பக்கம் எண் :

223

     10. உயர்ந்த பருக்கைக்கற்களையுடைய மேட்டுநிலத்தில், நீரை
வெளிப்படுத்தற் பொருட்டுத் தோண்டும் குந்தாலி முதலிய ஆயுதத்தையுடைய
கொங்கு நாட்டிலுள்ளாரது (பதிற். 22 : 12 - 5); "பரன்மட் சுவல முரணில
முடைத்த, வல்வாய்க் கணிச்சிக் கூழார் கோவலர்", "பயநிரை சேர்ந்த
பாழ்நாட்டாங்கண், நெடுவிளிக் கோவலர் கூவற்றோண்டிய, கொடுவாய்ப்
பத்தல் வார்ந்துகு சிறுகுழி" (அகநா. 21 : 21 - 2. 155 : 7 - 9)

     11-2. பசுக்கள் பரந்தால் ஒத்த செல்லுதலையுடைய பல யானைகளை
அவன் சேனையிடத்தே காண்பேன்; பதிற். 78 : 14; புறநா. 5 : 2.

     சாடி (9) என்னும் வினையெச்சம் செலவு (11) என்னும் தொழிற்பெயரோடு
இயையும்.

     சேரநாடு யானையில் மிக்கதென்பது, "வேழமுடைத்து மலைநாடு"
(தனிப்.) என்பதனாலும் அறியப்படும். மு. 'பகட்டினாலும் மாவினாலும்
துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கம்' (தொல். புறத். 21, ந.)

     (பி - ம்) 5. தெய்வயாழின்.                (7)

 

78.



வலம்படு முரசி னிலங்குவன விழூஉம்
அவ்வெள் ளருவி யுவ்வரை யதுவே
சில்வளை விறலி செல்குவை யாயின்
வள்ளிதழ்த் தாமரை நெய்தலொ டரிந்து
 5




மெல்லியன் மகளி ரொய்குவன ரியலிக்
கிளிகடி மேவலர் புறவுதொறு நுவலப்
பல்பய னிலைஇய கடறுடை வைப்பின்
வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி
 10




பேஎ மன்ற பிறழநோக் கியவர்
ஓடுறு கடுமுரண் டுமியச் சென்று
வெம்முனை தபுத்த காலைத் தந்நாட்
டியாடுபரந் தன்ன மாவின்
ஆபரந் தன்ன யானையோன் குன்றே.

     துறை - விறலி யாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது.பெயர்
- பிறழநோக் கியவர்
(10)

     (ப - ரை) 2. அவ்வெள்ளருவி - அழகிய வெள்ளருவி. உவ்வரை
யென்றது உவ்வெல்லையென்றவாறு. அதுவென்பது அம்மலை யென்னுஞ்
சுட்டு. வெள்ளருவியையுடைய அதுவெனக் கூட்டுக.

     மகளிர் இயலி (5) நெய்தலொடு தாமரையரிந்து (4) கிளிகடி மேவலர்
புறவுதொறும் நுவலப் (6) பல்பயன் நிலைஇய கடறு (7) எனக்கூட்டி, கிளிகடி
மகளிர் நில அணுமையானே மருதநிலத்திலே சென்று நெய்தலொடு
தாமரையரிந்து பின் கிளிகடி தொழிலை மேவுதலையுடையராய்ப் புறவின்
புனங்கள்தோறும் கிளிகடி பாடலை நுவலப் பல்பயங்களும் நிலை பெற்ற
முல்லை நிலமென உரைக்க.