29.
தாங்குநர் தடக்கையானைத் தொடிக்கோடு துமிக்குமென்று
1எதிரூன்றினார் மேற்சேறல் கூறினமையான், இஃது எடுத்துச்செலவின்
மேற்றாய் வஞ்சித்துறைப் பாடாணாயிற்று.
'அரவழங்கும்'
(13) என்பது முதலாக இரண்டு குறளடியும், 'பந்தரந்தரம்
வேய்ந்து' (16) என ஒரு சிந்தடியும், 'சுடர்நுதல்' (19) என்பது முதலாக இரண்டு
குறளடியும், 'மழைதவழும்' (25) என்பது முதலாக நாலு குறளடியும்
வந்தமையான் வஞ்சித்தூக்குமாயிற்று.
'தாங்குநர்'
(29) என்பது கூன்.
(கு
- ரை) 1-22. சேரனது பொழுதுபோக்குச் சிறப்புக் கூறப்படும்.
1-9. கடற்கரைச்
சோலையின் இயல்பு.
1-3. அசைகின்ற
நீரையுடைய அகன்ற கடற்பரப்புக் கலங்கும் படி
காற்று அடித்தலால் விளங்குகின்ற பெரிய அலைகள் இடியோசை போல
முழங்குகின்ற கடலைச் சேர்ந்த சோலையையுடைய தன் நகரத்தின்
மேல்பாலுள்ள இடத்துக்குச் செல்லக் கருதி.
4-9.
பனங்காட்டின் இயல்பு.
4-5. பள்ளங்களில்
இரையின்பொருட்டுத் துழாவிய வளைந்த
காலையுடைய நாரை, குவிந்த பூங்கொத்துக்களையுடைய ஞாழல்மரத்தினது
பெரிய கிளையினிடத்தே தங்கும்.
6-9. வண்டுகள்
தங்குதல்கொண்ட குளிர்ந்த கடற்பரப்பில், அடம்பங்
கொடிகள் தழைத்து வளர்ந்த நீரையடைந்த கரையில் நண்டுகள்
விளையாடியதனால் உண்டான சுவடுகளை மறைக்கின்ற நுண்ணிய மணலைக்
காற்று வீசுகின்ற, தூய கரிய பனஞ்சோலையில் அலங்காரத்தாற் பொலிவு
பெற்று.
சேக்கும்
(5) கொண்ட (6) உஞற்றும் (8) என்னும் எச்சங்களைப்
பொழில் (9) என்னும் பெயரோடு முடிக்க.
10. "ஒருதிறம்,
பாடனல் விறலிய ரொல்குபு நுடங்க" (பரி.
17:15)
10-13.
உலாவினளாய், அசைந்தனளாய் ஆடுகின்றன மடப்பத்தையுடைய
மகளது, தெய்வம் ஏறியதனால் அசைகின்ற அசைவைப்போலத் தோன்றி,
இடந்தோறும் இடந்தோறும், குறுக்கிட்டுக்கிடந்து விளங்கும் அரிய
மணிகளையுடைய பாம்புகள் ஆடுகின்ற, பெரிய மலையாகிய பெருந்
தெய்வமும்; தெய்வத்து அத்து வேண்டா வழிச் சாரியை. பாம்பு ஆடுதலுக்கு
விறலி ஆடுதல் உவமை.
14. சங்குகள்
ஒலிக்கும் குளிர்ச்சியையுடைய கடலும்; பௌவத்து: அத்து
வேண்டாவழிச் சாரியை.
15. குணகடலும்
குடகடலும் ஆகிய எல்லையையுடைய அவ்விடத்தே
உள்ள அரசரும் பிறரும் ஒன்று கூடின; கூடியது சேரனைச் சேவித்தற்
பொருட்டு.
16. பந்தரின்
உள்ளிடத்தே வேய்ந்தாற்போல (நெய்தல் மாலைகளை)த்
தொங்கவிடுதலால்; வேய்ந்து - வேய; எச்சத்திரிபு.
17-8. வளவிய
முறுக்கு அவிழ்ந்த கண்ணைப்போன்ற நெய்தல் தேன்
பொருந்திய நறவம்பூவோடு நாடுமுழுவதும் நறுமணம் வீச; நறவு: ஒருவகை
மலர். (பரி. 7 : 63 - 4)
1எதிரூன்றினார்
- காஞ்சித்திணைக்குரியோர்; "உட்கா, தெதிரூன்றல்
காஞ்சி" (பழம்பாட்டு)
|