பக்கம் எண் :

246

     இதனாற் சொல்லியது அவன் வன்மைமென்மைச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-3. நிலத்திலே உறுதல் மிக்க இரத்தத்தால் போர்க்களம்
புலால் நாற்றம் வீசும்படி பகைவர் சேனையை கொன்று போரிடத்தில்
வஞ்சியாது எதிர்நின்று வென்ற கொடிய திறலையுடைய பெரிய கையையும்
வெற்றியைத் தரும் வேலையும் உடைய சேரனென்று உலகத்தார்
சொல்லுதலால் அச்சம் பொருந்துதல் வர.

     4. வெம்மையையுடைய ஆண்மகனென்று முன்பு எண்ணியிருந்தேன்:
அஃது இப்பொழுது நீங்கிற்று ; மன் : கழிவுப்பொருளில் வந்தது.

     5. நல்ல புகழை நிலைநாட்டும்பொருட்டு, அகன்ற இடத்தையுடைய
உலகத்தில்.

     6-8. பொருளில்லாதவருடைய துன்பம் நீங்கும்படி பொருளைக்
கொடுக்கும், தருமத்தையே ஆராய்தல் மிக்க அன்பையுடைய மனத்தால்
பாடுவோரைப் புரத்தலில் வல்லவன்; பிறரை வெல்லுதலைப்பெற்ற
ஒழுக்கத்தையுடைய தலைவன் ; ஆடு - வெற்றி.

     9. ஓடக்கோல் நிலைபெறுதல் இல்லாத ஆழமான இடத்தின்கண்
ணாயினும், “கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்” (அகநா. 6 : 6)

     10-11. நீரிற் பாய்ந்த மகளிர் ஆடுதலால், அவர் காதினின்றும் கழன்ற
பொன்னாற் செய்த அழகிய குழை யென்னும் அணி மேலே தெரிதற்கு
இடமான ; புனலாடு மகளிர் குழை கழலுதல் : “வண்டலாயமொ டுண்டுறைத்
தலைஇப், புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை” (பெரும்பாண். 311 - 2 )

     12-3. சந்தனமரம் வருகின்ற வானியென்னும் ஆற்றுநீரினும் நிச்சயமாகப்
பொறையன் இனிய தண்ணிய மென்மையை யுடையான். ஆறு சந்தனமரம்
கொணர்தல் : “அகிலு மாரமும், துறைதுறை தோறும் பொறையுயிர்த்
தொழுகி “ (பொருந. 238 - 9)

     நீரினும் இனிய சாயல் ; ஈர முடைமையி னீரோ ரனையை” (பதிற்.
90 : 14) ; “நீரினும் இனிய சாயற், பாரி” (புறநா. 105 :7 - 8. குறிப்புரை)

     (பி - ம்) 2. அமர்கடந்த.                     (6)

87.



சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புனல்
ஒய்யு நீர்வழிக் கரும்பினும்
 5
பல்வேற் பொறையன் வல்லனா லளியே.

     துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர்
- வெண்டலைச் செம்புனல்
(3)

     (ப - ரை) 2. பூழில் - அகில். 3. முன்னியவென்றது ஈண்டுப்
பெயரெச்சம்.