பக்கம் எண் :

39

     இனி, இடையில் விலங்கலென்றதனை மாற்றார் படையை
விலங்குதலையுடையவென்றாக்கி, முன்னின்ற கொடுங்கணிஞ்சியென்ற
தொன்றுமே மதிலதாக, ஐயவி தூக்கிய மதிலென்றதனை ஆகுபெயரான்
ஊர்க்குப் பெயராக்கி, நாடுகண்டன்ன ஊரென மாறியுரைப்பாரும் உளர்.

     13. 1உள்ளலும் உரியளென்றது யான் குறித்த நாளளவும்
ஆற்றியிருக்கவென்ற நின்னேவல் பூண்டு நின்னை உள்ளாதிருத்தலேயன்றி
நீ குறித்த நாளுக்கு மேலே நீட்டித்தாயாகலின் (9) நின்னை நினைந்து
வருந்துதலும் உரியளென்றவாறு.

     14 - 5. தாவின்று திருமணி பொருத திகழ்விடு பசும்பொனென்றது
வலியில்லையானபடியாலே அழகிய மணிகளொடு பொருத ஒளிவிடுகின்ற
பசும்பொனென்றவாறு.

     ஈண்டுத் 2தாவென்றது வலி; பொன்னுக்கு வலியாவது உரனுடைமை.
இன்றென்பதனை இன்றாகவெனத் திரித்து இன்றாகையாலெனக் கொள்க.
என்றது ஒளியையுடைய மணிகளொடு பொரவற்றாம் படி ஓட்டற்ற
ஒளியையுடைய பசும்பொனென்றவாறு.

     15 - 6. பூண், பசும்பொன் வயிரமொடு உறழ்ந்து சுடர்வரவெனக்
கூட்டி, பூணான பசும்பொன் தன்னிடை அழுத்தின வயிரங்களோடு மாறுபட்டு
விளங்கவென உரைக்க.

     18. புரையோரென்றபன்மையாற் காதன்மகளிர் பலரெனக் கொள்க.

     17 - 8. அகலப் பாயலென இருபெயரொட்டாக்கி, அத்தை
3அல்வழிச்சாரியை என்க. துயிலினிய பாயலென உரைக்க.

     அகலத்தை மகளிர்க்குப் பாயலெனச் சிறப்பித்தமையான் இதற்கு,
'துயிலின் பாயல்
என்று பெயராயிற்று.

     19. பாலுங் கொளாலும் வல்லோயென்றது அவ்வகலப்பாயலை
4வேற்றுப்புலத்து வினையில்வழி நின்மகளிர்க்கு நுகரக்கொடுத்தற்கு
நின்னிடத்தினின்றும் பகுத்தலையும், வினையுல்வழி அம்மகளிர்பால்நின்றும்
வாங்கிக் கோடலையும் வல்லோயென்றவாறு.

     பாசறைக்கண் நீ (8) நீடிணையாகலின் நின்னைக் காணவந்தேன் (9);
நின் தேவியாகிய அசைநடை நின்னை நினைத்தலும் உரியள் (13); ஆனபின்பு
அவள் பாயல்வருத்தத்திற்கு உய்யுமோ (14)? உய்யாளன்றே; தோன்றல்,
அகலப் (17) பாயல் (18) பாலும் கொளாலும் வல்லோய், நின் (19) மார்பு மிக
அவளை வருத்திற்றுக்காண் (20); 5 நீ அவள்பாற் கடிதெழுகவென
வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்பும் குலமகளோடு நிகழ்த்த
இன்பச்சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று.

     (கு - ரை) பாசறைக்கண் தங்கியிருந்த அரசன்பால்
மாதேவியினிடமிருந்து தூது சென்றோன் கூற்றாக அமைந்தது இச்செய்யுள்.


     1உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை.

     2தா - கேடு எனலுமாம்.

     3அல்வழிச்சாரியை - வேண்டாவழிச்சாரியை.

     4வேற்றுப் புலத்து வினை - பகைவர் நாட்டிற் சென்று செய்யும் போர்.

     5இக்கருத்து குறிப்பாற் கூறப்பட்டது.