17

     இவர் மதுரையிலும் மலைநாட்டிலும் பெரும்பாலும் இருந்தாரென்று
மேற்கூறிய செய்யுட்களால் தெரிகிறது. இவர் செய்தனவாக இப்பொழுது
19 செய்யுட்கள் கிடைக்கின்றன குறுந். 1; பதிற். 10; புறநா;. 7; தகடூர். 1.

     9-பெருங்குன்றூர்கிழார் :- இவர் குடக்கோ இளஞ்சேரல்
இரும்பொறை யென்னும் சேரவரசன்மீது இந்நூல் ஒன்பதாம் பத்தைப் பாடி
32,000- பொற்காசு முதலிய பலவகைப் பரிசில்கள் பெற்றவர்; வேளாளர்;
கடைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தோருள் ஒருவர்;
வையாவிக்கோப்பெரும்பேகனால் துறக்கப்பட்ட கண்ணகி யென்பவளை
அவனுடன் சேர்த்தற்கு அவனைப் பாடியவர்; இவராற் பாடப்பட்டோர்கள்
மேற்கூரிய தலைவர்கள் இருவரும் உருவப்பஃறேரிளஞ்சேட் சென்னியும்
ஆவர். இவர் காலத்துப் புலவர்கள் இறையனாரகப் பொருளுரையால்
தெரிகின்ற சிறு மேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார்,
இளந்திருமாறனார், மதுரையாசிரிய னல்லந்துவனார், மருதனிள நாகனார்,
கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலியோர்களும், வையாவிக்
கோப்பெரும்பேகனைப் பாடிய பரணர் முதலியோர்களும் ஆவர். இவர்
இயற்றியனவாக எட்டுத் தொகையில் 21 - செய்யுட்கள் இப்பொழுது
கிடைக்கின்றன:
நற். 4; குறுந். 1.; பதிற். 10; அகநா. - 1; புறநா. 5.
இவற்றுள் அகத்திணைக் குரியன 6; புறத்திணைக்குரியன 15.