பக்கம் எண் :

150

     15-6. ஆயிடை மணந்த பந்தரென்றது ஆயிடையிலுள்ள அரசரும்
பிறரும் சேவித்தற்கு வந்து பொருந்தின பந்தரென்றவாறு.

     ஆயிடையென்றது ஆயிடையிலுள்ளாரை.

     16. பந்த ரந்தரமென்றது பந்தரின் உள்வெளியை. வேய்தல் -
வேய்ந்தாற்போல நெய்தன்மாலைகளை நாற்றுதல். வேயவெனத் திரிக்க.

     18. நறவினொடுவென ஒடு விரிக்க.

     22. பாடல்சான்றென்பதனைச் சாலவெனத் திரிக்க.

     23. மெல்லியனென்றது ஐம்புலன்களிடத்தும் மனநெகிழ்ச்சியுடைய
னென்றவாறு.

     கடுஞ்சினத்த (27) அரவு (26) என மாறிக் கூட்டுக.

     30. படைவழிவாழ்நரென்றது படையிடமாக வாழும் படையாளரை.
மறங்கெழு (31) கண்ணி (32) எனக் கூட்டுக.

     32. நிறம்பெய்ர்தல் - உதிரத்தால் நிறம்பெயர்தல். ஊறளத்தல் -
உறுதற்கு ஆராய்தல்.

     கையலை யழுங்க (34) என்னும் எழுவாயையும் பயனிலையையும்
ஒரு சொல் நீர்மைப்படுத்தித் தண்ணுமை (33) என்னும் எழுவாய்க்குப்
பயனிலையாக்குக.

     36. நோக்கென்றது மாற்றார்படையைத் தப்பாமல் ஒன்றாகக்
கொல்லக் கருதின நோக்கென்றவாறு.

     பருந்தூறளப்பக் (32) கையலையழுங்க (34) என நின்ற
செயவெனெச்சங்களை நோக்கலை (36) என்னும் முற்றுவினைக்குறிப்பொடு
முடிக்க.

     நீ குடபுலமுன்னிப் (3) போந்தைப் பொழிலணிப் பொலிதந்து (9)
நெய்தல் (17) நறவினோடு கமழ (18) விறலியரது (21) பாடல் சாலப் புறத்து
வினையின்மையின் (22) 1வினோதத்திலே நீடியுறைதலாலே, நீ அவ்வாறு
நீடியதறியாது அண்ணல் மெல்லியன் போன்மென (23) நின்னை உணராதோர்
உள்ளுவர்களோ (24)? நீ தான் அரவோடொக்கும் நின்பகைவரைக்கடுக
அழிக்க வேண்டு நிலைமையில் அவ்வரவினைக் கடுக அழிக்கும் (26)
உருமேற்றினை யொப்பை (28); அவ்வாறு விரையச் செய்யும் நிலைமைக் கண்
நினக்கேற்ப நின்படைவழி வாழ்நரும் 2காலாண்மேற் செல்லாது (30) தாங்குநர்
யானைக்கோடு துமிக்கும் (29) எஃகுடை வலத்தராயிருப்பர் (30); அவ்வாறு நீ
அழியாது மாறுபாடாற்றிப் பொருதழிக்கும் வழி நின்முடிக் கண்ணியை, உதிரம்
தெறித்தலால் நிறம்பெயர்தலிற் பருந்து உறுதற்கு அளப்ப (32), நின்முன்னர்
வழங்கும் மாக்கட் டண்ணுமை நின்னெதிர் நின்று மாற்றாரெய்தலையுடைய
அம்பு கண்கிழித்தலால் (33) ஒலியொழியக் (34) கூற்றம் (35) வலைவிரித்தாற்
போலக் களத்தில் எதிர்ந்த மாற்றார் படையை யெல்லாம் ஒன்றாகக் கொல்லக்
கருதி நோக்கின நோக்கினையுடையை (36); நெடுந்தகாய், இவ்வாறு
செருவத்துக் கடியை (37) என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன்வினோதத்து மென்மையும் செருவகத்துக்
கடுமையும் உடன்கூறியவாறாயிற்று.


     1வினோதம் - பொழுதுபோக்கு.

     2பதிற். 54; 16. 7, உரை.