பக்கம் எண் :

207

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்கூறி அவற்குப்
பகைவர்மேல் அருள்பிறப்பித்த வாறாயிற்று.

     (கு - ரை) நீங்காத புது வருவாயையுடைய அகன்ற இடத்தையுடைய
வாயில்.

     2. நீரிலே நின்ற ஆம்பலொடும் நெய்தற்பூவோடும் நெல்லை அறுத்து.

     3. வயலில் தொழில் செய்யும் மகளிர், அவ்விடத்தே இடமில்லாமையால்
மிக நெருங்கிய கடாவிடும் களத்தில்; வெக்கை - கடாவிடும் களம்.

     4. பருமையையுடைய எருமைகளால் உதிர்க்கப்பட்ட மெல்லிய
செல்நெல்லினது; "ஈடுசால் போர்பழித் தெருமைப் போத்தினால், மாடுறத்
தெழித்துவை களைந்து காலுறீஇச், சேடுறக் கூப்பிய செந்நெற் குப்பைகள்"
(சீவக. 59). நெல்லுக்கு மென்மையாவது சோற்றினது மென்மை.

     5. மரக்காலால் அளத்தற்பொருட்டு உறையாகக் குவித்தாற் போல;
"நெல்லின் அம்பண வளவை விரிந்துறை போகிய, ஆர்பதம்" (பதிற்.
66 : 7 - 9)

     4-6. செந்நெல்லுக்குக் குளவி: "கடுப்புடைப் பறவைச் சாதியன்ன பைதற
விளைந்த பெருஞ்செந் நெல்லின்" (பெரும்பாண். 229 - 30)

     6-7. கடுமையாகக் கொட்டுதலையுடைய குளவியினது மிக்க கிளை
தம்மிற் கூடினவாய்த் தூங்கும், செழுமையான கூட்டைக் கலைத்த இளந்துணை
ஆகிய பிள்ளைகளைப்போல. 8. பெருமானே, நின்னோடு மாறுபட்ட பகைவர்
பின் மிக்க துன்பமுற்றனர்.

     1-8. சேரனுக்குக் குளவிக்கூடும் அவன் பகைவர்க்கு இளந்துணை
மகாரும் உவமை.

     9. சினங்கொண்டு புறப்பட்டுப் புடைபெயர்ந்து உலாவி ஊர்களை
நெருப்பு விரும்பி உண்ணச் செய்தலால்: உரைஇ - உலாவி; "போர்க்
குரைஇப்புகன்று கழித்தவாள்" (புறநா. 97 : 1)

     10. போரின்கண்ணே பகைவர் ஊர்களைச் சுடுகின்ற கமழ்கின்ற புகை
திசைகளை மறைப்ப; எரிபரந்தெடுத்தலென்றும், உழபுலவஞ்சியென்றும் இது கூறப்படும்.

     11. மதிலினிடத்தே வெளியே தோன்றாமல் தமது பழியைச் செய்ய
முயல்பவரது; மதில் பின்வரும் கழுவுள் (17) என்னும் தலைவனுடையது.

     12. ஆழ்ந்த இடத்தையுடைய அகழியையுடைய, குறிய படிகளையுடைய
முடக்கறைகளைப்பெற்ற; ஞாயில் - இஃது அம்புகள் வைக்கப் பெற்றிருக்கும்
முடக்கறை; "ஏப்புழை ஞாயில்", "அம்புடை ஞாயில்" (பு. வெ. 86, 118) என்று
கூறப்படும்.

     13. அருமையான மதிலினது காவலைக் கைப்பற்றிக் கொண்டாய்;
தோட்டி - காவல்; 'நீ, உடன்றோர் மன்னெயி றோட்டி வையா"
(பதிற். 25 : 5)

     12-3. அகழிய எயில், ஞாயில் எனத் தனித்தனி இயைக்க.

     13-4. காளைகளொடு கன்றுகளையுடைய பசுவின் மந்தையை நீ
கைப்பற்றித் தருதலால் விருப்பம் மிக்கு; தரீஇ - தர; எச்சத்திரிபு. இது
மன்னுறு தொழிலாகிய வெட்சியில் பாதீடென்னும் துறையாகும்.