பக்கம் எண் :

258

     14. அன்புடைமையினால் நீரோடு ஒத்தனை. 15. நின் சூழ்ச்சி
அளப்பதற்கு அருமையின் பெரிய ஆகாயத்தைப் போன்றனை (புறநா.
2 : 2-7); ‘’விசும்பி னன்ன சூழ்ச்சி’’ (தொல்.உவம.6,பேர்.மேற்)

     16. என்றும் வறியோர் தாமே கொள்ளச் செல்வம் குறைபடாமையால்
மேகம் முகந்துகொள்ளக் குறைபடாத கடலைப்போன்றாய் (பதிற். 45:19 - 22,
88:26-7; மதுரைக்.424-5)

     வீரரும் வறியோரும் கொள்ளவும் செல்வம் குறையாமை: ‘’கன்றும்
வயவ ரினங்கள் பலகவர்ந்தும், என்றும் வறிஞ ரினங்கவர்ந்தும் - ஒன்றும்
அறிவரிதா நிற்கு மளவினதா லம்ம, செறிகதிர்வேற் சென்னிதிரு’’ (தண்டி. 72,
மேற்)

     17-8. பல நட்சத்திரங்களுக்கு நடுவே சந்திரனைப்போலப் பொலிவு
பெற்ற சுற்றத்தோடு விளங்கித் தோன்றுதலை யுடையை. பூத்த சுற்ற மென்றது
இயலிசை நாடகங்களாலும் இனிய வார்த்தைகளாலும் இனிய மகிழ்ச்சியைச்
செய்யும் மகளிர் திரளை; கலை நிறைந்தமை பற்றிச் சேரனுக்குத் திங்கள்
உவமையாயிற்று (சிறுபாண். 220, ந); ‘’பன்மீ னடு வட்டிங்கள் போலவும்,
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி ‘’ (மதுரைக்.769-70);
‘’கோன்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்றமொத்தே’’ (சீவக.882)

     19. அச்சம் பொருந்திய இயல்பினையுடைய அயிரைமலையில்
எழுந்தருளியிருக்கும் துர்க்கையை வழிபட்டும். 20. கடலின் வன்மையைத்
தாழ்க்கவேண்டி வேலை ஏற்றி நடப்பித்தும்.

     21-2. மலையிலுள்ளனவும், மருத நிலத்திலுள்ளனவும் ஆகிய
அரண்களைக் கைப்பற்றி, மாறுபட்டோருடைய வன்மையைக் கெடுத்தும்.
நிலம் - மருதநிலம்; ‘’அகநாடு புக்கவ ரருப்பம் வௌவி’’ (மதுரைக். 149)

     23. பெயர் பொருள் என்னும் பொருளில் வந்தது (பதிற். 21:1, உரை);
முருகு. 269, ந.; பெருங். 1. 35:113, 3. 10:18.

     23-4. அவ்வரண்களிலே பெற்ற பெருமையுள்ள பொருள்களைப்
பரிசில் பெறுவார் பலருடைய கையிலே இருத்திய, வெற்றியால் வரும்
செல்வத்தையுடைய வலியோருடைய வழித்தோன்றலே.

     25. சர்க்கரைக் கட்டியோடு கூட்டின அவரை முதலியவற்றின்
விதையாகிய உணவினையுடைய கொங்கர்களுக்குத் தலைவனே.

     26. கள்ளாகிய உணவினையுடைய குட்டநாட்டிலுள்ளார்க்குத் தலைவனே.
மட்டம் - கள்; ‘’தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்’’ (பதிற். 42 : 12);
‘’மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன, இட்டுவாய்ச் சுனைய’’ (குறுந்.
193 : 1 - 2)

     27. போரில் முதுகு காட்டி ஓடினார் மேல் செல்லாத இனையான
தோள்களையுடைய பூழிநாட்டார்க்குக் கவசம்போன்றாய் (மதுரைக். 177,ந.)

     பூழியர் மெய்ம்மறை: பதிற். 73 : 9.

     28. ஒலிக்கின்ற நீர்ப்பரப்பினையுடைய மரந்தை நகரத்திலுள்ளாருக்குத்
தலைவனே. மரந்தை: ‘’குட்டுவன் மரந்தை’’ (குறுந். 34 : 6); ‘’குரங்குளைப்
புரவிக் குட்டுவன், மரந்தை யன்னவென் னலந்தந்து சென்மே’’ (அகநா.
376 : 17 - 8). பொருநன் - தான் பிறர்க்கு உவமிக்கப் படுவான். 29 :
பதிற்
. 15 : 9.