பக்கம் எண் :

172

தோட்கேற்ற (17) நன்கலங்களைத் திறைதரும் (18) நாடுகளைப் புறந்தருதல்
நின் கடனாயிருக்குமாகலான் (19) நின் பகைவர் (12) அறியாது எதிர்ந்து
துப்பிற்குறையுற்றுக் (11) பணிந்து திறைதருவராயின் (12) சினஞ்செலத்
தணியுமோ; நின்கண்ணி வாழ்க (13) என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.

     'நாடு புறந்தருதல் நினக்குமார் கடன்' (19) என்பதன்பின், 'சினஞ்செலத்
தணியுமோ' (13) என்பதைக் கூட்ட வேண்டுதலின், மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. பகல் நீடுதல் ஆகாமல், இராப்பொழுது மிக்கு,
மாசியின் தன்மை நிலைபெற்ற, மாக்களெல்லாம் குளிரால் உடம்பு நடுங்குகின்ற
மாதத்தில்.

     3. குளிர்ச்சியையுடைய அரிய வழியிலே செல்லும் பாணன் உவப்பவும்.
4. புல்லிய இராப்பொழுது நீங்கவும், உலகத்து உயிர்களுடைய வருத்தம்
நெடுந்தூரத்தே அகலவும்.

     5. உலகெங்கும் பரவிய இருள்நீங்கும்படி பல கிரணங்களைப் பரப்பி.

     6. சூரியன் கீழ்த்திசையிலே தோன்றினாற் போல. உவப்ப, விடிய, அகல,
நீங்க, பரப்பி, தோன்றியாங்கு என இயையும்.

     7-8. இரத்தலையுடைய பரிசிலருடைய சிறிய குடும்பங்கள்
வளர்ச்சியடையும்படி, உலகத்தைத் தாங்கிய மேம்பட்ட கல்வியையுடைய.

     9. விற்படையையுடையோரது கவசம்போன்றாய்; வில்லோர்
மெய்ம்மறையென்பது அனைத்தும் ஒரு பெயராய் நின்றது.

     9-10. ஏனையரசரினும் வேறாகிய பெரிய உரிமையையுடைய,
செல்வர்க்குள் மேம்பட்ட செல்வத்தையுடையாய், நின்னை அடைந்தோர்க்குப்
பாதுகாவலாகவுள்ளாய்.

     11. துப்பின் அறியாது எதிர்ந்து குறையுற்று - தம் வன்மையால் நினது
வலியை அறியாமல் நின்னோடு மாறுபட்டுத் தோற்று.

     12. நின்னுடைய பகைவர் நினக்கு அடங்கித் திறைகளைத் தருவராயின்.
13. நின்னிடத்தினின்றும் நீங்கும்படி நின் சினம் தணியுமோ? நின் கண்ணி
வாழ்க.

     14. பல வேறுவகையவாகிய, பகைவருடைய அகன்ற நாடுகளில்
நெருங்கிய.

     15-6. மலையினிடத்தனவும், கடலிலுள்ளனவுமாகிய பண்டங்களைப்
பலர்க்கும் பகுத்துக்கொடுக்கும் வழி முட்டுப்படாமல், தன்னாட்டைக்
காத்தலாகிய அறத்தை விரும்பி ஒழுகுகின்ற.

     17-9. நாடல் சான்ற துப்பின் நினக்குப் பாடுசால் நன்கலம் தரூஉம் நாடு
பணைத்தோள் புறந்தருதல் கடன் - பகைவர் ஆராய்தல் அமைந்த
வன்மையையுடைய நினக்குப் புகழ்ச்சிமிக்க நல்ல ஆபரணங்களைத் தருகின்ற
நாடுகளை நினது பெருத்த தோள்களில் வைத்துப் பாதுகாத்தல் நின்
கடனாகும்; நாட்டைத் தோளில் வைத்துப் பாதுகாப்பதாகக் கூறுதல் மரபு;
'சிறந்த நல்நாடு செகில்கொண்டு - ஏனையோர் நாட்டிற் சிறந்த நன்னாட்டைத்
தோளிலே வைத்து' (பொருந. 137 - 8, ந.). உரையாசிரியர் வேறு முடிபு
கூறுவர்.

     (பி - ம்.) 1. பகனீடாதிரவு.                (9)