பக்கம் எண் :

224

     வைப்பிற் (7) றகடூர் (9) எனக் கூட்டுக.

     ஆடவர்காக்கும் (8) இறும்பு (9) எனக் கூட்டுக.

     9. வில்பயில் இறும்பு - படைநிலை.

     10. பிறழநோக்கியவரென்றது தம் சினமிகுதியானே மாற்றார் படைத்
தோற்றத்தினை நெறியால் நோக்காது எடுத்தும் படுத்தும் 1கோட்டியும்
பலபடப் பிறழநோக்கும் பகைவராகிய பல்லியமுடைய ரென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'பிறழநோக்கியவர்' என்று பெயராயிற்று.

     மாவினொடு (13) வென ஒடு விரித்து, முனைதபுத்த காலை மாவினொடு
(12) ஆபரந்தன்ன யானையோன் (14) எனவுரைக்க.

     சில்வளைவிறலி, செல்குவையாயின், (3), யானையோன் குன்று (14)
உவ்வெல்லையில் வெள்ளருவியுடைய அது என மாறிக் கூட்டி வினை
முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-3. சிலவாகிய வளையை அணிந்த விறலி, நீ சேரன்
பாற் செல்வாயாயின், வெற்றியுண்டாகின்ற முரசொலியைப் போல ஓசை விளங்குவனவாகி மலையினின்றும் கீழே விழும் அழகிய வெள்ளிய
அருவிகளையுடைய உவ்வெல்லையிடத்தேயுள்ளது.

     சில்வளை விறலி: பதிற். 40 : 21, 57 : 6.

     4-5. மென்மையான இயல்பையுடைய மகளிர் அசைந்துசென்று
நடந்து மருதநிலத்தேயுள்ள வளவிய இதழ்களையுடைய தாமரைப்பூவை
நெய்தற்பூவோடு அறுத்து.

     மகளிர் இயலி அரிந்து என மாற்றிப் பொருள்கொள்க.

     6. காட்டிற் புனத்தினிடத்தே கிளியைக்கடிதலை விரும்புதலையுடையராகி
அதற்குரிய பாட்டைப்பாட. 4 - 6. இவ்வடிகளால் மருதமும் முல்லையும்
கலந்திருத்தல் கூறப்பட்டது.

     7. பல பயன்களும் நிலைபெற்ற முல்லைநிலத்தின் ஊர்களையுடைய.

     8-9. வெல்லும் போரைச் செய்யும் வீரர் மறத்தை விரும்பிப் பாதுகாக்கும்,
விற்படைகள் நிலைபெற்ற காவற்காட்டையுடைய தகடூரை அழித்து. ஆடவர்
காக்கும் இறும்பு: பு. வெ.. 63.

     10. தெளிவாக, தம்பகைவர் படைத்தோற்றத்தை நேரே நோக்காமல்
எடுத்தும் படுத்தும் வளைத்தும் பலபட மாறுபட நோக்கும் அச்சத்தையுடைய
பார்வையையும் வாத்தியங்களையும் உடைய பகைவரது.

     11. தம்மோடு எதிர்த்தார் ஓடுதற்குக் காரணமான மிக்க மாறுபாடு
அழியும்படி படையெடுத்துச் சென்று.

     12. கொடிய போரிலே கெடுத்த காலத்தில் தம்முடைய நாட்டில்.

     13-4. ஆடுகள் பரந்தாலொத்த குதிரைகளோடு, பசுக்கள் பரந்தாலொத்த
யானைகளையுடையோனது குன்று; மாவினொடு என உருபுவிரிக்க.

     குன்று (14) உவ்வரையது (2) என முடிக்க.

     (பி - ம்.) 4. இதட்டாமரை. 9. உறுப்பிற்றகடூர். 10. பேயமன்ற. (8)


     1கோட்டி - வளைத்து; தடங்கண் கோட்டித், தோண்முதற் பசலை
தீரத்தோன்றலைப் பருகு வார்போல்" (
சீவக. 470)