பக்கம் எண் :

218

  பொலந்தார் யானை யியறேர்ப் பொறைய
வேந்தரும் வேளிரும் பிறருங் கீழ்ப்பணிந்து
 5




நின்வழிப் படாஅ ராயி னென்மிக்
கறையுறு கரும்பின் றீஞ்சேற் றியாணர்
வருநர் வரையா வளம்வீங் கிருக்கை
வன்புலந் தழீஇ மென்பா றோறும்
அரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்துக்
 10




கள்ளுடை நியமத் தொள்விலை கொடுக்கும்
வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி யறியார் தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடுட னாடல் யாவண தவர்க்கே.

     இதுவும் - அது. பெயர் - தீஞ்சேற் றியாணர் (6)

     (ப - ரை) 5-6. நெல்மிக்கு 1அறையுறு கரும்பென்றது நெல்லின்
கண்ணே அந்நெல்லை நெருக்கி மிக எழுந்தமையானே அறுக்கலுற்ற
கரும்பென்றவாறு.

     இனி, அந்நெற்றான் கரும்பின் மிக எழுந்து அதனை
நெருக்கினமையால் அந்நெல்லிற்கு இடமுண்டாக அறுத்த கரும்பெனினுமாம்.

     6. தீஞ்சேறு - இனியபாகு. யாணரென்றது அத்தீஞ்சேற்றது
இடையறவின்மையை.

     இச்சிறப்பானே இதற்கு, 'தீஞ்சேற் றியாணர்' என்று பெயராயிற்று.

     வளம்வீங்கிருக்கையாகிய (7) மென்பால் (8) எனக் கூட்டுக.

     2மென்பால் - மருதம்.

     பொறைய, நீ (3) புலிகொன்று களிறடூஉம் (1) வயமான் அனையை;
அதனால் (2), வேந்தரும் வேளிரும் பிறரும் நின்னடிக்கீழ்ப் பணிந்து
தமக்குரிய (4) மென்பால்கள்தோறும் இருந்து முன் பணிந்தவாற்றிற்கேற்ப (8)
நின்வழியொழுகாராயின், அவர்கள் (5) வெள்வரகுழுத கொள்ளுடைக்
கரம்பையாகிய (11) வன்பாலிலே கெட்டுப்போயிருந்து ஆண்டு விளைந்த
வெள்வரகு உண்பதன்றித் தாம் பண்டு உண்ணும் (8) செல்நெல்வல்சி
உண்ணக்கிடையாதபடி மிடிபடுகின்றார் (12); தத்தம் நாட்டினை
ஒருங்கு ஆளுதல் அவர்க்கு யாவணது (14) என வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. பெரிய புலியைக் கொன்று பெரிய களிற்றை கொன்று
வீழ்த்துகின்ற, அரிய வரிகளையுடைய சிங்கத்தைப் போல்வாய்.பொறிவயமான்:
"வரிகிளர் வயமான்" (அகநா. கடவுள். 14)

     3. பொலந்தார் யானை: முருகு. 79, 4.

     2-3. பலவாகிய வேற்படையையும், பொன்னாற் செய்த மாலையை
அணிந்த யானைப்படையையும், இயலுகின்ற தேர்ப்படையையும் உடைய
சேரனே. 4 - 5. முடியுடைய அரசரும் குறுநில மன்னரும் மற்றையோரும்
கீழ்ப்பணிந்து நின்வழியிலே வாராராயின்.


     1பொருந. 193.
     2மென்பால்: புறநா. 42 : 18, உரை.