பக்கம் எண் :

141

அவருடைய இரத்தத்தை அளைதலால் சிவந்த கையையுடைய வீரரது; வீரர்
மோகூர் மன்னனது படையிலுள்ளார்.

     11. நிறம் உண்டாகின்ற இரத்தம் நிலத்தில் தவழ்ந்து ஓடி.

     12. மழை பெய்யும் நாளிலுண்டான செங்கலங்கல் நீரைப் போலப்
பள்ளங்களிலே பரவிப் பாய.

     11-2. குருதிக்குச் செம்புனல்: "செந்நில மருங்கிற் செஞ்சால் சிதைய,
மரஞ்சுமந் திழிதருங் கடும்புனல் கடுப்பக், குருதிச் செம்புனல் போர்க்களம்
புதைப்ப" (பெருங். 1. 46 : 67 - 9)

     13. இறந்த பிணம் உயரும்படி பாழ்பலவற்றைச் செய்து.

     14. ஒலிக்கின்ற கண்ணையுடைய வீரமுரசம் போர்க்களத்தின் நடுவே
ஒலிப்ப. மு. பதிற், 54 : 13.

     15-7. நாட்டின் வளன் அழியவும், விளங்கி வாழ்வார் பலர் இறப்பவும்,
கரிய கொம்புகளையும் மற்றக்காவல்மரங்களை வென்ற வெற்றியையும் உடைய
வேம்பை வெட்டிய பெரிய சினத்தையுடைய குட்டுவனைக் கண்டு வருவதற்கு.
விறலைப் புலப்படுத்தும் வேம்பெனலுமாம். வேம்பு மோகூர் மன்னனது காவல்
மரம் (பதிற்.44: 14 - 5; 5-ஆம் பதிகம், 13 - 4); "பழையன் காக்கும்
குழைபயி னெடுங்கோட்டு, வேம்புமுதறடிந்த வேந்துவாள் வலத்துப்,
போந்தைக் கண்ணிப் பொறைய" (சிலப். 27 : 124 - 6). நிகழ்ந்து - நிகழ;
எச்சத்திரிபு.

     குட்டுவற் கண்டனம் வரற்கு (17) யாமும் சேறுகம் (1); விறலியர் (2),
நீயிரும் வம்மின் என முடிக்க.

     வளஞ்செருக்கிய மோகூர் மன்னனது நாட்டை அழித்ததைக் கூறினார்
நம்போன்ற இரவலர்க்கு வரையாது கொடுக்க அவ்வளம் உளதாயிற்றென்னும்
கருத்துப்பற்றி. (9)

 

50. மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கான்மயங்கு கதழுறை யாலியொடு சிதறிக்
கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய
வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇச்
 5 செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக்
காவிரி யன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூட லனையை
கொல்களிற், றுரவுத்திரை பிறழ வவ்வில் பிசிரப்
புரைதோல் வரைப்பி னெஃகுமீ னவிர்வர
 10 விரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க்
கரண மாகிய வெருவரு புனற்றார்
கன்மிசை யவ்வுங் கடலவும் பிறவும்
அருப்ப மமைஇய வமர்கடந் துருத்த
ஆண்மலி மருங்கி னாடகப் படுத்து