பக்கம் எண் :

262

     9. வஞ்சியென்னும் பெயரையுடைய பழமையான ஊரிலே அவர்களை
வென்று கைக்கொண்ட பொருள்களைக் கொண்டுவந்து அவற்றைப் பிறர்க்குக்
கொடுத்து. 10. மந்திரங்களால் வழிபட வேண்டிய முறைப்படியே தெய்வங்களை
வழிபட்டு.

     11. மெய்ம்மை பரவிய அமைச்சர்க்குரிய இயல்புகளையுடைய மையூர்
கிழானென்னும் அமைச்சனை. கிழானென்பதனால் இவர் வேளாளரென்பது
அறியப்படும்.

     12. குற்றம் நீங்கிய கேள்விச் செல்வத்தையுடைய தன் புரோகிதனைக்
காட்டிலும் அறநெறியை அறிபவனாகச் செய்து. புரோசு மயக்கி: பதிற். 7-ஆம்
பதிகம்.

     13-4. அரிய திறலையுடைய இயல்பினைப்பெற்ற பெரிய நாற்சந்தியில்
விரும்பி இருக்கும் கொடிய திறலையுடைய பூதங்களை இவ்வுலகத்தே
கொண்டுவந்து நிறுத்தி. சதுக்கமர்ந்த பூதமென்றது அமராபதியிலுள்ள
பூதங்களை. சதுக்கு - சதுக்கம்; நாற்சாந்தி:

     15. நூல்களில் ஆராயப்பட்ட இயல்பினையுடைய களவேள்வியாற்
சாந்தியைச் செய்து. சாந்தி வேட்டு: ‘களவேள்வியாற் சாந்திசெய்து
விழவெடுத்தலானே’ (சிலப். உரைபெறுகட்டுரை: அடியார்.)

     14-5. ‘சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து, மதுக்கொள் வேள்வி
வேட்டோ னாயினும்’’ (சிலப். 28 : 147 - 8)

     16-7. நிலைபெற்ற உயிர்களைக் காப்பாற்றிய குற்றம் இல்லாத
செங்கோலையும், இனிய ஓசையையுடைய முரசினையும் உடைய
இளஞ்சேரலிரும்பொறையை.

     (பி - ம்) 1. வம்மையூர்கிழான், மேயூர்கிழான்.

ஒன்பதாம் பத்து முற்றிற்று.