7. இனிய
பல அருவிகளையுடைய கங்கையில் அக்கல்லை நீர்ப்
படுத்து; "கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து, பாற்படு மரபிற் பத்தினிக்
கடவுளை, நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து" (சிலப்.
27 : 14 - 6)
8. நல்ல இனமென்று
ஆராயப்பட்ட பல பசுக்களை அவற்றின்
குன்றுகளோடு கைக்கொண்டு.
9. நீங்காத
வல்விலையுடைய இடும்பாதவனத்தினிடத்தே தங்கி; இங்கே
வல்வில்லென்றது பல இலக்குக்களை ஒரே காலத்தில் ஊடுருவிச் செல்லும்படி
எய்யும் திறமையுடைய விற்படையை; வல்வில்: புறநா.
152 : 1 - 6.
10. வலி மிக்க
புலியைப்போன்ற வீரர் விழும்படி: வீரர்க்குப் புலி;
"உறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்" (சிறுபாண்.
122)
11. சிறியகொத்தாகிய
நெய்தற் பூக்களையுடைய வியலூரை அழித்து:
"சிறுகுர னெய்தல் வியலூரெறிந்த பின்" (சிலப்.
28 : 115); வியலூர் நன்னன்
வேண்மானுடையதென்று, "நறவுமகிழிருக்கை நன்னன் வேண்மான், வயலை
வேலி வியலூர்" அகநா. 97 : 12 - 3) என்பதனால்தெரிய
வருகின்றது.
சிறுகுரனெய்தல்: அகநா, 120 : 16.
12. கொடுகூர்
: ஓரூர்.
13-4. பழையன்
என்னும் குறுநிலமன்னன் தன் காவல்மரமாகக்
காத்துவந்த, கரிய கிளைகளையுடைய வேம்பினது முழவைப் போன்ற
அடிமரத்தை வெட்டச்செய்து (சிலப். 27 :
124 - 5)
முழாரை: மரூஉ.
"முழவுத்தா ளெரிவேங்கை" (கலித். 44 :
4);
"முழாவரைப் போந்தை" (புறநா. 85 : 7)
15. கணவனை இழந்த
மகளிர் இழை கழித்தல்: 'மெல்லியன் மகளிரு
மிழைகழித் தனரே" (புறநா. 224 : 17).
வாலிழை யென்றது முத்தாரத்தை.
நறும்பல் பெண்டிரென்றது அவருடைய இயற்கைமணத்தைக் கூறியபடி. 16.
ஐம்பாலாதலின் பல்லிருங் கூந்தலென்றார்; குறுந்.
19 : 5 உரை, ஒப்பு.
17. பழையனது
யானைகளைக் சகடவொழுங்கிற் கடாக்களாகப் பூட்டி.
18-9. செய்து
செய்து அமையாத போரையுடைய சோழரது குடியில்
அரசிற்கு உரியோராகிய ஒன்பதுபேர் போரில் விழும்படி நேரிவாயிலின்
புறத்தே தங்கி; "பெருவளக் கரிகான் முன்னிலைச் செல்லார், சூடாவாகைப்
பறந்தலை யாடுபெற, ஒன்பது குடையு நன்பக லொழித்த, பீடின் மன்னர்"
(அகநா. 125 : 18 - 21); "மைத்துன வளவன்
கிள்ளியொடு பொருந்தா ஒத்த
பண்பின ரொன்பது மன்னர், இளவரசு பொறாஅ ரேவல் கேளார்
வளநாடழிக்கு மாண்பின ராதலின் ஒன்பது குடையு மொருபக லொழித்தவன்,
பொன்படு திகிரி யொருவழிப் படுத்தோய்", "ஆர்புனை தெரிய லொன்பது
மன்னரை, நேரி வாயி னிலைச்செரு வென்று, நெடுந் தேர்த்தானையோ
டிடும்பிற் புறத்திறுத்துக், கொடும்போர் கடந்து" (சிலப்.
27 : 118 - 23,
28 : 116 - 9). நேரிவாயிலை வாயிலென்றது முதற்குறை; 'நேரிவாயில்:
உறையூர்த் தெற்கில் வாயிலதோரூர்' (சிலப்.
28 : 117. அரும்பத.-)
20. நிலைச்செருவின்
ஆற்றலை அறுத்து - நாடோறும் செய்யும் போரின்
வலியைக் குறைத்து.
|