பக்கம் எண் :

146

  சிறுகுர னெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூ ரெறிந்து
பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுத றுமியப் பண்ணி
 15 வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர்
பல்லிருங் கூந்தன் முரற்சியாற்
குஞ்சர வொழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து
 20 நிலைச்செருவி னாற்றலை யறுத்துக்
கெடலருந் தானையொடு

     கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமைந்த காசறு
செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு.

     அவைதாம்: சுடர்வீவேங்கை, தசும்புதுளங்கிருக்கை, ஏறாவேணி,
நோய்தபுநோன்றொடை, ஊன்றுவையடிசில், கரை வாய்ப்பருதி, நன்னுதல்
விறலியர், பேரெழில்வாழ்க்கை, செங்கை மறவர், வெருவருபுனற்றார்.

     இவை பாட்டின் பதிகம்.

     பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு 1வாரியையும் தன் மகன் குட்டுவன்
சேரலையுங் கொடுத்தான் அக்கோ.

     கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்

     (கு - ரை) 1, வடவர் உட்கும் - வடநாட்டிலுள்ள அரசர் அஞ்சுதற்குக்
காரணமான. வான் தோய் வெல்கொடி - மிகவுயர்ந்த வெல்லும்
கொடியையுடைய; வான்றோய் என்பது இலக்கணை வழக்கு.

     2. குடவர் கோமான் - குடநாட்டிலுள்ளார்க்கு அரசனாகிய.

     4. கடவுட் பத்தினிக் கல்கோள் வேண்டி - தெய்வமாகிய
கண்ணகியின்படிவம் அமைத்தற்பொருட்டுக் கல் கொள்ளுதலை விரும்பி;
"விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக், கற்கால் கொள்ளினும் கடவு
ளாகும்" "பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக் கற்கால் கொண்டனன்"
"வடபே ரிமயத்து வான்றரு சிறப்பிற், கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்"
(சிலப். 25 : 118 - 9, 26 : 253 - 4, 27 : 1- 2)

     5. கான் நவில் கானம் - காட்டின் தன்மை மிக்க காட்டில். கணையின்
போகி - அம்பைப் போல விரைந்து சென்று.

     6. ஆரிய அண்ணலென்றது முன்னொருகால் இவனுக்குத் தோற்ற
ஆரியமன்னருள் தலைவனை. வீட்டில் தோற்கசசெய்து; "உடன்று மேல் வந்த
வாரிய மன்னரைக், கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்" (சிலப்.
28 : 120 - 21)


     1வாரி - வருவாய்.