பக்கம் எண் :

30

  பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படையே ருழவ பாடினி வேந்தே
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின்
 20 முன்றிணை முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே.

     துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணமும்,
சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர் - சான்றோர்
மெய்ம்மறை (12)

     (ப - ரை) 1. பூதங்கள் ஐந்தையும் எண்ணாது தீயை ஒழித்தது
மேல் விளக்கத்துக்கு உவமமாக (4) எண்ணுகின்றவற்றோடு கூட்டவேண்டி
யென்பது.

     3. ஈண்டுக் கோளென்றது விளக்கமில்லா இராகுகேதுவென்னும்
இரண்டும் நீக்கி நின்ற ஏழினும், சிறப்புப்பற்றி வேறு எண்ணப்பட்ட திங்கள்
ஞாயிறென்னும் இரண்டும் நீக்கி, நின்ற ஐந்தையுமென்பது.

     4. ஐந்தென்று தொகை கூறியது நாள்கோளென்னும் அவற்றைத்
1தொகைக்கூற்றின் ஒரோவொன்றாக்க வென்பது.

     11. எழுமுடியென்பது ஏழு அரசரை வென்று அவர்கள் ஏழுமுடியானுஞ்
செய்ததோர் ஆரமாம்.

     12. நோன்புரித் தடக்கையென்றது வலி 2பொருந்துதலையுடைய
தடக்கையென்றவாறு.

     ஈண்டுச் சான்றோரென்பது போரில் அமைதியுடைய வீரரை.
மெய்ம்மறை-மெய்புகு கருவி; மெய்ம்மறையென்றது அச்சான்றோர்க்குமெய்புகு
கருவிபோலப் போரிற் புக்கால் வலியாய் முன்னிற்றலின்.


     
இச்சிறப்பு நோக்கி இதற்கு, 'சான்றோர் மெய்ம்மறை' என்று
பெயராயிற்று.

     13. வானுறைமகளிர் நலன் இகல் கொள்ளுமென்றது வானர மகளிர்
அழகிற்கு அவளையொப்பேன் யானே யானேயென்று தங்களில்
மாறுகொள்ளுமென்றவாறு.


     1நாளும் ஏனைக் கோளும் பலவாக இருப்ப அவற்றை ஒவ்வொன்றாக
நிறுத்தித் திங்கள் முதலியவற்றோடு சேர்த்து ஐந்தென்று எண்ணியது
அவற்றின் தொகுதியைக் கருதியதென்றபடி.

     2புரித்தடக்கையென ஒற்று மிகுதலின் முதனிலைத் தொழிற் பெயராக்கி,
பொருந்துதலையுடைய தடக்கையென உரை வகுத்தார்.