பக்கம் எண் :

185

     (ப - ரை) 2. பலர்தில்லென்புழி, தில் ஒழியிசை.

     4. உரைசால் வேள்வியென்றது யாகங்கள் எல்லாவற்றிலும் பெரியவும்
அரியவுமாக உரையமைந்த வேள்வியென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'உரைசால் வேள்வி' என்று பெயராயிற்று.

     7. களிறு நிலைமுணவுதற்குக் காரணம் இருஞ்சேறாடுதல் (6)

     தாரருந்தகைப்பென்றது ஒழுங்குபாட்டையுடைய ஆண்டு வாழ்வார்க்
கல்லது பிறர் புகுதற்கரிய மாளிகைக் கட்டணமென்றவாறு.

     தார் - ஒழுங்கு. தகைப்பு - 1கட்டணம்.

     8. புறஞ்சிறை - அதன் சிறைப்புறம். 9. எஃகுபடை - கூரிய படை. 10.
பாண்டில் - தேர் பூணும் எருதுகள்.

     8-10. புறஞ்சிறை வயிரியர்க் காணின் ஈமென்றது நம்மை அவர்கள்
காணவேண்டுவதில்லை, நம் மாளிகை மதிற்புறத்து நீயிர் காணினும்
கொடுமினென்றவாறு.

     ஈமென்றது அவ்வீகைத் துறைக்குக் கடவாரை.

     11. அவ்வயினென்றது நின்னூரிடத்தென்றவாறு.

     ஈமென (10) அவ்வயின் ஆனாக் கொள்கையையாதலின் (11) என மாறிக்
கூட்டுக.

     ஆதலின் (11) என்பதனை மழையினும் பெரும்பயம் பொழிதி (18)
என்பதனோடு கூட்டி நின்னூரிடத்து அவ்வயின் ஆனாக்கொள்கையையாய்ப்
போந்தபடியாலே ஈண்டு நின் பாசறையிடத்து மழையினும் பெரும்பயம்
பொழியா நின்றயெனவுரைக்க.

     ஞாயிறு தோன்றியாங்கு மாற்றார் (13) உறுமுரண் சிதைத்த (14) என
முடிக்க.

     நெய்தல் (16) இதழ்வனப்புற்ற தோற்றமொடு (17) பயம்பொழிதி (18)
எனக்கூட்டி, இவன்றன் நிறம் கருமையாக்கி அந்நிறத்தோற்றத்தானும்
மழையோடு உவமமாக்கியுரைக்க.

     பசியுடை யொக்கலை (19) அப்பசியை ஒருவியவெனப் பசி வருவிக்க.

     உலகத்து வேந்தர் பலருளர் (2); அவராற் பெரும்பயன் என்? தகைப்பிற்
(7) புறஞ்சிறை வயிரியர்க்காணின் (8) ஈமென (10) அவ்வயின் ஆனாக்
கொள்கையையாதலின் (11) மழையினும் பெரும்பயம் பொழிதி (18); அதனால்
அண்ணல் (15), தோன்றல் (20), பசியுடையொக்க லொரீஇய (19) பாசறையானே
(20) நின் நோன்றாள் வாழ்த்திக் (14) காண்கு வந்திசின் (15) என மாறிக் கூட்டி
வினைமுடிவு செய்க.

     அதனால் (18) என்பதன் பின் 'அண்ணல்' (15), 'தோன்றல்' (20) என்னும்
விளிகள் நிற்கவேண்டுதலின் மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்பினை வென்றிச்சிறப்பொடு
படுத்துக் கூறியவாறாயிற்று.

     4-5. ஈயவென்றது பாடமாயின், உரைசாலென்றது கூனாம். 'உரைசால்
வேள்வி முடித்த கேள்வி யந்தணர், அருங்கல மேற்ப வீயநீர் பட்டு' என்று
பாடமாகவேண்டும்.

     (கு - ரை) 1-2. வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசினையும்,
பகைவரைக் கொல்லுதலில் தப்பாத வாளையும், அரசுரிமையையும் உடைய


     1தக்க. 137, உரை.