பதிற்றுப்பத்தின்
முதற்பத்தும் பத்தாம்பத்தும் சுவடி பதிப்பித்த
காலம் முதல் தற்போது வரை கிடைக்கவில்லை |
2-குமட்டூர்க்
கண்ணனார் :- இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
மீது இந்நூல் 2-ஆம் பத்தைப் பாடி, உம்பற்காட்டு 500- ஊர் பிரமதாயமும்
38-வருடம் தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் பரிசிலாகப் பெற்றவர்;
அந்தணவருணத்தினர்; இது பிரமதாயமும் பெற்றனரென்பதனால் தெரிகிறது.
கண்ணனாரென்று ஒரு புலவர் உளர்; அவரினின்று
வேறுபடுத்தற்கு இவர்
இங்ஙனம் வழங்கப் பெற்றார்.
3-பாலைக்கௌதமனார்
:- பல்யானைச்செல்கெழுகுட்டுவன்
மீது இந்நூல் மூன்றாம்பத்தைப் பாடியவராகிய இவர் அவனை இரந்து
அவனுதவியால் ஒன்பது பெருவேள்வி வேட்டுப் பத்தாம் பெருவேள்வி
வேட்கையில் மனைவியுடன் சுவர்க்கம் பெற்றவர்; அந்தண வருணத்தினர்.
இவை இப்பத்தின் பதிகத்தாலும் "தொடுத்த பெரும்புலவன்" (316) என்னும்
பழமொழி வெண்பாவாலும், அதனுரையாலும், "நான்
மறை யாளன்
செய்யுட்கொண்டு, மேனிலையுலகம் விடுத்தோனாயினும்" (28-ஆம் காதை,
137-8) என்னும் சிலப்பதிகாரத்தாலும், 'இதில்
இமயவரம்பன் தம்பி
பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக்கௌதமனார் துறக்கம்
வேண்டினாரென்பது குறிப்புவகையாற் கொள்ளவைத்தலின், இது
வஞ்சிப்பொருளில் வந்த பாடாணாயிற்று' (தொல்.
புறத். 25) என்னும்
நச்சினார்க்கினியர் உரையாலும் விளங்குகின்றன.
கௌதமனாரென்று ஒரு
புலவர் உளர்; அவரினின்று வேறுபடுத்தற்கு இவர் இங்ஙனம் வழங்கப்
பெற்றார். இவர் சுவர்க்கம் பெற்ற சரிதை மலைநாட்டிற் கர்ணபரம்பரையில்
இக்காலத்தும் வழங்குகின்றது.
4-காப்பியாற்றுக்
காப்பியனார் :- இவர் களங்காய்க்கண்ணி
நார்முடிச்சேரலென்னும் அரசன் மீது இந்நூல் நாலாம்பத்தைப் பாடி
நாற்பதுலக்ஷம் பொன்னும் அவன் ஆண்டதில் ஒரு பாதியும் பரிசிலாகப்
பெற்றவர்.
5-பரணர்
:- இவர் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் மீது
இந்நூல் ஐந்தாம்பத்தைப் பாடி அவனால் உம்பற்காட்டு வருவாயையும்
அவன் மகன் குட்டுவன் சேரலென்பவனையும் பரிசிலாகப் பெற்றவர்.
கபிலருடைய அருமைத்துணைவர்; இது பழைய இலக்கண நூல்களின்
உரைகளில், 'கபிலபரணர்' என்று வழங்கும் தொகைநிலைத் தொடரால்
விளங்குகின்றது. அதிகமான் நெடுமானஞ்சி கோவலூர்த்தலைவனை வென்று
அவ்வூரைக் கைக்கொண்டமை இவராற் புனைந்து கூறப்பெற்றுள்ளது. இது
புறநானூற்றில், "அமரர்ப் பேணியும்" என்னும்
பாட்டில், "பரணன்
பாடினன் மற்கொன் மற்றுநீ, முரண்மிகு கோவலூர் நூறிநி, னரணடு திகிரி
யேந்திய தோளே" என ஒளவையார் பாராட்டியிருத்தலால்
நன்கு
புலப்படுகின்றது. இருவகைத் திருவிளையாடற் புராணத்திலும்
இவர்
புகழப்பட்டிருக்கிறார். எட்டுத்தொகையில் இவர் செய்தனவாக
82-செய்யுட்கள்
இப்பொழுது காணப்படுகின்றன: நற். 12;
குறுந். 15; பதிற்.
10; அகநா. 32;
புறநா. 13;.
|