பக்கம் எண் :

227

     8. அப்படிப்பட்ட நின்குணங்கள் அளத்தற்கரியை; அதனால், குரை:
அசைச்சொல்.

     9-10. நின்னொடு இணங்கி வருதலிலராகித் தம்முடைய நாடுகளில்
தங்கியிருந்து, பின்பு போர்க்களத்தே நின்வன்மைகண்டும், கொல்லுகின்ற
களிறாகிய பட்டத்து யானையின் பிடரிக்கழுத்துப் பொலி வழிய; "யானை
யெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச், சேனைத் தலைவராய்ச் சென்றோரும்"
(நாலடி. 3) என்பதற்கு மாறான நிலையைக் கூறியபடி.

     11-2. வில்லின் நாணையறுத்து நினது செங்கோலின்கீழ் அடங்கி
வாராத, முன்புவெல்லும் போரைச்செய்த அரசருடைய முரசின் கண்ணைக்
கிழித்து. குலை - நாண்; "குலையிழி பறியாச் சாபத்து வயவர்" (பதிற். 24 : 12)

     12-4. அவருடைய பட்டத்து யானை வருத்தத்தாற் கதறும்படி
அதனுடைய கொம்பை வெட்டி அதனால் இயற்றப்பட்ட
தெய்வத்தன்மையுடைய இயல்பைப்பெற்ற கட்டிலின்மேலிருந்தல்லது;
புறம்படினல்ல தென்பதிலுள்ள அல்லதென்பதை இருந்தென்பதனோடும்
கூட்டுக.

     15. தாம் தும்பைப் பூவைச் சூடியதற்கேற்ப நின்று பொருகின்ற
ஆற்றலையுடைய உடலானது அசையும்படி வந்த ஓய்வினையுடைய.

     16. உயிர்நிலையினின்றும் உண்டான இரத்தம் பலியாக அளிக்கப்படும்
பொருள்மேற் பட்டாலல்லாமல். "அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதி"
(பதிற். 11 : 8)

     17-8. நிவேதனமாக அளிக்கப்படும் பொருளை ஏற்றுக் கொள்ளாத
அச்சம் வருகின்ற முறைமையையுடைய துர்க்கை வாழும் அயிரை மலையைப்
போல நிலைபெற்று. அயிரைமலையிலுள்ள துர்க்கை சேரர்களால் வழிபடப்
பெற்றமை; பதிற். 3-ஆம் பத்துப்பதிகம், 8, உரை: "கண்ணுதலோன் காப்பக்
கடன்மேனி மால்காப்ப, எண்ணிருதோ ளேந்திழையாடான் காப்ப" (தொல்.
புறத்.35, ந. மேற்.) என்னும் புறநிலைவாழ்த்துச் செய்யுளிலும் துர்க்கை
வழிபடப் பெற்றமை காண்க.

     19. பெருமானே, நின்னுடைய புகழ்கள் அழிவில்லாமல் விளங்குக.

      18-9. நின்புகழ் அயிரையின் விளங்குக என்றாராயினும் சேரனை
வாழ்த்துதலே கருத்தாகக் கொள்க. (பதிற். 70 : 26 - 7)

     மலைபோல் நிலைபெறுக வென்றல்: "பூமலி நாவற் பொழிலகத்துப்
போய்நின்ற, மாமலைபோன் மன்னுக நீ" (பு. வெ. 226)

     (பி - ம்) 4. பிறந்த. 8. அனையையளப் 9. வாரார்நின்னிலத் தெளிந்து.
                                                       (9)

 

80. வான்மருப்பிற் களிற்றியானை
மாமலையிற் கணங்கொண்டவர்
எடுத்தெறிந்த விறன்முரசம்
கார்மழையிற் கடிதுமுழங்கச்