அக்டோபர் மாதத்திலும் வெளிவந்தன. இது மூன்றாம் பதிப்பாகும்.

     இந்த நூலைப் பதிப்பிப்பதற்கு எனக்கு முதலில் உதவியாக இருந்த
கையெழுத்துப் பிரதிகள் ஆறு. அவை வருமாறு:- (1) திருவாவடுதுறை
ஆதீனத்துப் பிரதி; (2) சென்னை அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைப்
பிரதி; (3) ஆழ்வார்திருநகரி, ஸ்ரீ தே. லக்ஷ்மண கவிராயரவர்கள் வீட்டுப்பிரதி;
(4) ஸ்ரீ ஜே. எம். வேலுப் பிள்ளையவர்கள் பிரதி; (5) ஸ்ரீ தி. த. கனகசுந்தரம்
பிள்ளையவர்கள் பிரதி; (6) திரு மயிலை வித்துவான் ஸ்ரீ சண்முகம்
பிள்ளையவர்கள் பிரதி.

     இவற்றுள் இரண்டில் மாத்திரம் உரை இருந்தது. இவற்றையன்றி
அவ்வப்பொழுது ஒப்பிடுவதற்குக் கிடைத்த பிரதிகள் வேறு சில உண்டு.

     முதற்பத்தும் பத்தாம்பத்தும் இவற்றில் கிடையாமற் போனதன்றி உள்ள
எட்டுப் பத்திலுங்கூடச் சில சில விடங்களில் மூலங்கள் குறைந்தும் உரைகள்
சிதைந்தும் பிறழ்ந்தும் இருந்தன. அத்தகைய இடங்களில் என்னாற் செய்யத்
தக்கது ஒன்றும் இல்லாமையால் அவற்றை இருந்தவாறே பதிப்பித்திருக்கிறேன்.
முதற்பதிப்பைக் காட்டிலும் இரண்டாம் பதிப்பில் சில திருத்தங்கள் அமைந்தன.
நாளடைவில் செய்துவந்த ஆராய்ச்சியினாற் கண்ட சில புதிய திருத்தங்களை
இப்பதிப்பிற் காணலாம்.

     இக்காலத்தில் தமிழ் கல்வி பயிலும் மாணாக்கர்கள் இந்நூலின் பழைய
வுரையைத் துணைக்கொண்டு நூற்பொருளை அறிவது எளிதன்றென்று
தெரிந்தமையின் இப்பதிப்பில் ஒரு குறிப்புரை எழுதி அடிக் குறிப்பாகச்
சேர்க்கப்பட்டிருக்கிறது. அதன் கண் இயன்ற வரையில் விஷயங்களை
விளக்கியுள்ளேன்; ஆயினும் எனக்கே தெளிவாக விளங்காத சில பகுதிகள்
உண்டு. அவ்விடங்களில் ஏதோ ஒரு வகையாகப் பொருள் எழுதி
அமைத்திருக்கிறேன். பெரும்பாலும் பழைய உரையை அடியொற்றியே
இக்குறிப்புரையை எழுதினேன். ஆயினும் சில இடங்களில் பழைய உரையினும்
சிறந்ததாக இருக்குமென்ற எண்ணத்தினால்