பக்கம் எண் :

160

ஏந்தெழின் மழைக்கண் வனைந்துவர லிளமுலைப்
 5 பூந்துகி லல்குற் றேம்பாய் கூந்தல்
மின்னிழை விறலியர் நின்மறம் பாட
இரவலர் புன்கண் டீர நாடொறும்
உரைசா னன்கலம் வரைவில வீசி
அனையை யாகன் மாறே யெனையதூஉம்
 10 உயர்நிலை யுலகத்துச் செல்லா திவணின்
றிருநில மருங்கி னெடிதுமன் னியரோ
நிலந்தப விடூஉ மேணிப் புலம்படர்ந்து
படுகண் முரச நடுவட் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமஞ் செய்ம்மார்
  15 ஏவல் வியங்கொண் டிளையரொ டெழுதரும்
ஒல்லார் யானை காணின்
நில்லாத் தானை யிறைகிழ வோயே.

     துறை - காட்சி வாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
நில்லாத் தானை (17)

     (ப - ரை) 1. வள்ளியனென்பதற்கு வள்ளியையென்றது 1இடவழுவமைதி.

     2. உள்ளியது முடித்தியென்றது யான் 2நினைத்துவந்த காரியத்தை
முடியென்றவாறு. முடித்தியென்றது ஈண்டு முன்னிலை யேவல்வினை.

     3. தடைஇய அமை - பெருத்த மூங்கில்.

     நின் மறம் பாட (6) வீசி எனக் கூட்டி நின் மறம் பாடாநிற்க அதனைக்
கேட்டிருந்து வீசியெனவுரைக்க.

     வீசி (8) என்னும் வினையெச்சத்தினை ஆகல் (9) என்னும் தொழிற்
பெயரோடு முடிக்க.

     9. அனையையாகன்மாறேயென்றது அவ்வீசுதற்கு ஏற்ற அத்
தன்மையையுடையை யாகையானென்றவாறு.

     மாறென்பது ஆனென்னும் உருபின் பொருள்படுவதோர் இடைச்சொல்.

     அத்தன்மையாவது இன்முகமும் இன்சொல்லு முதலாயின.   

     எனையதூஉமென்றது சிறிதுகாலமுமென்றவாறு; உம்மை நெடுங்காலமே
யன்றிச் சிறிதுகாலமுமென எச்சவும்மை.

     12. நிலந்தப இடூஉம் ஏணிப்புலமென்றது நிலவகலம் குறைபட இட்ட
எல்லையையுடைய பாசறையென்றவாறு. என்றது மாற்றார் பாசறையை. முரசம்
நடுவட் (13) படர்ந்து (12) சிலைப்ப (14) எனக் கூட்டி 3முரசம் பாசறைநடுவே
தான் நின்று தன்னொலி பாசறை யெங்கும் படர்ந்து கொண்டு படையை
ஏவியொலிப்பவெனவுரைக்க.


     1படர்க்கைக்கு முன்னிலை வந்தது.

     2"முன்ன முகத்தி னுணர்ந்தவர், இன்மை தீர்த்தல் வன்மை யானே"
(
புறநா. 3 : 25 - 6)

     3பதிற். 39 : 5, உரை.