14

     6-காக்கை பாடினியர் நச்செள்ளையார் :- ஆடுகோட்பாட்டுச்
சேரலாதனென்னும் அரசன் மீது இந்நூல் 6-ஆம் பத்தை இயற்றியோராகிய
இவர் அணிகலனுக்கென்று 9- துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும்
அவனாற் பரிசுபெற்றவர்; பெண்பாலார்; நச்செள்ளையாரென்பது இவரது
இயற்பெயரென்றும் குறுந்தொகை, 210-ஆம் பாட்டில், காக்கை
கரைந்தமையைப் பாராட்டிக்கூறிய அருமைபற்றிக் காக்கைபாடினியாரென்ற
சிறப்புப் பெயரைப் பிற்காலத்தில் ஆன்றோரால் இவர் பெற்றனரென்றும்
தெரிகின்றன. பாடினி - பாடுபவள்; செள்ளை யென்பது பெண்பாலார்க்கு
இயற்பெயராகப் பண்டைக் காலத்து வழங்கி வந்ததுபோலும். இந்நூல் 9-ஆம்
பத்தின் பதிகத்தில் மையூர் கிழானுடைய மனைவியின் பெயர்
அந்துவஞ்செள்ளையென்று வந்திருத்தல் காண்க. மறக்குடிமங்கையின்
சிறப்பை விளக்கி இவர் பாடிய 278 - ஆம் புறப்பாட்டானது.
பெண்பாலருடைய பாக்களின் வரிசையிற் சேர்க்கப்பெற்றிருத்தல் இவர்
பெண்பாலாரதலை வலியுறுத்தும். 'கலனணிக' என்று அரசன் பொற்காசு
முதலியன கொடுத்தானென்றதும் ஈண்டு அறிதற்பாலது. எட்டுத்தொகையில்
இவர் செய்தனவாக, 12 செய்யுட்கள் காணப்படுகின்றன: குறுந். 1; பதிற். 10;
புறநா. 1.

     7-கபிலர் :- இவர் செல்வக் கடுங்கோவாழியாத னென்னும்
சேரவரசன் மீது இந்நூல் ஏழாம் பத்தைப் பாடி நூறாயிரம் பொற்காசும்
அவன் ஒரு மலைமீதேறிக் கண்டு கொடுத்த நாடும் பரிசிலாகப் பெற்றவர்.
இஃது இந்நூல் ஏழாம் பத்தின் பதிகத்தாலும், 85-ஆம் பாடலிலுள்ள
"கபிலன்பெற்ற வூரினும் பலவே" என்பதனாலும் விளங்குகின்றது. இவர்
பிறந்தவூர் பாண்டிய நாட்டிலுள்ள திருவாதவூர்; இது பழைய
திருவிளையாடற்
புராணத்தில் 27- ஆவதாகிய ஞானோபதேசஞ் செய்த
திருவிளையாடலிலுள்ள, "நீதியார் மதூக நீழ 1னெட்டிலை யிருப்பை
யென்றோர் காதல்கூர் பனுவல் பாடுங் கபிலனார் பிறந்த மூதூர், சோதி
சேர்வகுள நீழற் சிலம்பொலி துளங்கக் காட்டும், வேதநா யகனார் வாழும்
வியன்றிரு வாதவூரால்" என்னும் நாலாம் திருவிருத்தத்தால் வெளியாகின்றது.
இவர் அந்தண வருணத்தினர்; புறநானூற்றில், "யானே, பரிசிலன் மன்னு
மந்தணன்", "யானே, தந்தை தோழனிவரென் மகளிர், அந்தணன் புலவன்
கொண்டுவந்தனனே" (200, 201) எனத் தம்மைப் புலப்படுத்தற்காக
இவர் கூறிய செய்யுட்களும், "புலனழுக் கற்ற வந்த ணாளன்" 126 என
மாறோகத்து நப்பசலையார் இவரைப் பாராட்டிக் கூறிய செய்யுளும்
இதனைப் புலப்படுத்தும்.

     வேள் பாரியினுடைய உயிர் நண்பரும் அவனுடைய அவைக் களத்துப்
புலவருமாக இவர் விளங்கினார்; தமிழ்நாட்டு மூவேந்தரும் அழுக்காறுற்று
அவனைக் கொல்ல நினைந்து நால்வகைச் சேனைகளோடும் அவன்
மலையைச் சூழ்ந்த போது அவர்களைச் சிறிதும் மதியாது


     1 "நெட்டிலை யிருப்பை வட்டவொண்பூ, வாடா தாயிற் பீடுடைப்
பிடியின், கோடேய்க்குமே வாடினோ பைந்தலைப், பரதர் மனைதொறு
முணங்கும், செந்தலை யிறவின் சீரேய்க் கும்மே" :- இச்செய்யுள
தமிழ்
நாவலர்
சரிதையிற் கண்டது.