பக்கம் எண் :

261



 
15
அருந்திறன் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறற் பூதரைத் தந்திவ ணிறீஇ
ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு
மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்
இன்னிசை முரசி னிளஞ்சேர லிரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப்பாட்டு.

     அவைதாம்: நிழல்விடு கட்டி, வினை நவில் யானை, பஃறோற்றொழுதி,
தொழினவில்யானை, நாடுகாணெடுவரை, வெந்திறற்றடக்கை, வெண்டலைச்
செம்புனல், கல்கால்கவணை, துவராக்கூந்தல், வலிகெழு தடக்கை: இவை
பாட்டின் பதிகம்.

     பாடிப் பெற்ற பரிசில்: 1மருளில் லார்க்கு 2மருளக் கொடுக்கவென்று
உவகையின் முப்பத்தீராயிரம் காணம்கொடுத்து அவர் அறியாமை ஊரும்
மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு
ஆகா 3அருங்கல வெறுக்கையோடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக்
4காப்புமறம் தான்விட்டான் அக்கோ5.

     குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.

     (கு - ரை) 3. பகைவர் அஞ்சுதல் வருகின்ற சேனையோடு
கொடுமையுறச்செய்து புறப்பட்டு.

     4. சோழனும் பாண்டியனுமாகிய இரண்டு பெரிய அரசரோடு விச்சி
என்னும் குறுநில மன்னன் இறக்கும்படி; விச்சி - ஒருமலை; அதனையுடைய
தலைவனுக்கு ஆயிற்று; ‘’வில்கெழு தானை விச்சியர் பெருமகன், வேந்தரொடு
பொருத ஞான்றை’’ (குறுந். 328 : 5 - 6) என்பதிற் குறிக்கப்பட்டது இப்போர்
போலும். விச்சி: ‘’விளங்கு மணிக் கொடும்பூண் விச்சிக்கோவே’’ (புறநா.
200 : 8) 5. பகைவர் புகுதற்கு அரிய காவற்காட்டையுடைய
மலையிடத்தமைந்த ஐந்து மதில்களை அழித்து.

     6. பொத்தி என்னும் புலவரை ஆண்ட கோப்பெருஞ் சோழனையும்;
‘’கோழியோனே கோப்பெருஞ் சோழன், பொத்தினண்பிற் பொத்தியோடு
கெழீஇ, வாயார் பெருநகை வைகலு நக்கே’’ (புறநா. 212 : 8 - 10)

     7. வித்தையென்னும் புலவரை ஆண்ட இளம்பழையன் மாறனையும்;
வித்தை: ஒரு புலவரது பெயர்போலும்; கல்வியுமாம்.

     8. தான்கூறிய சபதம் நிறைவேறும்படி வென்று; வைத்த வஞ்சினமென்பது,
‘’இன்னது பிழைப்பினிதுவாகியரெனத், துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம்’’
(தொல். புறத். 24) என்பதனாலும், ‘தான் செய்யக்கருதியது பொய்த்துத்
தனக்குவருங் குற்றத்தால் உயிர் முதலியன துறப்பனென்றல்’ என்னும் அதன்
உரையாலும் அறியப்படும்.


     1மருள் - மயக்கம்.
     2மருள - ஆச்சரியமடையும்படி
     3அருங்கல வெறுக்கை - அரிய ஆபரணமாகிய செல்வம்.
     4காப்புப்புறமென்றிருப்பிற் சிறக்கும். புறம் - கொடை; சிறுபுற மென்றது
சிறுகொடையை’ (7-ஆம் பதிகம் உரை). காப்புப்புறம் - காத்தற்குரிய கொடை.

     5கண்ணபிரான் குசேலருக்குச் செய்த உதவி இங்கே நினைவிற்கு
வருகின்றது.