பக்கம் எண் :

244

     கபிலன் (13) என்ற தொடைக்கேற்ப, நவிலப்பாடிய (12) என்பதூஉம்
பாடம்.

     இளஞ்சேரலிரும்பொறை, சென்னியர்பெருமானுடைய (3) நாடுகள்
பலவற்றையும் எமக்குக் கொண்டுதந்து (1) அச்சென்னியர்பெருமானை (3)
எம்முன்னே பிடித்துக்கொண்டுவந்து தம்மினெனத் தம் படைத் தலைவரை
ஏவச் சென்னியர்பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட
வெள்வேல் செல்வக்கடுங்கோவாழியாதனென்பவன் (4) நாடு காணெடுவரையின்
(7) நாண்மகிழிருக்கைக்கண்ணே (8) தன் முன்றிணை முதல்வரைப்போல (5)
அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய (9) மறம்புரி கொள்கையைப் (10)
பாடின (12) கபிலன் பெற்ற ஊரினும் பல (13) என மாறிக்கூட்டி வினை முடிவு
செய்க.

     சென்னியர்பெருமானைத் தம்மென மாறவேண்டுதலின் மாறாயிற்று.

     இனிப் பிறவாறு மாறிப் பொருளுரைப்பாரும் உளர்.

     இதனாற் சொல்லியது அவன் முன்னோருடைய கொடைச்சிறப்பொடு
படுத்து அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-4. சேரன் தன் படையாளருக்குக் கூறியது.

     1. நல்ல மரங்கள் நிறைந்த நாடுகள் பலவற்றை எமக்குக் கொண்டு
தந்து. 2. பொன்னாற் செய்யப்பட்டு விளங்கும் அலங்கரிக்கும் தொழில்
விளங்கும் பேரணிகலங்களை அணிந்த. 4. தம்: தாருமென்பதன் விகாரம்
(பொருந. 101, ந.)

     3-4. எம்மொடு பொருந்தாத மேற்கோளையுடைய சோழர் தலைவனை
எம்முன்னே தாருங்களென்று நீ சொல்ல, நின்படையாளர் முன் சோழன்
படையாளர் தோற்றுப் போட்ட வெள்ளிய வேல்கள். ஒன்னா:
ஒன்றாவென்பதன் மரூஉ. முத்தை : முந்தை என்பதன் வலித்தல் விகாரம்;
“முத்தை முதல்வி யடிபிழைத் தாயெனச், சித்திர முரைத்த விதூஉந்திப்பியம்”
(மணி. 19 : 13-4). படையைப் போடுதல் தோல்விக் குறிப்பு.

     5. தனக்கு முன்னிருந்த தன் குலத்து முன்னோர்களைப் போல நிலை
பெற்று (பதிற். 72 : 4). மு. பதிற். 14 : 20.

     நின்று (5) பணிய வயங்கிய (9) கொள்கை (10) என இயையும்.

     7. நாடுகாணெடுவரை : “நாடுகா ணனந்தலை” (மலைபடு. 270); பெருங்.
2. 10 : 70 - 74. 6 - 7. இனிய நீரையுடைய சுனைகள் நிலை பெற்ற
மலைவளத்தையுடைய, பெரிய பக்கங்களைப் பெற்ற சிகரங்கள் பல
ஆகாயத்தே விரிந்த, தன்மீது ஏறி நாடுமுழுவதும் காணக்கூடிய உயர்ச்சியைப்
பெற்ற நன்றாவென்னும் மலையிடத்தில்.

     8. சூடப்படாத நறவினையுடைய. விடியற்காலத்தே யிருக்கும் ஓலக்க
விருப்பில் ; சூடாநறவு : மதுவிற்கு வெளிப்படை ; “சூடாநறவொடு காமம்
விரும்ப” (பரி. திரட்டு. 1 : 56)

     9-10. அரசவைகள் பணியும்படி அறத்தையே விரும்பி விளங்கிய,
வீரத்தை விரும்பிய கொள்கையை, விளங்குகின்ற செவ்விய நாவினாலும்,

     நாவிற் (10) பாடிய (12) என இயையும்.

     11. இழிவு மிகாத கவலையில்லாத மனத்தாலும் ; உவலை - இழிவு:
“உவலைச் சமயங்கள்” (திருவா.) “சிறுமனிச ருவலையாக்கை”
(திருவாய்மொழி 1. 5 : 8)