பக்கம் எண் :

140

     8. மொய்வளஞ் செருக்கியென்றது வலியாகிய செல்வத்தானே மயங்கி
யென்றவாறு. மொய் என்பது ஈண்டு வலி.

     10. நெய்த்தோர் தொட்ட செங்கை மறவரென்றது பகைவருடலில்
தாங்கள் எறிந்த 1வேல்முதலிய கருவிகளைப் பறிக்கின்ற காலத்து அவருடைய
உடலுகு குருதியை அளைந்து சிவந்த கையையுடைய மறவரென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'செங்கை மறவர்' என்று பெயராயிற்று.

     மறவரது (10) குருதி (11) எனக் கூட்டுக.

     குழூஉநிலை அதிர மண்டிக் (9) குருதி (11) ஒழுகப் (12பிணம்பிறங்கப்
பாழ்பல செய்து (13) முரசம் நடுவட்சிலைப்ப (14) வளனற நிகழ வாழுநர் பலர்பட (15) விறல்வேம்பறுத்த (16) என முடிக்க.

     15. வளன் அற நிகழ்ந்தென்றது செல்வமானது அறும்படியாகக்
கொள்ளை நிகழவென்றவாறு. நிகழவெனத் திரிக்க.

     இனி வளனறவெனவும் நிகழ்ந்து வாழுநரெனவும் அறுத்து, நிகழ்தலை
வாழ்வார்மேலேற்றி நிகழ்ந்துவாழ்தலென்றலுமாம்.

     ஆண்டு, நிகழ்தல் - விளக்கம்.

     குட்டுவற்கண்டனம் வரற்கு (17) யாமும் சேறுகம் (1); நும் கிளை இனிது
உணீஇயர் (3); விறலியர் 92), நீயிரும் வம்மின் (1) எனக் கூட்டி வினைமுடிவு
செய்க.

     (கு - ரை) 1. யாமும் செல்லுவோம்; நீங்களும் வாருங்கள்.

     2. அசைகின்ற மாலையணிந்த அசைகின்ற இயல்பையுடைய விறலியரே;
விறலியர் : விளி.

     3. இசைப்பாட்டில் வல்ல நும் சுற்றத்தார் இனிதாக உண்ணுக;
உணீஇயர்: முற்று.

     4-9. மோகூர் மன்னனை வென்றமை கூறப்படும்.

     4, களிறுகள் பரந்து செல்லவும், விரைந்து செல்லும் குதிரைகளை
அவற்றின்மேல் உள்ள வீரர் அடக்கிச் செலுத்தவும்.

     5. விளங்குகின்ற கொடிகள் அசையும்படி தேர் மறிந்து சுழலவும்.

     6. வேலைச் செலுத்தி எழுகின்ற, பகைவர் படையின் கையென்னும்
உறுப்பைக் கவர்கின்ற விரைந்த தூசிப்படையையுடைய; கை - பக்கப் படை.

     7. வெல்லும் போரைச் செய்யும் முடியுடையரசரும் குறுநில மன்னரும்
வஞ்சினம் கூறி.

     8-9. வலிமிகுதியால் மனம் செருக்குக் கொண்டு தம்மிற் கூடிவரும்
மோகூருக்கு அரசனான பழையனென்பானது வெற்றி பெறுதற்குக் காரணமான
ஒன்றாகக் கூடிய கூட்டத்தி்ன் நிலை நடுங்கும்படி மிக்குச் சென்று. மோகூர்:
ஆகுபெயர். 10 - 13. போர்க்கள வருணனை.

     10. பகைவரது உடலிற் புக்க ஆயுதங்களைப் பறிக்கும்போது


     1வேல் சிறப்புடைய கருவியாதலின், 'வேல் முதலிய' என்றார்; "முருகற்கு
வேல் படையாதலானும், சான்றோர் வேற்படையே சிறப்பப் பெரும்பான்மை
கூறலானும்" (
தொல். புறத். 21, ந)